31.8.09

காணாமல் போனவர்கள் தினம்.

நேற்று காணாமல் போனவர்கள் தினமாம்! இதற்குக் கூட ஒரு தினமா,கேட்க ஆச்சர்யமாய் இருந்தது! உலக அளவில் காணாமல் போவது பெரிய பிரச்சனையாகி இருக்கிறதாம்.போரினால் காணாமற்போனவர்கள் , கடத்தப்பட்டவர்கள் , தானாகவே தொலைந்துபோனவர்கள் இது போல நிறைய பிரிவுகள் இருப்பதாய் தெரிகிறது. அவர்கள் நிலையில் ஒரு நொடி என்னை நினைத்து பார்க்கும் போது வயிற்றை கலக்குகிறது.


இதுவரை காணாமல் போனவர்களைப் பற்றிய விவரங்களை கண்டுக்கொள்ளாமல் சென்ற எனக்கு

'சிறு வயதில் கடத்தப்பட்டவர்கள் விவரம் தெரிந்ததும் தன் சொந்தம் தேடி வருவார்களா?சொந்த ஊரின் அடையாளங்களை நினைவு வைத்திருப்பார்களா? போரில் காணாமற்போனவர்களுக்கு , உயிருடன் இருக்கும் பட்சத்தில் , வீடு திரும்புவதில் பிரச்சனை இருக்குமா?'

போன்ற கேள்விகள் எழுகிறது.


இனி காணாமல் போன விளம்பரங்கள் கண்டிப்பாய் என் கவனத்தை ஈர்க்கும்.இதற்காக தான் இப்படி ஒரு தினம் கொண்டாடுகிறார்களோ!

சில சந்தேகங்கள்......

இன்று தொ.கா வில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். 'அவ்தென்டிக் பிரியாணி' பார்க்க ருசியாய் தெரிந்தது . எண்ணை தான் சற்று அதிகமாக இருந்தது. அடுத்து செய்த சமோசா , அதுவும் நன்றாய் தான் இருந்திருக்க வேண்டும் . நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வழக்கம் போலவே அருமையாய் இருப்பதாய் சொன்னார்கள்.தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் எனக்கு ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சில சந்தேகங்கள் எழுகின்றன.

1. சமையல் பொருட்கள் அனைத்தையும் சமைப்பவரே கொண்டு வர வேண்டுமா அல்லது வேறு யாராவது அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

2. சமைத்து முடித்த பிறகு ,ஸ்பூன் வைத்து தொகுப்பாளர்கள் எச்சில் படுத்திய உணவை அவர்களே சாப்பிடுவார்களா அல்லது மற்றவர்களுடன் எச்சில் படுத்தாத பகுதிகளை பகிர்ந்துக்கொள்வார்களா? அப்படி அவர்களே சாப்பிட்டு முடித்தால் , நிகழ்ச்சி (தொடராக இருக்கும் பட்சத்தில்) முடிவதற்குள் பெருத்துப் போக மாட்டார்களா?

3. தொகுப்பாளர்களே சாப்பிடும் பட்சத்தில், விதவிதமாக சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் இந்த வேலைக்கு அதிக போட்டி இருக்குமா?

4. சமைக்கும் எல்லா உணவுகளும் ருசியாகத்தான் இருக்குமா? ருசியாக இல்லாத போதும் மலர்ந்த முகத்துடன் 'ஆஹா.... ஸ்ஸ்... அருமை ' என்று சொல்லித்தான் ஆகவேண்டுமா?

5. அதிகமாய் வெட்டி வைத்த வெங்காய , தக்காளிகளை வாங்கிக் கொடுத்தவர்களே திரும்ப எடுத்துக்கொள்வார்களா ? அல்லது தொ.கா. நிலைய அல்லது பக்கத்திலிருக்கும் கேண்டீன் எதற்கேனும் கொடுத்து விடுவார்களா ? இல்லை என்றால் படைப்பாளர்களோ , சமையல் செய்பவரோ அல்லது அனைவருமோ பங்கு போட்டுக் கொள்வார்களா?

இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்துக்கொள்ள ஆசையாய் இருக்கிறது.

14.8.09

வழக்கமாக நடப்பது.

நேற்று காலை , வழக்கமான எல்லா காலைகளையும் போல , குக்கர், கரண்டி மற்றும் அடுப்பிடம் என்னை ஒப்படைத்திருந்தேன். என் ஏழு வயது மகள் அவளுடைய வழக்கப்படி மிகவும் பொறுமைய்ய்ய்ய்யாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.நான் வழக்கமாக சொல்லும் ‘சீக்கிரம் கிளம்பு’ வை தினமும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருந்தபடியால் , அன்று அதைச் சொல்லாமல் மௌனமாக என் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தேன்.


7:30 பள்ளிக்கூடத்திற்கு ,சரியாக 7:35 மணிக்கு வீட்டை விட்டு வெளியே கிளம்பினாள் . பள்ளி வீட்டிற்கு மிக அருகில் இருந்ததாலும் , பள்ளியில் நேற்று வரை எதுவும் சொல்லாததாலும் , அவள் மணி பார்க்க கற்றுக் கொண்டிருந்ததாலும் , இதுவே வாடிக்கையாகி விட்டது.ஏதோ என் விருப்பத்திற்காக எங்கள் வீட்டு கடிகாரம் ஐந்து நிமிடங்களை அதிகம் காட்டிக்கொண்டிருந்ததால் , அவள் கிளம்பும் நேரம் சரியாக 7:30 மணி .பள்ளிக்கு ஒரு ஐந்து நிமிடம் சீக்கிரம் கிளம்ப வேண்டாமோ!


அதற்காக இன்று வழக்கமில்லாத வழக்கமாக நான் கடிகாரத்தை ,மேலும் பத்து நிமிடங்கள் அதிகம் காட்டும்படி , மாற்றி வைத்தேன். ஹீம்.......இந்த காலத்து அம்மாக்கள் பதினாறடி பாய வேண்டியிருக்கிறது! வீட்டிலிருந்த மற்ற மூன்று கடிகாரங்களையும் அது போலவே மாற்றினேன். (செய்வதை திருந்த செய்தேன். செய்வதாக நினைத்தேன்.)


இன்று காலை , வழக்கம் போல மகளை பொறுமையாக கிளம்பவிட்டு , நக்கலாக “ஏம்மா ! தினமும் ஸ்கூலுக்கு லேட்டா போறியே ! டீச்சர் எதுவும் சொல்றதில்லையா ?” என்றேன்.


“அம்மா நான் ஸ்கூலுக்கு சரியாத்தான் போறேன் . நம்ம வீட்டு கடிகாரம் வேகமா ஓடுதும்மா. நீ கவனிச்சு பார் ! டி.வி. ப்ரொக்ராம் முடியும் போது நம்ம கடிகாரத்தோட பெரிய முள் ஐந்து நிமிடம் தள்ளியிருக்கும்!” (நேற்று வைத்த பத்து நிமிடம் இன்னும் கவனிக்கப்படவில்லை).


இன்றைய பிள்ளைகள் முப்பத்தியிரண்டு அடி பாய்கிறார்கள்!

1.8.09

அடிக்கடி கடி

இன்றைக்கு , எனக்கு பிடித்த 'கடி ' ஜோக்ஸ் கொஞ்சம் மற்றவர்களுக்காகவும்

(யாம் பெற்ற இன்பம் ..........)

1. இரண்டு கால் எலி ஒன்றை சொல்லுங்கள்......


2. ஒரு மாடு 'மா , மா' ன்னு கத்துது. அது இன்னொரு மாதிரி எப்படி கத்தும்?


3.'பே ஆப் பெங்கால் ' இஸ் இன் விச் ஸ்டேட்?


4. பக்தி அதிகமுள்ள மிருகம் எது?


5.'தேள் திரவ நிலையில் இருக்கிறது 'என்று சொல்கிறேன் - எப்படி?


பதில்கள் முதல் பின்னூட்டத்தில்.........