26.10.09

புது எழுத்து

ஆர்வம் இருக்கிறது

மனம் நிறைய !

மிதிவண்டி கற்றுக்கொள்ளும்

சிறுமியாக நான்


சமநிலை தடுமாறினாலும்

பிடரியைப் பிடித்து

தள்ளுகிறது வெறி


எழுதுவது தவிர்த்து

எந்த வேலை செய்தாலும்

எழுகிறது

எழுதவில்லையே

என்ற குற்றவுணர்ச்சி


பிடிபடாமல் பூச்சிகாட்டினாலும்

என்றாவதொருநாள்

பிடிபட்டே தீரவேண்டும்

எழுத்து


இந்த நம்பிக்கையில்

எழுதினேன்

எழுதுகிறேன்

இன்னும் எழுதுவேன்.

24.10.09

எண்களின் மூலம்

நாம் 1 ஐ ஒன்று என்றும் , 2 ஐ இரண்டு என்றும் கூறுவதற்கு காரணம் இருக்கிறதா?

இருக்கிறது எங்கிறது எனக்கு வந்த மின்னஞ்சல்.

அதற்கு காரணம் அதன் கோணங்களே என்று அது சொல்கிறது .

1 , 2 , 3 ,4 , 5 ,6 ,7 , 8 , 9 க்கு முறையே 1 , 2 , 3 ,4 , 5 ,6 ,7 , 8 , 9

கோணங்கள் இருக்கின்றனவாம்!
0 விற்கு கோணங்களே இல்லை!
இது எப்படி இருக்கு!

இது உண்மையா அல்லது 1 ஐ ஒன்றாக ஆக்கும் முயற்சியா!

உரையாடல்

1.(அலுவலகத்தில் எனக்கும் என் மலேசிய தோழிக்கும் நடந்த உரையாடல்)

என் தயிர் சாதத்தை ருசித்த

தோழி : தயிரை வீட்டுல எப்படில்லா செய்யறது?

நான் : முதல்ல பால நல்லா காயவச்சிக்கோங்க பிறகு ……।

தோழி : வெயில்லயா ?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!2. (கீரை சாப்பிட மறுத்த என் பெண்ணும் நானும் )

நான் : கீரை சாப்பிட்டால் தான் கண் நல்லா தெரியும்டா செல்லம்.

(சமத்தாக சாப்பிட்டு முடித்த பின்)

என் பெண்: இப்போ என் கண் நல்லா தெரியுதாம்மா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உண்மையிலேயே ரெண்டு பேரும் என்கிட்ட சீரியசா தான் கேட்டாங்க

9.10.09

வியப்பில் ஆழ்த்திய பெண்மை -1


எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர்.அவரது குணாதிசயங்கள் என்னை அவ்வப்போது வியப்பில் ஆழ்த்துவதுண்டு.

ஒருமுறை அவருடைய ஆறு வயது பெண்ணின் பள்ளியில், சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.முன்பே மாணவர்கள் என்ன கொண்டுவர வேண்டும் , தளத்திற்குச் சென்று என்னென்ன செய்வார்கள் ,என்று ஒரு அட்டவணையைக் கொடுத்துவிட்டனர் , நிர்வாகத்தினர்.
அதில் பிள்ளைகளுக்கு ஒரு 'பர்கர்' கொடுக்கப்படும் என்றும் இருந்தது.
குழந்தைகளை பேருந்தில் வழியனுப்பிய பின் அவர் இப்படி கவலைப்பட்டார்-
நேற்றிலிருந்து என் பெண்ணிற்கு எப்படி பர்கர் சாப்பிடவேண்டும் என்று பயிற்சி கொடுத்திருக்கிறேன், என்ன செய்யப்போகிறாளோ தெரியவில்லை।

முன்னேற்பாடு செய்ய வேண்டியது தான் , அதற்கென்று இப்படியா!
அவர் பெண்ணை நினைத்தால் பாவமாக இருந்தது।

இதில் கிளைமாக்ஸ் அவருக்கு ஆன்டி- கிளைமாக்ஸாக மாறிவிட்டது.
அந்தப் பெண் பர்கரை பத்திரமாக வீட்டிற்கு திரும்ப எடுத்து வந்திருந்தாள்.