24.12.08

எங்க காலத்துல எப்படி இருந்தோம் தெரியுமா !தொலைக் காட்சி பார்ப்பவர்கள் , அதைப் பார்க்காதவர்களைக் காட்டிலும் , சந்தோஷம் குறைந்தவர்களாக இருக்கிறார்களாம்! தாய் , தந்தை ,கணவர் ,குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை ,விட தொ. கா. இவர்களுக்கு சந்தோஷம் தருகிறது என்பதால், இவர்களின் வாழ்கை ருசி குறைந்ததாய் இருக்கிறதாம் !

எண்பதுகளில் இருந்த தொ. கா இல்லாத வாழ்கை நன்றாய் இருந்தது. அப்போது கிடைத்த நண்பர்கள் எளிமையானவர்களாய் இருந்தனர். அந்நாட்களின் விளையாட்டுகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தன. அந்த ஆரோக்கியமான வாழ்க்கை கறுப்பு வெள்ளை நினைவுகளாய் , நினைவடுக்குகளின் அடியில் ஈரம் காயாமல் , பத்திரமாய் இருக்கிறது.


இப்போது நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே நியமம் செய்ய வேண்டிஇருக்கிறது. இதில் யாரையும் குறை சொல்ல முடிவதில்லை . விஞ்ஞானம் நம் வாழ்கை யின் தரத்தை உயர்த்தி ,நம்மை அதன் பொம்மை இயந்திரங்களாய் மாற்றி விட்டது. கணினியின் உதவியால் உலகம் சுருங்கினாலும், மனிதர்களுக்கிடையிலான தூரம் அதிகரித்துவிட்டது.
என் குழந்தைகளுக்கு நான் விட்டுச் செல்லும் உலகம் மிகவும் புதியது.வாரம் ஒரு முறை நான் பார்த்த 'ஒளியும் ஒளியும்'மிலிருந்த காத்திருப்பு சுகம் இவர்களுக்கு இல்லை. இவர்களின் தேவை ,இவர்களின் விரல் நுனியில் கிடைக்கிறது. மின்சாரம் இல்லாத அந்த கருப்பு வெள்ளை இரவுகளின் சுகந்தத்தை இவர்களால் இன்று புரிந்துக் கொள்ள முடிவதில்லை. கணினி விளையாட்டுகளும் , தொ.கா வும் , புத்தகங்களுமே இவர்களை ஆக்கிரமித்திருக்கின்றன.


என்னால் முடிந்தது எல்லாம் ,' எங்க காலத்துல எப்படி இருந்தோம் தெரியுமா !' என்ற என் பாட்டியின் வழக்கமான சொற்களை வழிமொழிவது மட்டுமே ! அவர்களின் வாழ்கை என்னுடையதை விட நன்றாய் இருந்திருக்க வேண்டும்!

No comments: