31.1.10

ஞாபகம் வருதே.....

நான் பார்த்த முதல் படம்... எனக்கு ஞாபகம் இல்லை , ஆனால் என் ஞாபகத்திலிருக்கும் முதல் தியேட்டர் அனுபவம் இது.

பிரம்மாண்டமான அந்த திரையரங்கைச் சுற்றி மஞ்சளாய் காம்பவுண்டு சுவர் இருந்தது . டிக்கெட்டு கவுண்டர் நீளமான , குறுகலான பாதையின் முடிவில் .... அந்த பாதை மேலும் இரண்டு உப பிரிவுகளாய் பிரிக்கப்பட்டு இருந்தது. (ஆண்கள்/பெண்கள்???? 2 ரூபாய்/ 5 ரூபாய்????? , மறந்துவிட்டது!)
இரண்டாய் பிரித்த குறுக்கு சுவரின் மேலே ஏறி ,சில அண்ணன்களும் , மாமாக்களும் , மற்றவர்களின் வசவுகளுக்கிடையே ,முன்னேற முயன்று கொண்டிருந்தனர்.

டிக்கெட் கவுண்டர் திறப்பதற்குள் ,உயரமான உடல்களுக்கிடையே அகப்பட்டிருந்த எனக்கு மூச்சு முட்டியது. ரொம்ப நேரம் கழித்து அது திறந்த போது நெருக்கடி அதிகமாய் ஆனது . டிக்கெட் வாங்கி வெளியேறிய கணம் , காற்று மேனியில் மோத, நிம்மதியாய் உணர்ந்தேன்.

பக்கத்து வீட்டு அமிர்தம் அக்கா குறைத்து வாங்கிய ஒரு(அரை!) டிக்கெட்டுக்காக ,என்னை தூக்கிக் கொண்டு “சின்ன குழந்தை மாதிரி படுத்துக்கோ “ என்றதும் , வாயில் கை வைத்துக்கொண்டு அவர் தோளில் நான் சாய்ந்துக்கொண்டதும் , அவர்கள் பாராட்டாய் சிரித்ததும் ஞாபகம் இருக்கிறது.

தியேட்டர் நீளமாய் , பெரிய கதவுகளைக் கொண்டிருந்தது. உள்ளே விளக்கணைந்து , படம் ஆரம்பித்தது . டி.ராஜேந்தர் படம் . நடுவே ‘தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி ‘ என்று கூட பாடினார்.
ஏதோ கெட்ட வாடை (வாந்தி????) அடிக்க , அது பாட்டு பாடிக்கொண்டிருந்த ராஜேந்தரின் தாடியுடன் சேர்ந்து ,அன்றிலிருந்து அவரை பிடிக்க விடாமல் செய்தது. அந்த வாடையை நான் அவருடன் தொடர்பு படுத்தியிருக்க வேண்டும்!

இடைவேளையின் போது அம்மாவுடன் வெளியேறிய நான் அவரைத் தவறவிட்டேன். வாழ்கையே முடிந்து விட்டது போன்ற எண்ணம் ஏற்பட , அழுகையாக வந்தது. சத்தமாக அழ பயமாக இருந்தது.

அழுதபடி , திறந்திருந்த எந்த கதவுக்குள் நுழைவது , என்று தடுமாறி நின்ற போது , அம்மா என்னை கண்டுபிடித்தார். கையில் முறுக்கைக் கொடுத்து சமாதனப் படுத்தி என்னை அழைத்துச் சென்றார்.

என் ஞாபக அடுக்குகளில் இருக்கும் முதல் சினிமா அனுபவம் இது!


இப்போது அந்த திரையரங்கின் பக்கம் செல்லும் போது (அது இன்னமும் திரையரங்காக தான் இருக்கிறது! ),அதன் பிரம்மாண்டம் குறைந்து சிறியதாக காட்சியளிக்கிறது.
நான் வளர்ந்து என் சட்டை சின்னதானது போல ,திரையரங்கின் அளவும் என் வளர்ச்சியால் குறைந்து விட்டதோ!

17.1.10

சென்ற வாரம்...

