4.9.16

உறுத்தல்

     அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. வேகமாய் அவ்விடத்தை விட்டு அகன்றார் சேஷையா. நேற்று நடந்தது கனவென்று யாராவது சொன்னால் நன்றாய் இருக்குமெனப்பட்டது.  
     மருத்துவமனையில் பிச்சியைப் போல் அமர்ந்திருந்த மருமகளைப் பார்க்கும் போது இந்த விபத்தில் நித்திலனுக்கு பதில், தான் சிக்கியிருக்கலாமே என்ற பரிதவிப்பு நூறாவது முறையாக எழுந்தது. மூட்டுவலியால் அருகில் இருந்த மேம்பாலத்தில் ஏறவும் சிரமப்பட்டு சற்று தூரத்தில் இருந்த சிக்னலை நோக்கி நடக்கவும் சோம்பல் பட்டு, சாலையை இடையில் கடக்கத் துணிந்ததை எண்ணி மீண்டுமொரு முறை தன்னை வெறுத்தார். வாகனம் வருவதற்குள் கடந்து விடலாம் என்று எண்ணியது பிசகாய்ப் போனது. பாதி சாலையைக் கடந்துக் கொண்டிருக்கும் போது தான் வளைவில் திரும்பிய கார் கண்ணில் பட்டது. நித்திலனும் தன்னுடன் வந்துவிடுவான் என்றெண்ணி வேகமாய் சாலையைக் கடந்தார் அவர். காரோட்டி இவர்களைப் பார்த்து பதறிப் போய் ஒலியெழுப்பியதில் நித்திலன் அரண்டு பின்னே நகர்ந்துவிடுவான் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை. அடுத்ததாய் வந்த பேருந்து ஓட்டுனரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. விளைவு… இப்போது நித்திலன் அவசர சிகிச்சைப் பிரிவில்! சாலையை கண்டபடி கடக்காதீர்கள் என்று தலையிலடித்துக் கொள்ளும் அரசாங்கத்திற்கு இருக்கும் அக்கறையில், ஒரு விழுக்காடு கூட தனக்கு இல்லையே என்று தன்னிரக்கத்தில் கரைந்துக் கொண்டிருந்த போது ‘ஐயோ!’வென கத்திக்கொண்டு உள்ளே ஓடினாள் மருமகள்.
     காரியத்தின் போது கூட யாரும் அவரை ஏனென்று ஒரு வார்த்தைக் கேட்கவில்லை. வந்தவர்களும் இங்கிதம் தெரிந்து கையைப் பிடித்து அழுத்திவிட்டு சென்றார்கள். அவரால் இந்த மௌனத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. யாராவது தன்மீது குற்றம் சுமத்தினால் தன் துக்கத்தை வெளிப்படுத்தவாவது வாய்ப்பு கிடைக்குமென தோன்றியது.
அன்று இரவு சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்த மகனிடம் சென்றார். இவர் வந்ததைக் கூட கவனிக்கவில்லை அவன்.
“அப்பாவை மன்னிச்சிடுப்பா!” என்று அவர் சொன்ன போது பதறிப் போனான்.
“என்னப்பா, நீங்க!”
“நேரம் சரியில்லை, நீங்க என்ன பண்ணுவீங்க!”
‘அந்த நேரம் என் மூலமாகவா வரவேண்டும்!’ என்று அவர் மனம் மேலும் நொந்தது.
“அப்பா! இங்கிருந்தா அவ நித்திலனை நினைச்சி அழுதுகிட்டே இருப்பா! நாம பேசாம வேற வீட்டுக்கு போயிடலாம்….”  என்று சில நாட்கள் கழித்து மகன் சொன்ன போது அவரால் மறுத்துப் பேச முடியவில்லை. அவர்களோடு  கிளம்பிப் போகவும் இயலவில்லை. நித்திலனின் உடைமைகளை குழந்தைகள் இல்லத்திற்குக் கொடுத்து விடலாம் என்று சொன்னதை மட்டும் மறுத்துவிட்டார். அவனது அறையில் இருக்கும் எதையும் மாற்றி வைக்கக் கூட அனுமதிக்கவில்லை அவர்.
     இப்போதெல்லாம் சேஷையா இரவில் நித்திலனின் அறையில் தான் படுத்துக் கொள்கிறார். நாள் தவறாமல் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று வெகுநேரம் நிற்கிறார்.  சாலையை நடுவே கடக்கத் தயாராகுபவர்களை பதட்டதோடு தடுக்கிறார். பலர் அவரைப் பைத்தியமென்று கடந்து சென்றாலும், சிலர் அவர் கண்களில் தெரியும் தீவிரத்தில், போக்குவரத்து விளக்கை நோக்கி நகரவே செய்கின்றனர்.  
(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய (ஜூலை மாத) கதைகளத்தில் முதல் பரிசு பெற்ற கதை)

21.6.16

ரோஜர்

(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய ஜூன் மாத கதைகளத்தில் இரண்டாம் பரிசு பெற்ற குறுங்கதை.  கொடுக்கப்பட்ட முதல்வரிக்கு ஏற்ப 300 வார்த்தைகளுக்குள் எழுதிய கதை.)

பேசுவதற்கு ஒருவருமே இல்லாமற் போய்விட்ட தனிமை என்னை சித்திரவதை செய்தது.  நூற்றியிருபத்தோராவது முறையாக என்னை குனிந்து பார்த்துக் கொண்டேன். சந்தேகமே இல்லாமல் ஒரே இரவில் உருவம் மாறிப் போயிருந்தது. தன்னிரக்கத்தைத் துறந்து, புது உடலில் என்னைப் பழக்கிக் கொள்ள ஒரு முறை சிலிர்த்துக் கொண்டேன். மூன்று ஈக்கள் திடுக்கிட்டுப் பறந்தனதொங்கிக் கொண்டிருந்த நாவை பிரயர்த்தனப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டேன். காலடி சத்தம் கேட்க முன்னெச்சரிக்கையுடன் காதுகளை விடைத்துக் கொண்டேன்.

யாரது?’ என்று குரலை உயர்த்திய போதுபௌவ்என்ற குரைப்பொலியாய் வெளி வந்தது. இரண்டொரு முறை முயற்சித்த போது
இப்ப என்னத்துக்கு இப்படி குரைக்கிற!” என்று வந்தவன் என் மகனே தான்!
டேய்! யாராவது டாக்டர பார்க்கணும்டா!’ என்று சொல்ல முயற்சிக்க, “சும்மா கிட!” என்று தலையில் தட்டினான்.

 “என்னடா இங்க!”
ஒன்னுமில்லப்பா இந்த ரோஜர் சும்மா குலைச்சுகிட்டே இருக்கு!”
லேசாய் விந்தியபடி வந்த அவனுடைய அப்பாவைப் பார்த்து அதிர்ந்தேன்
அப்படியே நேற்று வரையிருந்த என் தோற்றத்திலிருந்தான். உற்றுப் பார்த்ததில் அந்தப் பார்வையை அடையாளம் காணமுடிந்ததுசந்தேகமேயில்லாமல் நேற்றிரவு  என்னிடம் உதைபட்ட அதே ரோஜர் தான்.  காலில் நேற்று  அடிபட்ட இடத்தில் கட்டு போட்டிருந்தான்.

எப்படி என்ற கேள்வி மறந்து போய் இப்போது  பயம் வந்தது. ரோஜரை எனக்குப் பிடிக்காமல் போக நிறைய காரணங்கள். பொதுவாய் எனக்கு நாய்கள் பிடிப்பதில்லை. அதிலும் என் வார்த்தைகளைத் தரையைப் பார்த்தபடி புறக்கணிக்கும் மகன், இது குரைத்தால் இதனுடன் முழுதாய் மூன்று நிமிடங்களாவது நின்று பேசிப் போன போது, இதை எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. என் மகன் சிகரெட் பிடித்தால் என்னிடம் எத்து வாங்குவது, அவனருகில் காலை உரசிக் கொண்டு நிற்கும் ரோஜர் தான். அடிப்பட்டு மூலையில் ஒடுங்கிப் படுத்திருக்கும் ரோஜர் என்னைப் பார்ப்பது இதே பார்வையில் தான்

இப்போது அதில் வெறி கூடியிருப்பது தெரிந்தது. என்னை மெல்ல நெருங்கிய  ரோஜர், என்னை  ஓங்கி எட்டி உதைத்ததில் சுவரில் மோதிக் கீழே விழுந்தேன். என் மகன் ஓடி வந்துத் தூக்கிய போது உடல் உதறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவன் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு ஹீம்காரத்துடன் உள்ளே சென்று விட்டது ரோஜர்.

என்னைத் தடவிக் கொடுத்த மகன், “பயந்துட்டியா! அவர் அப்படித் தான், என்னைக் கண்டா பிடிக்காது! நான் உருப்படாதவன், சரியா படிக்காதவன், அவரோட உழைப்புல சாப்பிடுறவன்பி.எஸ்.எல்.ஈல, லெவல்ல, நான் எடுத்த மதிப்பெண் அவருக்கு அவமானம்நான் பெண்கள் பின்னால சுத்தறேன்னு சந்தேகம்உன்மேல அவர் காட்டுறது, என் மேல இருக்கற வெறுப்பு!”
கொஞ்சம் பொறு! எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிடும்! நான் உன்னை  அழைச்சுட்டு போயிடறேன்!”


நான் பேசும் போது பதிலே பேசாமல் குனிந்துக் கொண்டிருக்கும் என் மகன், நாயிடம் மட்டுமே முணுமுணுக்கும் என் மகன்அவன் இப்போது  பேசுவதைக் கேட்டு   என் உடல் நடுங்கத் துவங்கியது.

16.4.16

வெய்யிலைப் பருகும் மனிதர்கள்

வெய்யில் உருகி ஓடும் பின் மதிய நேரம், பெரும்பாலானவர்கள் அலுவலகத்தின் மடியில் இருப்பார்கள். வீட்டில் இருப்பவர்கள் உள் வேலைகளை செய்தபடி இருப்பார்கள். சற்றே அக்கடாவென கட்டையைச் சாய்க்கத் தோன்றும் நேரம் அது.

இரண்டரை மணி. துணைப்பாட வகுப்புகளை முடித்துச் செல்லும் மாணவர்களையும் அலுவலக விஷயமாக செல்பவர்களையும் தவிர அதிகம் பேர்களைப் பார்க்க முடியாத அப்பொழுதில்,
வளையிலிருந்து ஊர்ந்துத் திரியும் நண்டுகளாக தெருவில் நகரும் மக்களின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு. அவர்களில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்ட வயதினரையும் பார்க்க முடிகிறது.

சென்ற வாரம் அவர்களைப் பேருந்தில் பார்த்தேன். முதலில் என் கவனத்தைக் கவர்ந்தவள் அந்தச் சிறுமி தான். எட்டு வயது இருக்கும். குட்டையான மினி ஸ்கர்ட் உடுத்தியிருந்தாள். அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடியிருந்த  அவளது பெரிய கண்கள் தான் என்னை அவள் பக்கம் ஈர்த்தது.

உட்கார இடமிருந்தும் அதைத் தவிர்த்தவளாக மேலே தொங்கிய கைப்பிடியை எக்கிப் பிடித்து ஆடியபடி, சற்று நேரம் ஜன்னலில் சாய்ந்தபடி என பயணித்துக் கொண்டிருந்தாள். அவளது தங்கையைப் போல தோற்றமளித்த மற்றொரு பெண், அதிக சலனமின்றி அவளருகில் நின்றுக் கொண்டிருந்தாள்.

அவர்களுக்கு அருகே இருந்த இருக்கையில் நைட்டியுடன் அமர்ந்திருந்தது அவர்களது பாட்டியாய் இருக்க வேண்டும். அவ்வப்போது அவர்களிடம் உட்கார் என்றோ, சரியாய் பிடித்துக் கொள் என்றோ மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கண்களில் சோர்வு தெரிந்தது. ஏறக்குறைய பத்து நிமிடங்களில் என் நிறுத்தம் வர இறங்கிக் கொண்டேன்.

