31.5.10

தமயந்தி, பரிசல் மற்றும் நர்சிம் . . .

இன்று காலை முதல் நல்ல மழையை எதிர்பார்த்தும், மழை பெய்யக் காணோம். வானம் கறுத்து, இடியின் மெலிந்த உறுமல் கேட்டாலும் ,முதல் தூரல் வானம்விட்டு இன்னமும் இறங்கவில்லை. இப்பவோ அப்பவோ என்றிருக்கிறது!

என்ன பதிவு இப்படி ஆரம்பிக்கிறதே! – எனக்கே ஆச்சரியம் தான்.

என்ன செய்வது? எழுதுவதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை.

சரி இன்று கொஞ்சம் சொந்தக் கதை!

09/09/08 அன்று காலை எழுந்திருக்கும் போது
அன்று அப்படி இருக்கும் - என்று
நான் மட்டுமல்ல , நீங்களும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்!

08/09/08 வரை கணினி என்பது என்னைப் பொறுத்தமட்டில் மரியாதைக்குரிய ஒன்று . தொட்டால் கோபத்தில் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டுவிடுமோ என்ற நிரந்தர பயம் இருந்தது , அல்லது நான் கற்றுக் கொண்ட கணினி
மையத்தில் அப்படி ஒரு பயத்தை என்னுள் விதைத்திருந்தார்கள்.

மறுபடி 09/09/08
அன்று தான் முதன்முதலில் ப்ளாகர் உலகம் எனக்கு அறிமுகமான நாள் . என் தங்கையின் மூலமாக கணினி என்பது அப்படி ஒன்றும் பயமுறுத்தக் கூடிய வஸ்து அல்ல என்பதை அறிந்துக் கொண்டேன்.

ப்ளாக்கைப் பற்றி எடுத்துச் சொல்லும் போது ஆச்சரியமாக இருந்தது.
எவ்வளவு என்று கேட்டேன். இலவசம் என்றாள்.

ஃப்ரீயா! நாங்க பெனாயிலக் கூட குடிப்போமே!
-தொடர்ந்து எழுதுவோமா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல்-
கர்சீப் இன்றி ஒரு இடம் போட்டு வைத்தேன்.

இது தான் நான் ப்ளாக் எழுத்த வந்த கதை.

அடுத்து . . .

விகடனின் வரவேற்பறையில் குறிப்பிடப்பட்டிருந்த தமயந்தியின் வலைப் பக்கத்தை நான் எட்டிப்பார்த்த நேரம், இந்தப்பக்கத்தை படித்துக் கொண்டிருக்கும் உங்கள் தலையெழுத்தில் உங்களையே அறியாமல் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். பொறுப்பு பிரம்மரையே சாரும்!
தமயந்தி, ஏதோவொரு பக்கத்தில், தான் எழுதுவதற்கு காரணகர்த்தாவாக (ஊக்கமளித்தவராக) பரிசலைக் குறிப்பிட்டிருக்க , பரிசலின் பக்கத்திற்குத் தாவினேன். அவர் பக்கத்தின் மூலமாக நர்சிம்.
படித்தோமா, ரசித்தோமா, பின்னூட்டமிட்டோமா என்று சென்றுக் கொண்டிருந்த வாழ்க்கையில் , ‘என் பக்கத்தில்' நர்சிம் இட்ட ஒரு பின்னூட்டம்,
மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது .

‘நம்ம்ம்ம்ம்ம பக்கத்தக் கூட படிக்கிறாங்கய்யா!'

முதன்முதல் பின்னூட்டம் பெற்ற அனைவருக்கும் என் நிலை புரிந்திருக்கும்!
(இத்தனைக்கும் அவர் பின்னூட்டமிட்டது என் சொந்த எழுத்துக்கல்ல .)

இப்படியாக என் ப்ளாக் பயணம் இனிமையாகத் தொடங்கியது. தொடர்கிறது . . .
நன்றி தமயந்தி , பரிசல் மற்றும் நர்சிம்!

தலைப்பில் நர்சிம்மையும் , பரிசலையும் இழுத்தது
http://rithikadarshini.blogspot.com/2010/04/blog-post_28.html
என்ற பதிவில் குறிப்பிட்ட நான்காவது பத்தியின் வழியாக உங்களுக்குத் தோன்றினால் , அதற்கு நான் பொறுப்பல்ல!

இந்தப் பதிவை எழுதி முடிக்கும் நேரம் வெளியே நல்ல மழை!

25.5.10

விலங்கியல் பூங்காவில் ஒரு நாள் . . .

பொதுவாக விலங்கியல் பூங்கா என்றாலே எனக்கு அலர்ஜி. முன்பெல்லாம் தொடக்கநிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுலா என்றாலே மாட்டுவது வண்டலூர் விலங்கியல் பூங்காவும் , கோல்டன் பீச்சும் தான். அதே போல உறவினர்கள் சென்னை வந்தால், கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில், வ.வி.பூங்காவும் கண்டிப்பாய் இடம்பெற்றிருக்கும்.

சுட்டெரிக்கும் வெயிலில் வறுபட்டு வெறுத்துப் போய் தேமேவென்றிருக்கும் விலங்குகளை ,அந்த விலங்குகளே வெறுத்துப் போகுமளவு, நிறைய முறை போய் பார்த்தாகிவிட்டது.பின்னாட்களில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதா என்று பார்க்கும் ஆர்வம் கூட அதன் பிறகு எழவில்லை.

இருபது வருடங்கள் கழித்து, சென்ற வாரம் விலங்கியல் பூங்கா செல்ல அழைப்பு வந்தது .
இடம் : சிங்கை
அழைத்தவர் : என் பெண்ணின் வகுப்பு ஆசிரியர்.

சிங்கை விலங்கியல் பூங்காவைப் பார்க்கும் ஆசை எனக்கும் வந்தது.

நிறைய மரங்களுடன் குளுகுளு சூழல் . பென்குயினிலிருந்து , ஆண்சிங்கம் வரை எல்லாம் இருந்தன .

முதலில் பார்த்தது வெள்ளைப் புலி. மூன்று புலிகளில் இரண்டு, கொலு பொம்மைகள் போல கம்பீர போஸில் அமர்ந்திருக்க , ஒன்று மட்டும் இடவலமாய் சிங்கநடை , ஸாரி புலிநடைப் போட்டபடி இருந்தது.

அழைத்து வந்த தமிழாசிரியை , பிள்ளைகளிடம் வெள்ளைப் புலியை அறிமுகப்படுத்தும் விதமாக ,
’ இது என்ன புலி ?’ என்று கேட்க
‘ அப்பா புலி’ என்ற உடனடி பதில் வந்தது.

மாமிசப் பிரியர்களுக்கு சிக்கன் லெக் பீஸைப் பார்த்தால் எப்படி எச்சில் சுரந்திருக்குமோ, அது போல, எங்களைப் பார்த்ததும் இடவலப் புலியின் சுரப்பிகள் வேலை செய்திருக்க வேண்டும். அதன் நடையிலும், பார்வையிலும் எங்களை மறுநாள் தலைப்பு செய்திகளில் தள்ளும் ஆவேசம் தெரிந்தது.

அதற்கும் எங்களுக்கும் நடுவே ஒரு சிறு அகழியும், சிங்கை அரசின் மேல் இருந்த நம்பிக்கையும் மட்டுமே!
புலிக்கு நீந்தத் தெரியுமா என்ற சந்தேகத்தோடு அங்கே நிற்கப் பிரியப்படாமல் நகர்ந்தோம்.

ஒட்டகச் சிவிங்கிகள் உயரே கட்டி வைத்திருந்த இலைகளை அசை போட்டபடி , என்னவோ அவை டிக்கெட் வாங்கிக் கொண்டு எங்களைப் பார்க்க வந்தார்ப் போல , ஓரக் கண்ணால் போனால் போகிறதென்று பார்த்தன.