எங்கள் வீட்டு தொ.பேசிக் கட்டணப் படிவம் சென்ற மாதம் தொகையை அதிகமாய் காட்ட , பிரபல தொ.பேசி நிலையத்திற்கு ஈமெயிலடித்து அவர்களை குழப்பிக் கொண்டிருந்தோம்.


அவர்களும் பேசியது உங்கள் மனைவியாக இருக்கலாம்! , பணிப் பெண்ணாக இருக்கலாம்! போன்ற சாத்தியக்கூறுகளையெல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


கடைசியாக சென்ற வெள்ளிக்கிழமை, அந்த நிறுவனத்தின் சார்பில் தொலைபேசிய ஒரு இந்திய இளைஞர் அடித்த காமெடி
இது,

“இந்த மாதம் ,நீங்கள் மிஸ்டு கால் கொடுத்து உங்கள் நண்பரை அழைக்கச் சொல்லிப் பாருங்களேன்!”


கண்டிப்பாக முயன்று பார்க்க வேண்டிய ஒன்று!

(ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!)
---------------------------------------------------------------------------------
சென்ற ஒரு வாரத்தில் பெருமுயற்சி செய்து என் மூத்த மகள் தானாகவே சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டது 2010த்தின் முதல் சாதனை.

நேற்று ‘இராமாயணம்’ அனிமேட்டட் சி.டி பார்த்துக்கொண்டிருந்த அவள் இப்படிக் கேட்டாள்,

“ அம்மா! நான் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டேன். அடுத்து ரதம் ஓட்டிப் பார்க்கலாமா? அதில் இரண்டு வீல் மட்டுமே இருப்பதால் பேலன்ஸ் செய்வது கஷ்டமா? இருந்தாலும் ட்ரை பண்ணி பார்க்கிறேனே!”

---------------------------------------------------------------------------------

12.1.10

தொலைந்து போகும் கணங்கள்....
சில கணங்கள் தொலைந்து போகக்கூடும்!


அப்பா கைபிடித்து பள்ளிக்கு சென்ற ,

அம்மா சமைத்து ஊட்டி விட்ட ,

அண்ணன் நமக்காக பரிந்து பேசிய ,

அரைபாவாடை அணிந்து ஊரைச் சுற்றிய

கணங்கள்......


நாம்

இவற்றை ரசிக்காமலே கடந்து வந்திருக்கக் கூடும் !


சுதந்திரம் குறைக்கப்படுவதாய்

அப்பாவிடம் சண்டை போட்ட ,

அனாவசிய தலையீட்டுக்காய்

அம்மாவை திட்டிய,

சகோதரர்களோடு

பழிசண்டை போட்ட,

கணங்கள் .........


குழந்தைகளோடு ஒன்றி

இயற்கையை ரசிக்க மறுத்த,

அவர்கள் கதை கேட்டும்

சொல்ல மறந்த ,

வேலையில் தடை குறைய

தொ.கா வை தொடக்கி வைத்த,சில கணங்களை .........

பல நேரங்களில் திருத்த முடியாமல் போகவும் கூடும்!


இதுவரை தொலைத்த

கணங்களை

எண்ணி

வருந்தும் காலம்...

பிற்பாடு

வரவும் கூடும்!

11.1.10

காட்சிப்பிழைஇமைக்கும் நொடியினில்
நடந்தே விட்டது ...

அவைதனில்
பெரியோர் பலரிருந்தும்
உற்றார் உடனிருந்தும்
எதிர்க்க எவருமின்றி – அது
நடந்தே விட்டது !

மாணிக்கப் பரல் சிதற
கண்களில் அனல் பறக்க
வார்த்தைகள் நெஞ்சறுக்க
கண்ணகியாள் தொடுக்கும்
கேள்விக்கணைகள்
எரிதழல் தாங்கி
மோதித் தெறிக்கின்றன நாற்புறமும்!

பொசுங்கும் வாடை மூக்கிலேற்றி
செவ்வழல் கோயில் பற்ற
அச்சமென் மெய்யுலுக்க
மூர்ச்சித்து
வீழ்ந்தேன்
படுக்கையிலிருந்து

சொப்பனம் ஈதென்று
உணர்ந்தேன் இலகுவாய் !
தீர்த்தம் அருந்தி மீண்டும் துயில

மயக்கம் தெளிந்தது...