ஐந்து நாட்கள் கழித்து அதே நேரம் அதே பேருந்தை எடுக்க, அவர்களைப் பார்க்க நேர்ந்தது. இந்த முறை அச்சிறுமிகள் இருவரும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருக்க, களைத்த கண்களோடு பாட்டி இன்னொரு பக்கத்திலிருந்த இருக்கையிலிருந்தார். இம்முறையும் பாட்டி நைட்டியில். சிறுமிகள் இருவரும் டைட்ஸ் அணிந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்தால் பள்ளி விட்டுத் திரும்புபவர்களைப் போல இல்லை. பாட்டியின் கையில் துணிகள் அடைத்ததைப் போன்ற ஒரு பையைத் தவிர வேறெதுவும் இல்லை. பள்ளிக்குச் செல்லாமல் இந்நேரம் அவர்கள் இவ்வழியில் பயணிக்க என்ன காரணம் இருக்கக் கூடும் என்று என் மனம் ஆராய்ந்துக் கொண்டே வந்தது.

முதலில் அச்சிறுமியரின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். தாயைப் பெற்ற பாட்டியிடம் பிள்ளைகளை விட்டு விட்டு பணிபுரியச் சென்று விட்டார்களென்று கற்பனை செய்துக் கொண்டேன். அப்படி என்றால் சிறுமிகள் பள்ளிக்கூட உடையில் அல்லவா இருக்க வேண்டும்?

சரி! அவர்கள் பாட்டியின் வீட்டிற்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு அவரோடு வீடு திரும்புகிறார்கள் என்று வைத்துக் கொண்டேன். அப்படி இருந்தால் வீட்டுப் பாடம் செய்ய அல்லது படிக்க என்று ஏதேனும் கையில் எடுத்துக் கொண்டு வர வேண்டுமில்லையா!

அது மட்டுமல்ல பொதுவாய்த் தங்கள் வீட்டிற்கு அருகிலே இருக்கும் பள்ளியில் தான் பிள்ளைகளைச் சேர்த்து விடுவார்கள் பெற்றோர்கள். பள்ளிகளும் அண்மையில் வசிக்கும்  மாணவ்ர்களுக்குத் தான் முதல் உரிமைக் கொடுத்து சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால் பாட்டியின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்ற என் ஊகத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இவர்களைப் பார்த்தால் நிரத்தரமாய் இந்த ஏற்பாட்டில் இருந்துப் பழகியவர்களைப் போல தெரியவில்லை. அதனால் பெற்றோருக்கு இவர்களை வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு உடற்கோளாறு ஏற்பட்டிருக்குமோ, எதுவும் செய்ய இயலாத நிலையில் பாட்டி அவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இப்போது அவர்களின் பெற்றோரைப் பார்க்க பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது. சட்டென  என்னை அந்நிலையில் வைத்துப் பார்த்தேன். மனம் இளகிப் போனது.

அந்நேரம் தங்கையாய்த் தோன்றிய சிறுமி தூக்கம் வருவது போல கண்களை லேசாய் மூடி ஜன்னலில் தலையைச் சாய்த்தாள். அருகில் இருந்த தமக்கை, அவளை இழுத்து தன் மடியின் மீது கிடத்திக் கொண்டாள். பொதுவாய் இக்காலத்துச் சிறுமிகளை இப்படிப் பட்ட பொறுப்புணர்வோடு நான் பார்த்ததில்லை. கேட்டது எல்லாம் எளிதாய் கிடைத்துவிடும் சிறுவர்களுக்கு இப்பேர்பட்ட பொறுப்புணர்வு ஏற்படுவதில்லை.வியப்பாயிருந்தது!

பேருந்து என் நிறுத்தத்தை நெருங்கிய போது பாட்டி ஏதோ சொன்னார். தமக்கை சட்டென கையை உயர்த்தி நிறுத்து என்பது போல கையைக் காட்டினாள். பின்னர் தங்கையின் தலையை வருடிக் கொடுத்தாள். இறங்கும் போது அவர்களும் எழுந்து நின்றதைப் பார்த்தேன்.

