28.4.10

ப்ளாக் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் ப்ளாகர் உலகில் பிழைத்துக் கொள்ளலாம்.

1. மனதிலிருப்பவற்றை ,சொற்களைக் கொண்டு அடுத்தவர் மனதில் படமாய் வரையும் திறமை, பிறவியிலேயே பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ப்ளாக் எழுதும் முன்பே , தமிழ் எழுத்துகளோடு பரிச்சயம் கொண்ட ஒரு குட்டி எழுத்தாளானாய் முன்னனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
இல்லாவிட்டால் , ‘அரை வேக்காட்டு எழுத்து’, ‘நீயெல்லாம் ஏன்யா எழுதற ?’ , போன்ற பின்னூட்டங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமாவது பெற்றிருக்க வேண்டும்.


2.ஏதேனும் ஒரு துறையில் கரைகண்டிருக்க வேண்டும் .
இலக்கியம் , ஜோதிடம், கணினி , சமையல் ,மொக்கை . . . என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தன் துறையின் மீதிருக்கும் ஆர்வத்தின் காரணமாக , தானாகவோ அல்லது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியோ, எழுத்து வலைக்குள் விழ வாய்ப்புகள் அதிகம்.
விரைவாய் ப்ளாகர் உலகில் ஒன்றிவிடும் சாத்தியம் இவர்களுக்கு உண்டு.


3.நிறைய ப்ளாகர்களை நண்பர்களாக பெற்றிருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் இருபது பேராவது தொடர்ந்து பின்னூட்டம் இட்டால் , யாருக்கு தான் எழுதும் ஆர்வம் ஏற்படாது? அதுமட்டுமில்லாமல், தொடர்பதிவு எழுதும்படி வரும் அழைப்புகளைக் கொண்டே முன்னேறிவிடலாம்.
இந்த இடத்தில் கண்டிப்பாய் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’ – சுஜாதாவின் இக்கருத்தை ப்ளாக் எழுதுவதற்கும் பொருத்திக் கொள்ளலாம்.


4.சுயவிளம்பரம் செய்துக் கொள்ளும் திறமை வேண்டும்.

பிரபல ப்ளாகர்களின் பின்னூட்டதில் ‘உன் நடை மோசம்’ , ‘ ஆழம் தெரியாமல் காலை விடாதே!’ , 'ஏய்யா, உனக்கு இந்த வீண் பொழப்பு’ , போன்ற கருத்துகளை விட்டுச் செல்லலாம்.
‘யார் இந்த கொம்பன் ?’ என்று பார்க்கவாவது பலர் வந்து செல்வார்கள். முடிந்தால் இரண்டு வார்த்தை திட்டியாவது பின்னூட்டமிடுவார்கள். இப்படியாவது மக்கள் ப்ளாக் பக்கம் வந்தால் சரி!


மேற்பட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்றால் கவலை வேண்டாம்!தினமும் எதையாவது ஒன்றை எழுதிவிட்டு , 'யாராவது வந்து படிக்க வேண்டும்' என்று இஷ்ட தெய்வத்திற்கு தேங்காய் உடைப்பதாய் வேண்டிக் கொள்ளலாம். தெய்வாதீனமாகவோ அல்லது மூன்றாம் பத்தியில் சொன்ன சுஜாதாவின் விதிப்படியோ கண்டிப்பாய் க்ளிக்காகிவிடும். தேவை அண்டா அண்டாவாக தன்னம்பிக்கை மட்டுமே!

யாரையும் புண்படுத்துவதற்காக இதை எழுதவில்லை. ச்சும்மா எனக்குத் தோன்றியதை பகிர்ந்துக் கொண்டேன். :):):)

18.4.10

தாய்ப் பாசம்அடம் பிடித்து அழுதாள்,
அடுத்துள்ள குழந்தையின்
பொம்மை வேண்டுமென !

கொஞ்சியே பேசி
பவுடர் கலையாமல் சமாளிக்கும்
விளம்பரத் தாய் போல் வளர்க்க
எனக்கும் ஆசை !

ஆனால். . .
அறிவுரை செயலற்று போக,
பொறுமையும் தேய்ந்தது.
ஓங்கி வைத்தேன் காலில்,
அலறல் நெஞ்சைப் பிளந்தது!

இனி
வன்முறை கண்டிப்பாய் கூடாது
என்று சபதம் கொண்டேன் ,
எழுபத்தேழாவது முறையாக!

6.4.10

என் பெண் எழுதிய முதல் கதைஎன் ஐந்தரை வயது பெண்ணின் (இன்னமும் திருத்தப்படாத) முதல் கதை. புரிதலுக்காக வைக்கப்பட்ட முற்றுப் புள்ளி மட்டும் என்னுடையது.

(a fairy and a princess

one Day fairy has fever .the Doctor says the fairy has to stay in bed but the fairy want to go to park but the fairy can't. that night a princess come to the fairy house. than the princess take the fever. than the fairy says thankyoy(u) princess .says the fairy than fairy and the princess was frinds.)

பிரின்சஸ் மற்றும் ஃபேரியின் செயல்கள் இடம்மாறி இருக்க ,
“ஏன்டா பிரின்சஸ்க்கு சக்தி கிடையாதே! அது போய் ‘ஃபேரி’யோட ஃபீவர எப்படி சரிபடுத்தும்?” என்று கேட்டேன்.
“அதுக்கு முன் நாள் ராத்திரி பிரின்சஸ் ‘ஃபேரி’கிட்டேயிருந்து சக்தி எல்லாம் திருடிகிச்சும்மா. ஃபேரிக்கு ஜீரம் வந்த ஒடனே திருப்பி கொடுத்திடுச்சி. ரெண்டு பேரும் ஃப்ரெண்ஸ் ஆயிட்டாங்க” என்று கதையை சுபமாய் முடித்துவிட்டாள்.
இப்போதே என்னை சமாளிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.

4.4.10

சுஜாதாவின் பத்து கட்டளைகள்


நான் ரசித்த (சுஜாதாவின்) பல வரிகளில் சில:

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.


7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும்,அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.


8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.


9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.


10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்!


இது ஒரு மீள் பதிவு.

முதல் பாடம்

அந்த சிறுமிக்கு பத்து அல்லது பதினோரு வயதிருக்கும்.

வாடகைப் பேருந்து அமர்த்தி ,கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு ,பயணம் தொடங்கிய சுற்றுலாக்குழுவின், ஒரு அரைடிக்கெட் பயணி அவள். செல்லும் வழியில், நம்பிக்கையின் பேரில் மேல்மருவத்தூர் கோயிலில் முதல் நிறுத்தம்.

மற்ற பயணிகள் வருவதற்கு முன்பே அப்பாவுடன் கோயிலுக்கு சென்று வந்துவிட்டிருந்த அவள் , வண்டியில் அமர்ந்துக் கொண்டிருந்தாள். உடன் வந்திருந்தவர்கள் கழற்றி விட்ட செருப்புகள் ஜோடியுடனோ, ஜோடியைவிட்டோ , கழற்றிவிட்டதற்கேற்ப இருக்கைகளுக்கடியே கிடந்தன.

வெயில் வண்டியின் மேற்கூரை வழியாக ஒழுகியது. வயதின் காரணமாக புழுக்கம் அவளுக்கு உறைக்கவில்லை. அப்பா ஒரு ‘வீல் சிப்ஸ்’ பொட்டலம் வாங்கிக் கொடுத்துவிட்டு, வழக்கம் போல வெளியே சென்றுவிட்டார். அரசு பேருந்து பயணத்தில் இருப்பது போல ,வெளியே சென்ற அப்பாவின் வரவுக்கு நகம் கடித்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், வெளியே பார்வையை ஓட்டினாள்.
கோயிலுக்கும், இவளுக்குமிடையே இருந்த சாலையில் பேருந்துகளும், லாரிகளும் சென்றுவந்த வண்ணம் இருந்தன. இவர்களின் பேருந்துக்கு அருகே வரிசையாய் பல சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

மூன்றாவது சிப்ஸ் வாயுள் சென்ற போது ஜன்னலருகே ஒரு பாட்டியின் தலை தெரிந்தது.
வெளியே எட்டிப் பார்த்தாள்.அங்கங்கே கிழிந்துப் போயிருந்த அழுக்கடைந்த கரூநீலப் புடவை, இரண்டு இடங்களில் ஒட்டு போடப்பட்ட, சாயம் இழந்த சிகப்பு ஜாக்கெட், இவற்றுடன் நின்றிருந்தாள் அந்தப் பாட்டி. கால்களில் செருப்பு இல்லை.சீப்பை சில நாட்களாக மறந்திருந்த தலை முடி, பின்னால் ஒரு கொண்டையாய் சுற்றப்பட்டிருந்தது.

“சாப்பிட ஏதாவது குடும்மா. சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சி!” என்றாள் பாட்டி.குரலில் பசி இருந்தது.சிறுமிக்கு தர்மசங்கடமாகிப் போனது . சாப்பிட வேண்டும் என்று ஆசையாய் இருந்தது, கொடுக்க வேண்டும் என்றும் தோன்றியது, கொடுத்தால் அம்மா திட்டுவாளோ என்ற பயமும் ஏற்பட்டது. இதுவரை, இது போல சொந்தமாய் முடிவெடுக்கும் சூழ்நிலையே அவளுக்கு வந்ததில்லை.
பேருந்தில் ஒவ்வொருவராய் திரும்ப ஆரம்பித்திருந்தனர் .கண்கள் அப்பாவைத் தேடியது. அவர் தலை எங்கும் தென்படவில்லை. ஜன்னல் பாட்டியைப் பார்க்க பாவமாய் இருந்தது.

அப்போது அவளைப் போன்ற ஒரு சிறுமி ,வறுமையை வெளிப்படுத்தும் அழுக்குத் தோற்றத்துடன், பாட்டியின் துணைக்கு வந்தாள் .அது அவளுடைய பாட்டியாய் இருக்க வேண்டும்.

‘இவளுக்கு அம்மா இல்லையோ! எல்லாம் இந்த பாட்டி தானோ!’ என்று இவளுக்குத் தோன்றிய போது ,
“நீ வா பாட்டி! அவங்கல்லாம் காருல போறவங்க. நமக்கு எதுவும் கொடுக்க மாட்டாங்க. நாம நிழல்ல போய் உட்காருவோம் "என்றாள் அந்த அழுக்குச் சிறுமி. பாட்டியின் சுருங்கிய முகம், மேலும் சுருங்கியது.
இப்போது பேருந்து சிறுமிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து விட்டது. சரியாய் அதே நேரம் பேருந்தும் கிளம்ப ஆரம்பித்தது.

சட்டென்று தலை நிமிர்த்தி அப்பா, அம்மாவைத் தேடினாள். அப்பா தலைக்கு மேல் இருந்த பெட்டியில் எதையோ தேடிக்கொண்டிருக்க, அம்மா இரண்டாம் வரிசை அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
கையிலிருந்த பொட்டலத்தை , இவளுக்கு அருகாக நின்றிருந்த அழுக்குச்சிறுமியிடம் போட்டாள்.சற்றுத் தள்ளி நின்றிருந்த ஜன்னல் பாட்டியும், இவளும் சந்தோஷப் படுவார்கள் என்று எண்ணி நிம்மதி அடைந்த நேரத்தில்
‘இவ்வளவு நேரம் நின்னுகிட்டிருந்த என்னைவிட்டுட்டு , இப்போ வந்தவளுக்கு போடறியே! நீ நல்லா இருப்பியா!’ என்ற குரல் அவளையும், பேருந்தையும் துரத்தியது.