29.3.10

அபூர்வ கணங்கள் !

இளங் குழந்தையின்

எதிர்பாராத் தூக்கச் சிரிப்பு . . .

இடம் புதிதெனினும்

முன்பே பார்த்த நினைவு . . .

முகவரியுடன் தொலைந்துபோன

பால்ய நண்பனின்,

ஆச்சரிய சந்திப்பு . . .

தன்நிலை மறக்கடித்து

எங்கோ அழைத்துச் செல்லும்

தூரத்து பாடல் . . .

இவை போன்ற

அபூர்வ கணங்கள்

கவிஞனுக்கும் ஏற்படுகிறது

எப்போதாவது !

28.3.10

மூன்று நிகழ்வுகள்

நிகழ்வு 1:

மகள் பின் தொடர , கணவருடன் தொலைபேசியபடி வீட்டின் வெளியே வந்தேன். உள்ளே சிக்னல் பிரச்சனை இல்லையென்றாலும் பழக்கதோஷம்!

நாங்கள் குடியிருப்பது பத்து மாடிகளுக்கும் மேலே. குட்டை மரங்களையும், தூர ரயில்பாதையில் அவ்வப்போது இரைச்சலோடு செல்லும் ரயிலையும் , வெட்டவெளியில் தெரிந்த முழு மஞ்சள் நிலவையும் ரசித்தபடி ,வீட்டை நெருங்கிவிட்டதாய் தொ.பேசியில் தெரிவித்த கணவரை வரவேற்க தயாராய் நின்றோம் , நானும் மகளும்.

வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டரில் என் கவனம் சென்றது. வேகமாய் சுற்றும் அதைப் பார்த்து அரைநிமிடத்தைக் கரைத்தேன்.

“அம்மா!, அப்பா எப்பம்மா வருவாரு?”

“இன்னும் பத்து நிமிஷத்திலப்பா”

“நான் டென் எண்ரத்துக்குள்ள வந்திடுவாரா?”

“இல்லப்பா, நீ பத்துவாட்டி சிக்ஸ்டி எண்ணனும்”

அவளுடைய எண்ணறிவு நூறு வரை தான். அதற்கு மேல் சொல்லித்தர நான் அவசரப்படவில்லை.நிகழ்வு 2:

“அம்மா , அப்பா எப்ப வருவாரு?”

இந்த முறை கணவருடன் தொ.பேசாததால்

“தெரியலப்பா!”

என்னை வெளியே அழைத்துப்போய் மீட்டரைக்காட்டி,

“இப்ப பாத்து சொல்லு!”

?????????


நிகழ்வு 3:

நிகழ்வு 2 ன் போது எவ்வளவு எடுத்து சொன்ன போதும் மகள் நம்பவில்லை .
‘நீ என்ன ஏமாத்தற!”
மட்டுமே பதிலாய் வந்தது.

அன்று குடும்பமாய் வெளியே சென்று வந்தோம்.

“அப்பா! என் காலெல்லாம் வலிக்குது”

“அது தான் வீட்டுக்கு வந்துட்டோமே! உள்ள போய் பாப்பா படுத்துக்க வேண்டியது தான். “

“நாம எவ்வளவு தூரம் நடந்தோம்னு பாத்து சொல்லுங்க!”

மறுபடியும் மீட்டரைக் காட்டினாள்.

மிகத்தெளிவாய் அன்று அப்பாவின் வரவைக் கண்டுபிடித்த விதத்தையும், அந்த மீட்டரின் பயன்பாட்டையும் விளக்கிய பிறகு அவள் உதட்டை இடவலமாய் விரித்து பல்வரிசையினிடையே நாக்கைத்துருத்தி
‘ய் யீ யீ ஈ ஈ ஈ ஈ..’ என்று
சிரித்த போது எங்களுக்கும் வந்தது சிரிப்பு .

27.3.10

இன்று விடுமுறை!

தொ.காவின் சப்தமில்லை . . .

‘சன்’னை நிறுத்தியாகி விட்டது!

குயிலும் கூவவில்லை . . .

நேரமாகி விட்டது!

இதமான வெம்மையுடன்,

பொன்மஞ்சள் தகடாய்

சூரியக் கதிர்கள்,

கதவைத் திறந்ததும்

உத்தரவின்றி அவசரமாய்

உள்ளே நுழைய,

தூரமாய் கேட்கும்

ரயில் சத்ததுடன்

அமைதியாய் விடிந்தது

ஞாயிறு காலை!

15.3.10

ஆனை ஆனை அம்பாரி யானை . . .

