14.8.09

வழக்கமாக நடப்பது.

நேற்று காலை , வழக்கமான எல்லா காலைகளையும் போல , குக்கர், கரண்டி மற்றும் அடுப்பிடம் என்னை ஒப்படைத்திருந்தேன். என் ஏழு வயது மகள் அவளுடைய வழக்கப்படி மிகவும் பொறுமைய்ய்ய்ய்யாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.நான் வழக்கமாக சொல்லும் ‘சீக்கிரம் கிளம்பு’ வை தினமும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருந்தபடியால் , அன்று அதைச் சொல்லாமல் மௌனமாக என் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தேன்.


7:30 பள்ளிக்கூடத்திற்கு ,சரியாக 7:35 மணிக்கு வீட்டை விட்டு வெளியே கிளம்பினாள் . பள்ளி வீட்டிற்கு மிக அருகில் இருந்ததாலும் , பள்ளியில் நேற்று வரை எதுவும் சொல்லாததாலும் , அவள் மணி பார்க்க கற்றுக் கொண்டிருந்ததாலும் , இதுவே வாடிக்கையாகி விட்டது.ஏதோ என் விருப்பத்திற்காக எங்கள் வீட்டு கடிகாரம் ஐந்து நிமிடங்களை அதிகம் காட்டிக்கொண்டிருந்ததால் , அவள் கிளம்பும் நேரம் சரியாக 7:30 மணி .பள்ளிக்கு ஒரு ஐந்து நிமிடம் சீக்கிரம் கிளம்ப வேண்டாமோ!


அதற்காக இன்று வழக்கமில்லாத வழக்கமாக நான் கடிகாரத்தை ,மேலும் பத்து நிமிடங்கள் அதிகம் காட்டும்படி , மாற்றி வைத்தேன். ஹீம்.......இந்த காலத்து அம்மாக்கள் பதினாறடி பாய வேண்டியிருக்கிறது! வீட்டிலிருந்த மற்ற மூன்று கடிகாரங்களையும் அது போலவே மாற்றினேன். (செய்வதை திருந்த செய்தேன். செய்வதாக நினைத்தேன்.)


இன்று காலை , வழக்கம் போல மகளை பொறுமையாக கிளம்பவிட்டு , நக்கலாக “ஏம்மா ! தினமும் ஸ்கூலுக்கு லேட்டா போறியே ! டீச்சர் எதுவும் சொல்றதில்லையா ?” என்றேன்.


“அம்மா நான் ஸ்கூலுக்கு சரியாத்தான் போறேன் . நம்ம வீட்டு கடிகாரம் வேகமா ஓடுதும்மா. நீ கவனிச்சு பார் ! டி.வி. ப்ரொக்ராம் முடியும் போது நம்ம கடிகாரத்தோட பெரிய முள் ஐந்து நிமிடம் தள்ளியிருக்கும்!” (நேற்று வைத்த பத்து நிமிடம் இன்னும் கவனிக்கப்படவில்லை).


இன்றைய பிள்ளைகள் முப்பத்தியிரண்டு அடி பாய்கிறார்கள்!

2 comments:

Charu said...

I expected this... They are very smart than us :) :) :)

HVL said...

I'm sure they R