24.12.08

எங்க காலத்துல எப்படி இருந்தோம் தெரியுமா !தொலைக் காட்சி பார்ப்பவர்கள் , அதைப் பார்க்காதவர்களைக் காட்டிலும் , சந்தோஷம் குறைந்தவர்களாக இருக்கிறார்களாம்! தாய் , தந்தை ,கணவர் ,குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை ,விட தொ. கா. இவர்களுக்கு சந்தோஷம் தருகிறது என்பதால், இவர்களின் வாழ்கை ருசி குறைந்ததாய் இருக்கிறதாம் !

எண்பதுகளில் இருந்த தொ. கா இல்லாத வாழ்கை நன்றாய் இருந்தது. அப்போது கிடைத்த நண்பர்கள் எளிமையானவர்களாய் இருந்தனர். அந்நாட்களின் விளையாட்டுகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தன. அந்த ஆரோக்கியமான வாழ்க்கை கறுப்பு வெள்ளை நினைவுகளாய் , நினைவடுக்குகளின் அடியில் ஈரம் காயாமல் , பத்திரமாய் இருக்கிறது.


இப்போது நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே நியமம் செய்ய வேண்டிஇருக்கிறது. இதில் யாரையும் குறை சொல்ல முடிவதில்லை . விஞ்ஞானம் நம் வாழ்கை யின் தரத்தை உயர்த்தி ,நம்மை அதன் பொம்மை இயந்திரங்களாய் மாற்றி விட்டது. கணினியின் உதவியால் உலகம் சுருங்கினாலும், மனிதர்களுக்கிடையிலான தூரம் அதிகரித்துவிட்டது.
என் குழந்தைகளுக்கு நான் விட்டுச் செல்லும் உலகம் மிகவும் புதியது.வாரம் ஒரு முறை நான் பார்த்த 'ஒளியும் ஒளியும்'மிலிருந்த காத்திருப்பு சுகம் இவர்களுக்கு இல்லை. இவர்களின் தேவை ,இவர்களின் விரல் நுனியில் கிடைக்கிறது. மின்சாரம் இல்லாத அந்த கருப்பு வெள்ளை இரவுகளின் சுகந்தத்தை இவர்களால் இன்று புரிந்துக் கொள்ள முடிவதில்லை. கணினி விளையாட்டுகளும் , தொ.கா வும் , புத்தகங்களுமே இவர்களை ஆக்கிரமித்திருக்கின்றன.


என்னால் முடிந்தது எல்லாம் ,' எங்க காலத்துல எப்படி இருந்தோம் தெரியுமா !' என்ற என் பாட்டியின் வழக்கமான சொற்களை வழிமொழிவது மட்டுமே ! அவர்களின் வாழ்கை என்னுடையதை விட நன்றாய் இருந்திருக்க வேண்டும்!

23.12.08

சொர்கமே என்றாலும்!


சிங்கையில் வாழ்கை அமைதியாய் ,இயந்திரத்தனமாய் கழிந்துக் கொண்டிருக்கிறது. வந்த புதிதில் பிரம்மிப்பை ஏற்படுத்திய பிரம்மாண்ட கட்டிடங்கள் ,இப்போது அயனாவரம் ஒண்டுக் குடித்தனம் அளவுக்கு பழகி விட்டது. நம் சிங்கார சென்னை தான் தற்போது வியப்பைத் தருகிறது. ஊருக்குள் நுழைந்ததும் அழுக்காய் காட்சி அளிக்கிறது. துடைப்பம் எடுத்து கழுவித் தள்ளலாம் போல கை பரபரக்கிறது.கொஞ்சம் நாள் தங்கி இருந்தால் இதுவும் பழகி விடுகிறது. வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்டவர்களின் 'சின்ட்ரோம்' இதுதான் .

சிங்கையில் வாழும் மக்கள் பெரும்பாலும் நம்மைப் பார்த்தால் புன்னகைக்கிறார்கள். எதையும் இயல்பாய் எடுத்துக் கொள்கிறார்கள். தமிழர்கள் மட்டும் இன்னொரு தமிழரைப் பார்த்து சிரிக்க யோசிக்கிறார்கள். நாம் சிரித்தாலும் அவர்கள் பதிலுக்கு சிரிப்பார்களா என்ற எண்ணம் ,நம்மையும் அவர்களைப் பார்த்து சிரிக்க விடாமல் செய்கிறது.


அரசாங்கம் திறமையானவர்களின் கைகளில் பத்திரமாய் இருக்கிறது. சம்பாதிப்பதில் பெரும் பகுதி செலவழிந்தாலும் , மக்களின் அன்றாட பிரச்சனைகளை அரசு ஜாக்கிரதையாய் கவனித்துக் கொள்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சனை என்றாலும் , சமாதானம் பேச ,பத்து நிமிடத்திற்குள் போலிஸ் வந்து விடுகிறது. யாரும் லஞ்சம் வாங்குவதில்லை,கொடுப்பதும் இல்லை . சத்தியமாய் இது பூலோகத்தின் சொர்க்கம் தான். இருந்தாலும்.......... ,
சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா !


4.12.08

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்
உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஆனால்அதை செயல்படுத்த முயல்வது ஒரு சிலரே . அதிலும் அதை செயல் படுத்துவது மிகச் சிலரே. பல முறை முயன்று பார்த்துள்ள ,என் அனுபவத்தில் இருந்து சில சில்லறை யோசனைகள்.


1. உடற்பயிற்சியை புதியதாய் துவக்குபவராய் இருந்தால் , குறைவான நேரமே செய்ய முயலுங்கள். முதல் நாளே நானும் செய்தேன் என்று ஒரு மணி நேரம் செய்தால் , அடுத்த நாள் உங்களுக்கு நீங்களே பொய் சாக்கு சொல்லிக்கொண்டு ,ஏமாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்.
கொஞ்சம் கொஞ்சமாய் செய்யும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.


2. துணைக்கு யாரேனும் கிடைத்தால் நல்லது .இருவர் சேர்ந்து செய்யும் போது அதில் ஆர்வம் ஏற்படுகிறது. கிடைக்கவில்லை என்றால் அதை விட நல்லது. அவர்களின் காரணமாய் சோம்பல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. அவர்கள் வரவில்லை ,அதனால் நாளை செய்துக் கொள்ளலாம் , என்று தள்ளிப் போட வேண்டி இருப்பதில்லை.


3. நல்ல இசையை கேட்டுக் கொண்டே செய்தால் போரடிக்காது. ' வாக் மேனை ' காதில் மாட்டிக்கொண்டு வானொலி கேட்கலாம். தமிழ்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் இருந்தால் தூய தமிழில் பேச்சு கேட்கும் வாய்ப்பு அதிகம்.


4.உடலை அதிகம் வருத்திக் கொள்ளாமல் பயிற்சி செய்வது முக்கியம். பயிற்சியை தொடர்ந்து செய்ய இது வழி வகுக்கும்.


5.கஷ்டப்பட்டு ஒரு மாதம் செய்து விடுங்கள் .அது ஒரு பழக்கமாக மாறிவிடும். மூன்று மாதங்கள் செய்துவிட்டீர்கள் என்றால் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றம் ,உங்களைத் தொடர்ந்து செய்யத் தூண்டும் . ஒரு நாள் செய்யாவிட்டாலும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு , உங்களை பயிற்சி செய்ய வைக்கும் .


உங்கள் பயிற்சி தொடர என் வாழ்த்துக்கள்!