28.2.10

கனவல்ல நிஜம்

உன் விரல் நுனி பட்டு

இப்பக்கம் தெரிந்து

இவ்வெழுத்துக்களைப் படிப்பது

எவ்வளவு நிஜமோ


அவ்வளவு நிஜம்

நான் நேற்றிர வென்

பள்ளி சென்றது.

மஞ்சள் சுவரினுள்

தலைகாட்டிய கட்டிடம்

நீல வாயிற்கதவு

எதுவும் மாறவில்லை


உள்ளே

குட்டை பாவாடையில்

நீறு பூசிய

தோழி கூட பார்த்தேன்.


ஆனந்தம் நெஞ்சடைத்து

கண்ணீராய் வந்த நேரம்

திடுமென வந்தது

விழிப்பு.

என் இமைகளில்

கண்ணீரின் மிச்சம்


கண்டிப்பாய்

இது கனவல்ல

என்னால்

நிரூபிக்க முடியும்

இன்று

எனக்கு முன்

அங்கே சென்று

உன்னால்

காத்திருக்க முடியுமென்றால்.

18.2.10

அர்த்தமுள்ள கிறுக்கல்

“இந்த சுவத்துல யார் கிறுக்கினது? எத்தன வாட்டி சொல்லுறது , சுவத்துல கிறுக்காதீங்க , கிறுக்காதீங்கன்னு!”

“நான் இல்லம்மா !”
படுத்த படி காலைச் சுவற்றின் மீது வைத்து ,காலில் இருந்த அழுக்கையெல்லாம் சுவற்றில் தேய்த்த வண்ணம் பதிலளித்தாள்
பிங்கு.

“அம்மா ! உண்மையா நான் இல்ல “, குரல் மட்டும் வந்தது , அடுத்த அறையில் படித்துக்கொண்டிருந்த ஓவியாவிடமிருந்து.

“சின்ன பசங்கல்லாம் பொய் சொல்ல மாட்டாங்கம்மா!”

“நானும் பொய் சொல்லலம்மா!”

என் கணவர் பக்கம் திரும்பி

“ இதை யார் வரைஞ்சான்னு தெரியல , ஆனா எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா ? இந்த கோடெல்லாம் அருமையா இருக்கு , ஆனா என்ன வரைஞ்சிருக்காங்கன்னு தான் புரியல!” என்றேன்.

சட்டென்று பதில் வந்தது பிங்குவிடமிருந்து

“அம்மா! , இது கூட தெரியலியா? இது தான் டைஜெஸ்டிவ் ஸிஸ்டம் .(அக்காவிற்கு சொல்லிக் கொடுக்கும் போது கவனித்தது) பாரு பல்லு கூட வரைஞ்சிருக்கேன்.”

“எங்கப்பா?”

“மேலே ரெண்டு பக்கமும் இருக்கு பார். அதிலிருந்து ட்யூப் வழியா (கல்லட்டின் பெயர் தெரியவில்லை) பூவா வயித்துக்கு வருது. அதுக்கு கீழ ஸ்மால் இன்டஸ்டைன் (இதன் பெயர் மறக்கவில்லை!). வயத்துல தொப்புள் கூட வரைஞ்சிருக்கேன் பார்!” வயிற்றின் அடிப்பகுதியில் ஒரு பெரிய புல்ஸ்டாப் சைஸுக்கு அது இருந்தது (படத்தில் தான்!).
என்ன, வயிறு தான் கொஞ்சம் சின்னதாக இருந்தது!

இவ்வளவு விவரமா சொன்ன பிறகு தண்டிக்க எப்படி மனசு வரும்!

கிறுக்கலை, இல்லை இல்லை, ஓவியத்தை ரசித்தேன்.

5.2.10

மழலைச் சொல்

என் தோழி , அவள் மகன் ராகுல்.

தோழி மற்றொரு தோழியின் குழந்தையைக் கொஞ்சி கொண்டிருந்தாள்.

“செல்ல ராகுல் , குட்டி ராகுல் , பட்டு ராகுல் .....”

சற்று தள்ளி வடையைக் கடித்துக் கொண்டிருந்த ராகுல் , தாயின் அருகே வந்தான். அம்மாவின் கழுத்தைக் கட்டிகொண்டு குழந்தையை ஆர்வமாக எட்டிப் பார்த்தான். பிறகு இப்படி கேட்டான்,

“இத்த்து நான்னாம்ம்மா?”

____________________________________________________________________


பிங்குவிற்கு பெண் குழந்தை என்றால் கொள்ளை ஆசை.

“ அம்மா கயல்விழியோட பாப்பாவ நாம வாங்கிட்டு வந்துடலாம்மா...”

“அப்புறம் யார் பாப்பாவ பாத்துக்கறது?”

“நீதான்...”

“என்னால முடியாதுப்பா!”

“ஏம்ம்மா? உனக்கு வயசாகப் போகுதா?”

“எனக்கு இப்பவே வயசாயிடுச்சே!”

“நீ சும்மா சொல்லுற ! நாங்கள்ளாம் பெருசானா தான உனக்கு வயசாகனும்?”

!!!!!!!!!!!
_____________________________________________________________________

4.2.10

நான் ரசித்த பழமொழிகள்

என் கவனம் ஈர்த்த சில சொலவடைகள் / பழமொழிகள்:


1. நாய்க்கு வேலையுமில்ல, நிக்க நேரமுமில்ல.

2.பிச்சை எடுத்தாராம் பெருமாளு ,அத பிடுங்கி தின்னாராம் அனுமாரு!

3.ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரியில் சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட

4.உழுகிற மாடு பரதேசம் போனாலும் , அங்கும் ஒருவன் கட்டி உழுவான்!

5.சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் ; சந்நியாசிக்கு முன்னாலே மரணமாம்!


6.மலையத்தனை சாமிக்கு கடுகத்தனை கற்பூரம்!

7.குசனனுக்குப் பலநாள் வேளை , தடியனுக்கு அரை நாழி வேலை.

8.கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் , வானம் ஏறி வைகுண்டம் போனானாம்!

9.செருப்பின் அருமை வெயிலில் தெரியும் ; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

10.சேற்றிலே புதைத்த ஆனையைக் காகமும் குட்டும்.