15.3.10

ஆனை ஆனை அம்பாரி யானை . . .

இருபது வருடங்களுக்கு முன் நாட்டுபுறப் பாடல்கள் நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் தாலாட்டாகவோ , விளையாட்டிலோ , ஒப்பாரியாகவோ , சினிமா பாடலாகவோ நம்மோடு ஒன்றியிருந்தன. இப்போது இவற்றை கேட்பதற்கான இத்தகு சாத்தியங்கள் குறைந்துப் போய் , கடைசியாய் குறிப்பிட்ட வழிமுறையில் பெரும்பாலும் குத்துப்பாடலாக ஒடுங்கிவிட்டது. ஒன்றிரண்டு ஒப்பாரிகளையும் நின்று கேட்க நேரமின்றி அவசரமாக காரியங்களை முடிக்கிறோம்.

சிறு வயதில் பாடிய பாடல்கள் அழுத்தமாய் இன்னமும் என் நினைவில் பதிந்திருக்கின்றன. இப்போதிருக்கும் பிள்ளைகள் உண்மையிலேயே இவற்றை இழந்து விட்டதாய் தோன்றுகிறது. திடீரென்று ஞாபகம் வர என் பிள்ளைகளுக்கு ஒரு பாடலை சொல்லிக் கொடுத்தேன். அதன் மேல் அவர்கள் காட்டிய ஆர்வம் எனக்கு வியப்பளித்தது.

ஆனை ஆனை அம்பாரி யானை


அழகரும் சொக்கரும் ஏறும் யானை


கட்டுக் கரும்பை முறிக்கும் யானை


காவேரி நீரைக் கலக்கும் யானை

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்!

பட்டிணமெல்லாம் பறாந்தோடிப் போச்சாம்!

எளிமையான சொற்களில் சுலபமாக யானையைக் கண் முன் நிறுத்திய பாடல்.
கோயிலில் சங்கிலியால் கட்டப்பட்டோ , மிருககாட்சி சாலைகளில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டோ ,பரிதாபமாய் பாகனின் கட்டளைக்கு கீழ்படியும் யானைகளையே பார்த்து பிரம்மித்த அவர்களுக்கு ,அது கட்டுக் கரும்பை முறிக்கும் என்றும் , காவேரியில் அது கலக்குமளவு நீர் இருந்தது என்றும் அறியும் வாய்ப்பு இப்போது தான் கிட்டியது.


கடைசி இரண்டு வரிகளில் கொம்பு முளைத்த யானையுடன் கற்பனையில் அவர்களும் பட்டிணமெல்லாம் பறக்க தயாராகியிருந்தனர்.

‘கம்ப்யூட்டர் கேம்ஸை’ விட இப்பாடல் நன்றாய் இருப்பதாய் தோன்றியது.

2 comments:

பிரதீபா said...

நானும் எனது குழந்தைக்கு இந்த கதையை சொல்வேன்.. அவனுக்கு புரிந்து கொள்ளத் தான் தெரியாது :)) (வயது 8 மாதங்கள்)
ஆனால் என்னுடைய கதையில் 'அழகர்' யானை தான் வரும் :)

HVL said...

@ பிரதீபா
:)நன்றி