18.11.09

தொல்லைபேசி

அன்று

காலை 9:30க்கு மணியடித்தது
தோழியிடமிருந்து


சந்தோஷமாக விசாரித்தேன்
விசாரித்தாள்.

கேட்டேன்
சொன்னாள்.

கேட்டாள்
சொன்னேன்.

பேசினேன்
பேசினாள்…

பேசினே….
பேசினாள் பேசினாள் …………..

தலைவலித்தது ஆனாலும்
பேசினாள் பேசினாள் பேசினாள்…………..

10:35க்கு
பொறுமையின் எல்லை
தெரிந்தது கண்ணுக்கு.
காரணம் கண்டுபிடித்து
வெட்டினேன் தொடர்பை.

இன்று


தோழியின் இல்லம்
ஒரு மணி நேரமாய்
காத்திருக்கிறேன்
செல்போன் அழைப்புகளிலிருந்து
அவள் விடுபட.

9.11.09

குடும்பதின விழாநற்பணி பேரவை மற்றும் வசந்தம் ஏற்பாடு செய்திருந்த குடும்பதின விழாவிற்கு ( ஜூராங் பறவை பூங்காவில் ) குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

வண்டலூரை பள்ளி சுற்றுலாக்களில் பார்த்து வெறுத்துப்போயிருந்ததால் பொதுவாக எந்த பறவை மற்றும் விலங்கியல் பூங்காவையும் தவிர்த்து விடுவேன். ஆரம்பத்தில் குஷியாக விலங்குகளைப் பார்க்க ஆரம்பித்து பிறகு விலங்குகள் நம்மை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு நொந்து போய்……… எதற்கு இதெல்லாம்?

அருகிலிருக்கும் சமூக நிலையத்திலிருந்து எங்களை வெற்றிலை பாக்கு வைக்காத குறையாக ஜூராங் பறவை பூங்காவிற்கு , பேருந்துகளில் அழைத்துச் சென்றார்கள். அனைத்து ஏற்பாடுகளும் கனகச்சிதமாய் இருந்தது.இதில் கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல்.

இங்கே பறவைகள் எக்ஸ்ட்ரா லார்ஜ் உருவங்களில் பளிச் வண்ணங்களுடன் இருந்தன . வித்தைகள் செய்து காட்டின .பூனையின் மியாவ் சத்தம் , மனித சிரிப்பு , குழந்தை அழுகை இவற்றை எல்லாம் ஒரு கிளி தன் குரலில் மயில்சாமி போல செய்தது. விசில் கூட அடித்தது. இன்னொன்று தூரிகையால் காகிதத்தில் வண்ணம் அடித்தது. ‘ இதன் பெயர் என்ன ?’என்று ஆட்டுவிப்பவன் ‘மார்டன் ஆர்ட் ‘ என்ற பதிலை எதிர்பார்த்து கேட்க , ஒரு சிறுவன் ‘ஸ்க்ரிப்லிங்க்’ என்று கத்தினான். அந்த ‘மார்டன் ஆர்ட் ‘டின் விலை பத்து வெள்ளிகளாம்!

வெயில் தான் சற்று ஓவராய் காய்ந்து மண்டையைக் காயவைத்தது. மதியத்திற்குள் மதி கலங்கி போயிற்று. மதிய சிற்றுண்டி வெஜ்- ரைஸயும் அவர்களே கொடுத்துவிட்டனர். அடித்த வெயிலுக்கு தயிர் சாதம் நன்றாய் இருந்திருக்கும்.

மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நாள்தோறும் நவரசத்திற்கு’ மதியத்திலிருந்தே மக்கள் க்யூ கட்ட ஆரம்பித்துவிட்டனர். நிகழ்ச்சியும் அருமையாய் ஆரம்பித்தது. சிங்கையின் பிரதமர் எங்களுடன் சரிசமமாக படிகளில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தார். அவர் கிளம்பும் நேரம் வந்ததும் நிகழ்ச்சி படைப்பாளர் அவருக்கு ஒலிபெருக்கியில் விடை கொடுக்க, அவர் வேகமாக கையை இடவலமாக ஆட்டி மறுப்பு தெரிவித்து , பந்தடிப்பது போல சைகை காட்டி , சற்று நேரம் இருக்கப்போவதை தெரிவித்தார். ஹீம்……….

சற்று நேரத்தில் அடித்த வெயிலுக்கு சமமாய் மழை ஆரம்பித்தது. நிகழ்ச்சி மேடை மட்டும் வானம் பார்த்து அமைந்திருக்க , நாங்களெல்லாம் பத்திரமாய் நிழற்குடைகளின் கீழே . கலைஞர்கள் நனைந்துக் கொண்டே நிகழ்ச்சிகளை படைக்க , நாங்கள் குளு குளு என்று நிகழ்ச்சியை ரசித்தோம். முடிவில் எங்களை பத்திரமாக பேருந்தில் ஏற்றி சமூக நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.

ஒரு ஞாயிற்றுகிழமை அருமையாய் குடும்பத்துடன் கழிந்தது.

3.11.09

கோழிக்கு கிச்சு கிச்சு மூட்டினால் என்ன செய்யும்?

கோழிக்கு கிச்சு கிச்சு மூட்டினால் என்ன செய்யும்?
பத்து நாட்களுக்கு முன் பிங்கு ( என் 6 வயது பெண்)என்னை இப்படி கேட்டாள்!

அறிவியல் உலகின் மிக முக்கிய கேள்விகளுக்கு எல்லாம் தெரியவில்லை என்றாலும்
படித்தாவது பதில் சொல்லும் திறமை உள்ள எனக்கு கொஞ்சம் !!!!!??????

பல சாத்தியக்கூறுகளை அலசி எனக்கு பொருத்தமாக தோன்றிய பதிலைக் கூறினேன்.

'கோழிக்கெல்லாம் கிச்சு கிச்சு மூட்ட முடியாதுடா. கிட்ட போனாலே ஓடிப்போயிடும்'
இதற்கு ஒரு புன்னகையை பதிலாக தந்தாள்.

அவள் அப்பாவிடம் இதை பெருமையாகச் சொன்ன போது , எனக்கும் இதற்கும்
சம்மந்தம் இல்லை என்பது போல அவர் மடியில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

‘மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கினத்திற்கும் சிரிக்கத்தெரியாதும்மா’ – என்றார் அவர்
பங்கிற்கு. இதற்கும் புன்னகை தான்.

‘நீயே ஒரு கோழிக்குஞ்சு , உனக்கு கிச்சு கிச்சு மூட்டினால் என்ன செய்வ?’

-இது கிச்சு கிச்சு மூட்டியபடியே நான் ,கலகல என்று சிரிக்கும் அவளிடம்.

‘ஒரு முறை கோழிக்கறி எடுத்த போது இப்போ கிச்சு கிச்சு மூட்டி பாக்கறியா?’ – இதுவும்
நான் தான்.

இப்படியாக ஒரு வாரம் ஓடியது. இரண்டு நாட்களுக்கு முன் , பள்ளிவிட்டு வரும்போது
அவளாகவே சொன்னாள்-

‘கோழிக்கு கிச்சு கிச்சு மூட்டினால் அது கொத்தும் ம்மா’ .

இந்த பதில் என்னுள் மடங்கியிருந்த எதையோ நிமிர்த்துவது போல இருந்தது.