இருபது வருடங்களுக்கு முன் நாட்டுபுறப் பாடல்கள் நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் தாலாட்டாகவோ , விளையாட்டிலோ , ஒப்பாரியாகவோ , சினிமா பாடலாகவோ நம்மோடு ஒன்றியிருந்தன. இப்போது இவற்றை கேட்பதற்கான இத்தகு சாத்தியங்கள் குறைந்துப் போய் , கடைசியாய் குறிப்பிட்ட வழிமுறையில் பெரும்பாலும் குத்துப்பாடலாக ஒடுங்கிவிட்டது. ஒன்றிரண்டு ஒப்பாரிகளையும் நின்று கேட்க நேரமின்றி அவசரமாக காரியங்களை முடிக்கிறோம்.

சிறு வயதில் பாடிய பாடல்கள் அழுத்தமாய் இன்னமும் என் நினைவில் பதிந்திருக்கின்றன. இப்போதிருக்கும் பிள்ளைகள் உண்மையிலேயே இவற்றை இழந்து விட்டதாய் தோன்றுகிறது. திடீரென்று ஞாபகம் வர என் பிள்ளைகளுக்கு ஒரு பாடலை சொல்லிக் கொடுத்தேன். அதன் மேல் அவர்கள் காட்டிய ஆர்வம் எனக்கு வியப்பளித்தது.

ஆனை ஆனை அம்பாரி யானை


அழகரும் சொக்கரும் ஏறும் யானை


கட்டுக் கரும்பை முறிக்கும் யானை


காவேரி நீரைக் கலக்கும் யானை

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்!

பட்டிணமெல்லாம் பறாந்தோடிப் போச்சாம்!

எளிமையான சொற்களில் சுலபமாக யானையைக் கண் முன் நிறுத்திய பாடல்.
கோயிலில் சங்கிலியால் கட்டப்பட்டோ , மிருககாட்சி சாலைகளில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டோ ,பரிதாபமாய் பாகனின் கட்டளைக்கு கீழ்படியும் யானைகளையே பார்த்து பிரம்மித்த அவர்களுக்கு ,அது கட்டுக் கரும்பை முறிக்கும் என்றும் , காவேரியில் அது கலக்குமளவு நீர் இருந்தது என்றும் அறியும் வாய்ப்பு இப்போது தான் கிட்டியது.


கடைசி இரண்டு வரிகளில் கொம்பு முளைத்த யானையுடன் கற்பனையில் அவர்களும் பட்டிணமெல்லாம் பறக்க தயாராகியிருந்தனர்.

‘கம்ப்யூட்டர் கேம்ஸை’ விட இப்பாடல் நன்றாய் இருப்பதாய் தோன்றியது.

12.3.10

ஆசை

பள்ளிக்கூடம் போக வேணாம்!

டாக்டரெல்லாம் ஆக வேணாம்!

போட்டிகளும் எனக்கு வேணாம்!

முதல்பரிசு அதுவும் வேணாம்!

பிறந்தநாளுக்கு

ஊரெல்லாம் வர வேணாம்!

பரிசுகூட தர வேணாம்!

எனக்கு

நீ மட்டும் இருந்தா போதும்!


அப்பத்தா சொன்ன கதையில்

குறும்புசெய்த அண்ணன் போல,

துள்ளிகுதிச்சி ஓட வேணும்!

கண்ணாம்பூச்சி ஆட வேணும்!

பாட்டெல்லாம் பாட வேணும்!

பட்டாம்பூச்சி பிடிக்க வேணும்!

நிலாச்சோறு தான் வேணும்!

வேலைமுடிச்சி சீக்கிரம் வாம்மா!

8.3.10

என்னுள்ளே . . .

நிமிர்ந்த நடை!

நேர் நோக்கும்

கண்கள்!

தட்டி கேட்கும்

துணிச்சல்,

யாருக்கும் அஞ்சா

செயல்பாடு !

பல கலை

கற்றிடும் திறன்,

முக்கியமாய்

பேச்சுக் கலை. . .


பெண்களுக்கு

கட்டாயம் தேவை !

அதிலும்

என் பெண்களுக்கு


இதில்

விதிவிலக்கு உண்டு!

என் மாமனாரின்

பெண்ணுக்கு மட்டும்.

7.3.10

மணப்பெண் தேவை!

மாநிறத்துக்கும்

சற்றே குறைவான ,

மேனேஜர் வேலைக்கு

முயன்றுக்கொண்டிருக்கும் ,

B.E முடித்த,

முப்பத்தி ஐந்து வயது

மணமகனுக்கு,

தேவை

ஒரு நல்ல மனைவி.

தகுதிகள்:

சிவந்த நிறம்,

ஐஸ்வரியா ராயைப்

போல

நல்ல அழகு,

கம்ப்யூட்டர் படிப்பு,

ருசியாய்

சமைக்கும் திறன்,

பெரியோரை மதித்து

பணிவிடை

செய்யும் பொறுமை,

இலட்சத்தை நெருங்கும்

சம்பளம்.

கொஞ்சம் குறைந்தால்

பாதகமில்லை

மேலே சொன்ன

தகுதிகள் அனைத்தும்

இருக்கும் பட்சத்தில்.