31.1.10

ஞாபகம் வருதே.....

நான் பார்த்த முதல் படம்... எனக்கு ஞாபகம் இல்லை , ஆனால் என் ஞாபகத்திலிருக்கும் முதல் தியேட்டர் அனுபவம் இது.

பிரம்மாண்டமான அந்த திரையரங்கைச் சுற்றி மஞ்சளாய் காம்பவுண்டு சுவர் இருந்தது . டிக்கெட்டு கவுண்டர் நீளமான , குறுகலான பாதையின் முடிவில் .... அந்த பாதை மேலும் இரண்டு உப பிரிவுகளாய் பிரிக்கப்பட்டு இருந்தது. (ஆண்கள்/பெண்கள்???? 2 ரூபாய்/ 5 ரூபாய்????? , மறந்துவிட்டது!)
இரண்டாய் பிரித்த குறுக்கு சுவரின் மேலே ஏறி ,சில அண்ணன்களும் , மாமாக்களும் , மற்றவர்களின் வசவுகளுக்கிடையே ,முன்னேற முயன்று கொண்டிருந்தனர்.

டிக்கெட் கவுண்டர் திறப்பதற்குள் ,உயரமான உடல்களுக்கிடையே அகப்பட்டிருந்த எனக்கு மூச்சு முட்டியது. ரொம்ப நேரம் கழித்து அது திறந்த போது நெருக்கடி அதிகமாய் ஆனது . டிக்கெட் வாங்கி வெளியேறிய கணம் , காற்று மேனியில் மோத, நிம்மதியாய் உணர்ந்தேன்.

பக்கத்து வீட்டு அமிர்தம் அக்கா குறைத்து வாங்கிய ஒரு(அரை!) டிக்கெட்டுக்காக ,என்னை தூக்கிக் கொண்டு “சின்ன குழந்தை மாதிரி படுத்துக்கோ “ என்றதும் , வாயில் கை வைத்துக்கொண்டு அவர் தோளில் நான் சாய்ந்துக்கொண்டதும் , அவர்கள் பாராட்டாய் சிரித்ததும் ஞாபகம் இருக்கிறது.

தியேட்டர் நீளமாய் , பெரிய கதவுகளைக் கொண்டிருந்தது. உள்ளே விளக்கணைந்து , படம் ஆரம்பித்தது . டி.ராஜேந்தர் படம் . நடுவே ‘தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி ‘ என்று கூட பாடினார்.
ஏதோ கெட்ட வாடை (வாந்தி????) அடிக்க , அது பாட்டு பாடிக்கொண்டிருந்த ராஜேந்தரின் தாடியுடன் சேர்ந்து ,அன்றிலிருந்து அவரை பிடிக்க விடாமல் செய்தது. அந்த வாடையை நான் அவருடன் தொடர்பு படுத்தியிருக்க வேண்டும்!

இடைவேளையின் போது அம்மாவுடன் வெளியேறிய நான் அவரைத் தவறவிட்டேன். வாழ்கையே முடிந்து விட்டது போன்ற எண்ணம் ஏற்பட , அழுகையாக வந்தது. சத்தமாக அழ பயமாக இருந்தது.

அழுதபடி , திறந்திருந்த எந்த கதவுக்குள் நுழைவது , என்று தடுமாறி நின்ற போது , அம்மா என்னை கண்டுபிடித்தார். கையில் முறுக்கைக் கொடுத்து சமாதனப் படுத்தி என்னை அழைத்துச் சென்றார்.

என் ஞாபக அடுக்குகளில் இருக்கும் முதல் சினிமா அனுபவம் இது!


இப்போது அந்த திரையரங்கின் பக்கம் செல்லும் போது (அது இன்னமும் திரையரங்காக தான் இருக்கிறது! ),அதன் பிரம்மாண்டம் குறைந்து சிறியதாக காட்சியளிக்கிறது.
நான் வளர்ந்து என் சட்டை சின்னதானது போல ,திரையரங்கின் அளவும் என் வளர்ச்சியால் குறைந்து விட்டதோ!

1 comment:

Charu said...

Good one.. I guess it is ega theatre?? Even I remember similar incident in Ega Theatre....