25.5.10

விலங்கியல் பூங்காவில் ஒரு நாள் . . .

பொதுவாக விலங்கியல் பூங்கா என்றாலே எனக்கு அலர்ஜி. முன்பெல்லாம் தொடக்கநிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுலா என்றாலே மாட்டுவது வண்டலூர் விலங்கியல் பூங்காவும் , கோல்டன் பீச்சும் தான். அதே போல உறவினர்கள் சென்னை வந்தால், கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில், வ.வி.பூங்காவும் கண்டிப்பாய் இடம்பெற்றிருக்கும்.

சுட்டெரிக்கும் வெயிலில் வறுபட்டு வெறுத்துப் போய் தேமேவென்றிருக்கும் விலங்குகளை ,அந்த விலங்குகளே வெறுத்துப் போகுமளவு, நிறைய முறை போய் பார்த்தாகிவிட்டது.பின்னாட்களில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதா என்று பார்க்கும் ஆர்வம் கூட அதன் பிறகு எழவில்லை.

இருபது வருடங்கள் கழித்து, சென்ற வாரம் விலங்கியல் பூங்கா செல்ல அழைப்பு வந்தது .
இடம் : சிங்கை
அழைத்தவர் : என் பெண்ணின் வகுப்பு ஆசிரியர்.

சிங்கை விலங்கியல் பூங்காவைப் பார்க்கும் ஆசை எனக்கும் வந்தது.

நிறைய மரங்களுடன் குளுகுளு சூழல் . பென்குயினிலிருந்து , ஆண்சிங்கம் வரை எல்லாம் இருந்தன .

முதலில் பார்த்தது வெள்ளைப் புலி. மூன்று புலிகளில் இரண்டு, கொலு பொம்மைகள் போல கம்பீர போஸில் அமர்ந்திருக்க , ஒன்று மட்டும் இடவலமாய் சிங்கநடை , ஸாரி புலிநடைப் போட்டபடி இருந்தது.

அழைத்து வந்த தமிழாசிரியை , பிள்ளைகளிடம் வெள்ளைப் புலியை அறிமுகப்படுத்தும் விதமாக ,
’ இது என்ன புலி ?’ என்று கேட்க
‘ அப்பா புலி’ என்ற உடனடி பதில் வந்தது.

மாமிசப் பிரியர்களுக்கு சிக்கன் லெக் பீஸைப் பார்த்தால் எப்படி எச்சில் சுரந்திருக்குமோ, அது போல, எங்களைப் பார்த்ததும் இடவலப் புலியின் சுரப்பிகள் வேலை செய்திருக்க வேண்டும். அதன் நடையிலும், பார்வையிலும் எங்களை மறுநாள் தலைப்பு செய்திகளில் தள்ளும் ஆவேசம் தெரிந்தது.

அதற்கும் எங்களுக்கும் நடுவே ஒரு சிறு அகழியும், சிங்கை அரசின் மேல் இருந்த நம்பிக்கையும் மட்டுமே!
புலிக்கு நீந்தத் தெரியுமா என்ற சந்தேகத்தோடு அங்கே நிற்கப் பிரியப்படாமல் நகர்ந்தோம்.

ஒட்டகச் சிவிங்கிகள் உயரே கட்டி வைத்திருந்த இலைகளை அசை போட்டபடி , என்னவோ அவை டிக்கெட் வாங்கிக் கொண்டு எங்களைப் பார்க்க வந்தார்ப் போல , ஓரக் கண்ணால் போனால் போகிறதென்று பார்த்தன.

இதே போல் தூரத்தை வெறுமையாய் வெறித்த சிங்கம் , குடும்பத்தோடு நீராடிய யானை ,புதரிலிருந்து எட்டிப்பார்த்த ஓநாய் , கண்ணாடிக் கூண்டு அனகொண்டா , ‘எனக்குத் தெரியாது!’ என்று அர்த்தப்படும் பெயர் கொண்ட கங்காரு . . .

வேகவைத்த கறுப்பு மஷ்ரூம் போல மழமழவென்றிருந்த சீல், மீன்களை லஞ்சமாகப் பெற்று அரைமணி நேரத்துக்கு நீந்தியும் , பந்து பிடித்தும் , குட்டிக்கரணமடித்தும் காட்டியது.

மொத்தத்தில் அன்றைய பொழுது நன்றாய் போனது.

இரண்டாம் பத்தியின் இரண்டாம் வாக்கியத்தில் எழாத ஆர்வம் இப்போது எழுந்திருக்கிறது.

3 comments:

padma said...

nice

simariba said...

விலங்கியல் பூங்காவுக்கு நேரடியாய் போய் வந்தது போல் இருக்கிறது hvl. அருமை!

HVL said...

நன்றி padma , simariba!