இதே போல் தூரத்தை வெறுமையாய் வெறித்த சிங்கம் , குடும்பத்தோடு நீராடிய யானை ,புதரிலிருந்து எட்டிப்பார்த்த ஓநாய் , கண்ணாடிக் கூண்டு அனகொண்டா , ‘எனக்குத் தெரியாது!’ என்று அர்த்தப்படும் பெயர் கொண்ட கங்காரு . . .

வேகவைத்த கறுப்பு மஷ்ரூம் போல மழமழவென்றிருந்த சீல், மீன்களை லஞ்சமாகப் பெற்று அரைமணி நேரத்துக்கு நீந்தியும் , பந்து பிடித்தும் , குட்டிக்கரணமடித்தும் காட்டியது.

மொத்தத்தில் அன்றைய பொழுது நன்றாய் போனது.

இரண்டாம் பத்தியின் இரண்டாம் வாக்கியத்தில் எழாத ஆர்வம் இப்போது எழுந்திருக்கிறது.

18.5.10

வீணாப் போன குடும்பம்!

பெரும்பாலான நெடுந்தொடர்கள் , எத்தனை நாட்கள் இடைவெளி விட்டுப் பார்த்தாலும் புரியும் வகையிலேயே ,‘கண்டின்யுவிட்டி’ விட்டுப் போகாமல் இருக்கின்றன. இது நெடுந்தொடர்களின் ப்ளஸ் பாயிண்ட்.

இதுவரை குறிப்பிட்ட தொடரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணமோ , கட்டாயமோ எனக்கு ஏற்பட்டதில்லை. அதே போல வீட்டில் நடமாடும் நேரம், கடைக்கண் பார்வையில் படும் தொடர்களைப் பார்க்கக் கூடாது என்ற வைராக்கியமும் இல்லை. இது தான் எனக்கும் சீரியலுக்கும் நேற்று வரையிலான உறவு.

இப்படி இருந்த நான் , இப்போது ஒரு குறிப்பிட்ட தொடர் வந்தால் எகிறி ரிமோட்டை எடுத்து சிகப்பு பொத்தானை அமுக்குகிறேன். இத்தகு பெருமையைப் பெற்றது ‘நம்ம குடும்பம்’ . கொஞ்ச நாளாக வசந்ததில் ,எல்லோரும் தொ.காமுன் ஓய்வாக அமரும் இரவு எட்டு மணிக்கு , ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் , ரேட்டிங்கை எகிறச் செய்கிறதோ இல்லையோ , பி.பி யை எகிறச் செய்கிறது.

காதலனின் அண்ணனைச் சூழ்நிலையின் காரணமாக திருமணம் செய்துக்கொள்ளும் கதாநாயகி. அண்ணிக்கே டார்ச்சர் கொடுக்கும் காதலன், இடையூறாக வந்த அம்மாவையும் கொன்று விடுகிறான். காதலன் என்று நினைத்து தவறுதலாக கணவனைக் கொன்றுவிடும் கதாநாயகி. அன்ணியுடன் தப்பான உறவு இருப்பதாகச் சாதிக்கும் காதலன்.
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில வைத்தியம் பாக்கற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்ச நெலம தான் எனக்கு.

இத்தனைக்கும் தொடர்ந்து இந்தத் தொடரை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவ்வளவு தெளிவு. இதில் ‘நம்ம குடும்பம் . . . நல்ல குடும்பம் . . . ‘ என்று டைட்டில் சாங் வேறு! ‘நம்ம’ வில் யாரை உடன் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வேண்டுமானால் இந்த குடும்பத்தை வைத்து பார்க்கும் போது ‘ நம்ம குடும்பம். . . நல்ல குடும்பம் . . . ‘ என்று நம் குடும்பத்தாருடன் சேர்ந்து மனம்விட்டுப் பாடலாம்.