23.12.08

சொர்கமே என்றாலும்!


சிங்கையில் வாழ்கை அமைதியாய் ,இயந்திரத்தனமாய் கழிந்துக் கொண்டிருக்கிறது. வந்த புதிதில் பிரம்மிப்பை ஏற்படுத்திய பிரம்மாண்ட கட்டிடங்கள் ,இப்போது அயனாவரம் ஒண்டுக் குடித்தனம் அளவுக்கு பழகி விட்டது. நம் சிங்கார சென்னை தான் தற்போது வியப்பைத் தருகிறது. ஊருக்குள் நுழைந்ததும் அழுக்காய் காட்சி அளிக்கிறது. துடைப்பம் எடுத்து கழுவித் தள்ளலாம் போல கை பரபரக்கிறது.கொஞ்சம் நாள் தங்கி இருந்தால் இதுவும் பழகி விடுகிறது. வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்டவர்களின் 'சின்ட்ரோம்' இதுதான் .

சிங்கையில் வாழும் மக்கள் பெரும்பாலும் நம்மைப் பார்த்தால் புன்னகைக்கிறார்கள். எதையும் இயல்பாய் எடுத்துக் கொள்கிறார்கள். தமிழர்கள் மட்டும் இன்னொரு தமிழரைப் பார்த்து சிரிக்க யோசிக்கிறார்கள். நாம் சிரித்தாலும் அவர்கள் பதிலுக்கு சிரிப்பார்களா என்ற எண்ணம் ,நம்மையும் அவர்களைப் பார்த்து சிரிக்க விடாமல் செய்கிறது.


அரசாங்கம் திறமையானவர்களின் கைகளில் பத்திரமாய் இருக்கிறது. சம்பாதிப்பதில் பெரும் பகுதி செலவழிந்தாலும் , மக்களின் அன்றாட பிரச்சனைகளை அரசு ஜாக்கிரதையாய் கவனித்துக் கொள்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சனை என்றாலும் , சமாதானம் பேச ,பத்து நிமிடத்திற்குள் போலிஸ் வந்து விடுகிறது. யாரும் லஞ்சம் வாங்குவதில்லை,கொடுப்பதும் இல்லை . சத்தியமாய் இது பூலோகத்தின் சொர்க்கம் தான். இருந்தாலும்.......... ,
சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா !


No comments: