4.4.10

முதல் பாடம்

அந்த சிறுமிக்கு பத்து அல்லது பதினோரு வயதிருக்கும்.

வாடகைப் பேருந்து அமர்த்தி ,கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு ,பயணம் தொடங்கிய சுற்றுலாக்குழுவின், ஒரு அரைடிக்கெட் பயணி அவள். செல்லும் வழியில், நம்பிக்கையின் பேரில் மேல்மருவத்தூர் கோயிலில் முதல் நிறுத்தம்.

மற்ற பயணிகள் வருவதற்கு முன்பே அப்பாவுடன் கோயிலுக்கு சென்று வந்துவிட்டிருந்த அவள் , வண்டியில் அமர்ந்துக் கொண்டிருந்தாள். உடன் வந்திருந்தவர்கள் கழற்றி விட்ட செருப்புகள் ஜோடியுடனோ, ஜோடியைவிட்டோ , கழற்றிவிட்டதற்கேற்ப இருக்கைகளுக்கடியே கிடந்தன.

வெயில் வண்டியின் மேற்கூரை வழியாக ஒழுகியது. வயதின் காரணமாக புழுக்கம் அவளுக்கு உறைக்கவில்லை. அப்பா ஒரு ‘வீல் சிப்ஸ்’ பொட்டலம் வாங்கிக் கொடுத்துவிட்டு, வழக்கம் போல வெளியே சென்றுவிட்டார். அரசு பேருந்து பயணத்தில் இருப்பது போல ,வெளியே சென்ற அப்பாவின் வரவுக்கு நகம் கடித்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், வெளியே பார்வையை ஓட்டினாள்.
கோயிலுக்கும், இவளுக்குமிடையே இருந்த சாலையில் பேருந்துகளும், லாரிகளும் சென்றுவந்த வண்ணம் இருந்தன. இவர்களின் பேருந்துக்கு அருகே வரிசையாய் பல சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

மூன்றாவது சிப்ஸ் வாயுள் சென்ற போது ஜன்னலருகே ஒரு பாட்டியின் தலை தெரிந்தது.
வெளியே எட்டிப் பார்த்தாள்.அங்கங்கே கிழிந்துப் போயிருந்த அழுக்கடைந்த கரூநீலப் புடவை, இரண்டு இடங்களில் ஒட்டு போடப்பட்ட, சாயம் இழந்த சிகப்பு ஜாக்கெட், இவற்றுடன் நின்றிருந்தாள் அந்தப் பாட்டி. கால்களில் செருப்பு இல்லை.சீப்பை சில நாட்களாக மறந்திருந்த தலை முடி, பின்னால் ஒரு கொண்டையாய் சுற்றப்பட்டிருந்தது.

“சாப்பிட ஏதாவது குடும்மா. சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சி!” என்றாள் பாட்டி.குரலில் பசி இருந்தது.சிறுமிக்கு தர்மசங்கடமாகிப் போனது . சாப்பிட வேண்டும் என்று ஆசையாய் இருந்தது, கொடுக்க வேண்டும் என்றும் தோன்றியது, கொடுத்தால் அம்மா திட்டுவாளோ என்ற பயமும் ஏற்பட்டது. இதுவரை, இது போல சொந்தமாய் முடிவெடுக்கும் சூழ்நிலையே அவளுக்கு வந்ததில்லை.
பேருந்தில் ஒவ்வொருவராய் திரும்ப ஆரம்பித்திருந்தனர் .கண்கள் அப்பாவைத் தேடியது. அவர் தலை எங்கும் தென்படவில்லை. ஜன்னல் பாட்டியைப் பார்க்க பாவமாய் இருந்தது.

அப்போது அவளைப் போன்ற ஒரு சிறுமி ,வறுமையை வெளிப்படுத்தும் அழுக்குத் தோற்றத்துடன், பாட்டியின் துணைக்கு வந்தாள் .அது அவளுடைய பாட்டியாய் இருக்க வேண்டும்.

‘இவளுக்கு அம்மா இல்லையோ! எல்லாம் இந்த பாட்டி தானோ!’ என்று இவளுக்குத் தோன்றிய போது ,
“நீ வா பாட்டி! அவங்கல்லாம் காருல போறவங்க. நமக்கு எதுவும் கொடுக்க மாட்டாங்க. நாம நிழல்ல போய் உட்காருவோம் "என்றாள் அந்த அழுக்குச் சிறுமி. பாட்டியின் சுருங்கிய முகம், மேலும் சுருங்கியது.
இப்போது பேருந்து சிறுமிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து விட்டது. சரியாய் அதே நேரம் பேருந்தும் கிளம்ப ஆரம்பித்தது.

சட்டென்று தலை நிமிர்த்தி அப்பா, அம்மாவைத் தேடினாள். அப்பா தலைக்கு மேல் இருந்த பெட்டியில் எதையோ தேடிக்கொண்டிருக்க, அம்மா இரண்டாம் வரிசை அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
கையிலிருந்த பொட்டலத்தை , இவளுக்கு அருகாக நின்றிருந்த அழுக்குச்சிறுமியிடம் போட்டாள்.சற்றுத் தள்ளி நின்றிருந்த ஜன்னல் பாட்டியும், இவளும் சந்தோஷப் படுவார்கள் என்று எண்ணி நிம்மதி அடைந்த நேரத்தில்
‘இவ்வளவு நேரம் நின்னுகிட்டிருந்த என்னைவிட்டுட்டு , இப்போ வந்தவளுக்கு போடறியே! நீ நல்லா இருப்பியா!’ என்ற குரல் அவளையும், பேருந்தையும் துரத்தியது.

3 comments:

என்.ஆர்.சிபி said...

:))

Charu said...

அய்யோ பாவம்!

நல்ல முறையில் எழுதியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்..

எனக்கு சிறு வயதில் நடந்த சம்பவம் இதே போல் தான். என் வயது ஒத்த ஒரு குழந்தை பிச்சை கேட்ட பொழுது, முடிவு எடுக்க தெரியாமல் நான் முழித்து கொண்டு இருந்தேன். என் அப்பா "உன் பிஸ்கட்டை கொடு, பாவம்" என்றார். அன்று புரிந்தது எனக்கு!

நினைவு படுத்தியமைக்கு நன்றி!

HVL said...

நன்றி charu , என்.ஆர்.சிபி