மயானமாகிக் கொண்டிருந்தது
மாமதுரை!
மறுபடி துயிலெழும் ஆர்வத்தோடு
எரிந்துக் கொண்டிருக்கிறேன் .......

(கோயில் – கோ + இல் (அரசனின் இல்லம் ,அரண்மனை))

(குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...)


சிதைவுகள்...: உரையாடல் கவிதைப் போட்டி

8.1.10

பிங்குவின் சாகசங்கள் !
பிங்குவிற்கு ஒரு வருடத்திற்கு முன் மொட்டையடித்தோம். அதில் அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.

சிறிது நாள் கழித்து அவளுக்கு க, கா, கி, கீ கற்பித்துக் கொண்டிருந்தேன்.

அவள் ‘கி’யின் குடுமியை ( நானும் பிங்குவும் அதை அப்படி தான் சொல்லுவோம்) பாதி மட்டுமே வரைந்திருந்தாள்.


“இதை இப்படி பாதியில நிறுத்தக் கூடாதும்மா , முழுசா கீழ வரைக்கும் போடனும்” என்றேன்.

அதற்கு பிங்குவோ “இந்த ‘கி’ பாவம்மா , அதுக்கு அதோட அம்மா ‘ஹேர் கட்’ பண்ணிட்டாங்களாம் !” என்றாள்.
பாவம் !

*******************************************************************

பிங்கு அனைத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவள் கேட்கும் கேள்விகளுகெல்லாம் (அவள் அக்காவிற்கும் தான்) பதில் தெரியவில்லை என்றாலும் , கூகுலித்தாவது பதிலைக் கூறுகிறேன்.

நேற்று “ஏம்மா எம்பேருக்குக்கு முன்னால ‘E’ ன்னு போடறோம்” ன்னு அவள் கேட்க

“ E என்பது அப்பா பெயரோட முதல் எழுத்து .அதனால அத முதல்ல போடறோம்” என்றேன்.


“எனக்கு அம்மாவையும் பிடிக்குமே அதனால H.பிங்கு ன்னோ இல்லை
E.H. பிங்குன்னோ ஏம்மா போடக்கூடாது. நான் அப்பா , அம்மா ரெண்டு பேரோட பொண்ணும் தானே “ – இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது !!!!


**************************************************************************

திவ்யா பிங்குவின் தோழி . அவளைவிட இரண்டு வயது குறைந்தவள்.

ஒருமுறை தாத்தா பிங்குவை காட்டி திவ்யாவிடம் “இந்த அக்கா பேரு என்னான்னு சொல்லும்மா ?” என்றார்.

“பிங்கு” –இது திவ்யா.

“அப்படி சொல்லக்கூடதும்மா ! பிங்கு அக்கான்னு சொல்லு!”

“நீங்க பேர தான கேட்டீங்க ! ”- மறுபடியும் திவ்யா !

*******************************************************************
*******

1.1.10

பிங்கு 2010


என் பெண்ணிடம் புத்தாண்டு வருவதைப் பற்றி எடுத்துச் சொல்ல முயற்சித்தேன்.

“இன்னியோட 2009 முடிஞ்சி 2010 வருதுடா”

“எங்கம்மா?”

“இந்த வருடமெல்லாம் நோட் புக்குல _/_/2009 ன்னு எழுதினல்ல, இனிமே
மண்டே ஸ்கூலுக்கு போகும் போது 04/01/2010 ன்னு தான் போடணும்.”

“எப்பம்மா வருது ?”

“இன்னிக்கி நைட் 12 ‘ஓ’ க்ளாக். இன்னமும் 2 அவர்ஸ்ல வருது.”

மறுபடியும்


“எங்கம்மா?”

பாலர் பள்ளியில் படிக்கும் அவளுக்கு இதற்கு மேல் எப்படி புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போது

“எங்கம்மா வருது ? தேட்டர்லியா?”

(2012 பார்த்ததோட எபெக்ட்டு தான் வேற என்ன !)

இந்த இடுகையைப் படிக்க இங்கே வந்த உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!