என்னுடன் தான் இறங்குகிறார்கள் என்றால் அவர்களைச் சற்று நேரம் பின்தொடர்ந்தாலென்ன என்று தோன்றியது. தண்ணீர் குடிப்பது போன்ற பாவனையில் இறங்கி சற்று நிதானித்தேன். ஆனால் அவர்கள் மேற்கொண்டு நடக்காமல் வேறொரு பேருந்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள்.


என் மனம் அங்கிருந்து பெரிய மருத்துவமனைகளுக்குச் பேருந்துகள் செல்கின்றன என்று எனக்கு நினைவு படுத்தியது. அதை ஒதுக்கிவிட்டு,  பெற்றோர்கள் பணிச்சுமை அதிகமாய் இருந்ததால் சில நாட்களுக்கு பாட்டியிடம் பிள்ளைகளை விட்டு வைத்திருக்கிறார்கள். இரவு வேலை முடித்து பகலில் வீடு திரும்பும் பெற்றோரிடம் சிறுமிகளை அழைத்துச் சென்று, சிறிது நேரம் விளையாட விட்டு மீண்டும் அழைத்து வருகிறார் பாட்டி என்று பிடிவாதமாய் நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

9.4.16

இராம அயணத்துடன் பயணம் -2

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே


‘அரியும் சிவனும் ஒன்னு,
இதை அறியாதார் வாயில மண்ணு’ என்று கேட்டிருக்கிறோம்!
இதை கம்பரும் தன் பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சைவம்:
திருநீறு பூசிய சிவபிரானின் மேனி நிறத்தில் இருந்த மேகங்கள் ஆற்றைத் தன் தலையில் அணிந்து சென்றது. கடல் நீரை மேய்ந்தது.
வைணவம்:
கடல் நீரை மேய்ந்த பின்னர் அகில் குழம்பைப் பூசியிருக்கும் லஷ்மியைத் தன் மார்பில் கொண்ட திருமாலின் நிறத்தில் திரும்பியது.

லஷ்மி செல்வத் திருமகள். அவளைத் தன்னகத்தே கொண்ட கார்மேகம் உயிர்கள் வாழ மழையாய்ப் பொழிகிறது என்கிறார் கம்பர்.
பார்க்கடலைக் கடைந்து நஞ்சுண்ட (உப்பு நீர்) சிவபிரானையும், அமுதுண்ட (மழை நீர்) திருமாலையும் இங்கே நினைக்க வைக்கிறார் அவர்.
(பல கோணங்களில் பார்க்க உதவிய இணையத்திற்கு நன்றி!)

இதில் என்னைக் கவர்ந்த வார்த்தை ‘ஆர்கலி மேய்ந்து’
ஆர்கலி- நிறைந்த ஓசையை உடைய கடல்
வெண்மேகம் கடலை மேய்ந்து கருமையாய் மாறுகிறது என்று சொல்லும் போது,
பசு மாடு மிகப் பெரிய கலத்தில், எள்ளும் புண்ணாக்கும் கலந்த  நீரை, உர்ர்ர்ர்ரென்ற சத்தத்தோடு உறிஞ்சி குடிப்பது போலவும், அது எருமையாய் மாறுவது போலவும் ஒரு கற்பனைத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.  
26.3.16

இராம அயணத்துடன் பயணம் -1

திடீரென்று கம்ப ராமாயணம் படித்துப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது. உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு, நான் படித்ததை, புரிந்துக் கொண்டதை இங்கே பகிர்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதைச் சொல்லுங்கள்.  

பொதுவாய் மண் வாகு என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஒரு ஊரில் விளையும் செடி அல்லது செய்யப்படும் பொருள் அதற்கென்று தனி ருசியைக் கொண்டிருக்கிறது. 
பண்ரூட்டி பலாப்பழம், சேலம் மாம்பழம், மதுரை மல்லி எல்லாம் இப்படித் தான் தம் மண் வாகைக் கொண்டு நாமம் பெற்றன.
மனிதர்களின் தன்மையும் மண்ணைக் கொண்டிருக்கிறது என்பதை வீரம் விளைந்த மதுரை, தஞ்சாவூர்க் குசும்பு போன்ற புவி சார்ந்த குறியீடுகளிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
அது போல, சரயு ஆற்று நீரால் வளம் பெற்றது கோசல நாட்டின் மண். அம்மண்ணே அங்கு வாழ்ந்த மக்களின் குணத்தையும் நிர்ணயித்தது என்கிறார் கம்பர்.
பொதுவாய் மாந்தர்களைக் குற்றம் புரியத் தூண்டுவன இரண்டு விஷயங்கள்.
ஒன்று அவர்களின் ஐம்பொறிகள்,
மற்றொன்று,
காசு மாலை ஒலிக்கும் மார்புகளையும்,
அம்பு போன்ற கூரிய விழிகளைக் கொண்ட
மாதர்களின் கண்.
இவை இரண்டும் கூட கோசல நாட்டில் நெறி பிறழாதவையாக இருக்கின்றன.

அத்தகைய பெருமை கொண்ட கோசல நாட்டை அழகு செய்கிறது சரயு ஆறு. அவ்வாற்றின் அழகைக் கூறுவோம் என்று சொல்லி, தனது முதல் பாடலைத் துவக்கி இருக்கிறார் கம்பர்.

பால காண்டம்
ஆற்றுப்படலம்
ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.

ஆசு- குற்றம்
அலம்- நிறைய
வாளி- அம்பு
காசு அலம்பும்- காசுமாலை அசையும்
அணி- அழகு

கற்றுக் கொண்டவை:
ஆசு கவி முன்பே தெரியும், ஆசு என்றால் குற்றம் என்பது எனக்கு புதிது.
அலம்பும் என்பதை அதே அர்த்தத்தில் (அசைதல்) பயன் படுத்தி கேட்டிருக்கிறேன்.
இங்கே வாளிக்கு அம்பு என்ற அர்த்தம் எனக்குப் புதிது.

பாட்டன் வெட்டி யெடுத்த கேணியில்
வாளியால் நீர் சேந்திய வேணியின்
படம் மாட்டியிருந்தது ஆணியில்
என்று நான் கவிதை எழுதினால், கம்பர் நிச்சயம் குழம்பிப் போவார், வாளியின் அர்த்தற்காக அல்ல, 
இது கவிதை என்று சொன்னதற்காக!
(படம் இணையத்திலிருந்து)

3.10.15

துரோகமிழைத்தல்


மன்னிக்க முடியாத ஒன்றாய் படுவது

நம்பிக்கை துரோகம்.

 எதிர்பாரா நேரத்தில்

எதிர்பாரா மனிதரிடமிருந்து

எதிர்பாராமல் வரும் துரோகங்கள்

நிலைகுலைய வைப்பவை . . .


 அலைகளின் நடுவே

ஸ்திரமாய் நிற்பதாய்

நினைத்திருக்கும் நேரம்

திடுமென காலடியில்

சரியும் மணல் போல

வாரிவிடக் கூடியவை!


 துரோகமிழைக்கப் பட

என்ன தவறு செய்தோமென

மன அலசல் செய்து

சில நாட்கள் குழம்பி,

மெல்ல கோபமாய் மாற்றி,

துரோகமிழைத்தவர் மேலதை எய்து,

தெய்வம் நின்று கொல்லு மென

சமாதானம் சொல்லி,

துரோகமிழைத்தவர் சங்கடப்படுவதாய்

நாம் எண்ணும் போதெல்லாம்

தனக்கிழைத்ததால் தான் இந்நிலையென திருப்திபட்டு,

அவரும் அதை உணர்வாரென நம்பி,

ரணத்தை நக்கும் நாயென

பலநாட்கள் திரிந்த பின்னர்

அத்துரோகம் மெல்ல இயல்பாகிறது.
 

சில ஆண்டுகள் கழித்துப்

பார்க்கும் போது

அன்று துரோகமிழைத்தவர்

இழைத்தது துரோகமாவென்ற

சந்தேகம் எழவே செய்கிறது!