30.6.10

வேதனை (55 கதை -4)

சுற்றிலும் இருட்டை உணர்ந்தான். கண்களைத் திறக்க முடியவில்லை. உடம்பை சற்றே நெளித்தான். கைகள் நீட்ட முடியாதவாறு மடங்கியிருந்தன. உடல் பிசுபிசுத்தது.

அருகே பேச்சொலி கேட்டது. உதவிக்காக, குரல் வந்த திசையில் நகர்ந்தான். தலையில் ஏதோ இடித்தது.இப்போது வெளியே அலறல் சத்தம் கேட்டது.

பயம் ஏற்பட்டிருக்க வேண்டும்,சற்றே நிதானித்தான்.

இந்த முறை முன்னிலும் வேகமாய் நகர்ந்தான்.
திடீரென்று மேனியில் வெளிச்சம் விழ, பலவந்தமாய் இழுக்கப்பட்டான்.

“அட! ஆம்பள புள்ள...“
கொடுக்கப்பட்ட முதல் அடிக்கு, சத்தமாய் அலறினான்.(55 கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே
http://rithikadarshini.blogspot.com/2010/06/55.html)

28.6.10

கோபமும் சமாதானமும் (55 கதை -3)

அண்ணனுடனான பிரச்சனையில் கோபித்துக் கொண்டு கிளம்பியவன் இன்னமும் வீடு திரும்பவில்லை.
ஊரெல்லாம் தேடிக் கொண்டிருந்தாள் பாட்டி.

வெயில் அவளுக்கு களைப்பை ஏற்படுத்தியது. இருந்தும், தடியை அழுத்தமாய் ஊன்றி நகர்ந்துக் கொண்டிருந்தாள்.

இதோ... ஊரையொட்டிய மலையடிவாரத்தை அடைந்து விட்டாள்.
அவன் இங்கே தான் இருக்க வேண்டுமென்பது அவள் ஊகம்.
கையை கண்களுக்கு அண்டை கொடுத்து, மெல்ல தலையை உயர்த்தி, மலையுச்சியைப் பார்த்தாள்.

அங்கே தண்டி, கோவணத்தோடு ஆண்டியாய் நின்றிருந்தான் முருகன். “ஞானப் பழத்தைப் பிழிந்து” எனத் தொடங்கினாள் ஔவை.(55 கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே
http://rithikadarshini.blogspot.com/2010/06/55.html)

25.6.10

அது அவங்க பிரச்சனை (55 கதை -2)“இந்தக் குழந்தைய, கலச்சுடு!”

“பெண்ணாய் இருந்தாலும் இது நம்ம குழந்தை! என்னால முடியாதுங்க!” ப்ரியா ஆக்ரோஷமாய் கத்தினாள்.

சேகர் பொறுமையிழந்தான்.

ஓரமாய் நின்றுக் கொண்டிருந்த மரகதத்திற்கு படபடப்பாய் இருந்தது. தன் கருத்துக்கு அங்கே மதிப்பில்லை என அவள் உணர்ந்திருந்ததால், எதுவும் பேசவில்லை.

“சொல்லிட்டேயிருக்கேன், எதிர்த்து பேசிட்டேவா இருக்க! உன்னை...” பல்லைக் கடித்தவாறே திரும்பியவனின் கண்களில், அங்கேயிருந்த கத்தி பட்டது.

‘வேண்டாம்’ -பதறினாள் மரகதம்.

கத்தியை எடுத்த சேகர் அப்படியே உறைந்தான்.

பெருமூச்சு விட்டாள் மரகதம்.

‘தொடரும்’ போடப்பட்டது.
(55 கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே
http://rithikadarshini.blogspot.com/2010/06/55.html)

24.6.10

55-வார்த்தைக் கதைகள் (55 – கதை -1)

இவற்றைப் பற்றிய அறிமுகம் சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து கிடைத்தது. மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!

மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் (பஞ்சுவேஷன்ஸ்)வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.


சுஜாதாவின் வரிகள் மீண்டும் இங்கே -

‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’

அவரே இப்படி சொல்லிவிட்ட பின் முயற்சிக்காமல் இருந்தால் எப்படி? தினமும் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன். இதோ என் முதல் 55- வார்த்தைக்கதை .


தலைப்பு: ஓர் பயங்கரமான இரவில்...


கதை:

கதவு படீரென்று சாத்திக்கொண்டது.

விளக்குகள் அளவுக்கதிகமாய் ஒளிர்ந்து உயிரைவிட்டன.

இந்தப் புத்தகம் வேண்டாமென அம்மா சொன்னதைக் கேட்டிருக்கலாம்!

படித்துக் கொண்டிருந்ததை மேசையில் வைத்தேன்.

தூரமாய் நாய் ஊளையிடுவது போல...... பிரம்மை!!!???

உடலெங்கும் சிலிர்த்தது.

படிகளில் பூட்ஸின் டக்...டக், யாரோ ஏறுவது போல... பிரம்... அப்படியென்றால்,
இப்போது கதவைப் பிராண்டுவது.....

சட்டென்று விளக்குகள் எரிந்தன.

கண்ணாடியில் வெண்புகையாய் தெரிந்த என் உருவத்தை விலக்கி, சுவற்றினூடே அடுத்த அறையை நாடினேன். மேசையில் ‘மனிதர்களின் மர்மங்கள்’ என்ற அந்த புத்தகம் படபடத்தது.

22.6.10

பிங்கு ‘மானிட்டர்’ ஆன கதை

அப்பா வேலையிலிருந்து ஏழு மணிக்குத் திரும்பினார்.

ஷீவைக் கழட்டும் போது,

“அப்பா! நாந்தான் எங்க க்ளாஸ் மானிட்டர், தெரியுமா?” என்றாள் பிங்கு.

அப்பாவுக்கு ஒரே சந்தோஷம்.

“குழந்தைய மானிட்டராப் போட்டிருக்காங்களாம். பாத்தியா!",
என்று அம்மாவை நோக்கிக் குரல் கொடுத்துவிட்டு,

"புத்திசாலிக் கொழந்ந்த ய்யிது!” என
பிங்குவைக் கிட்டே இழுத்துக் கொஞ்சினார்.

“உண்மையாவா பிங்கு?” - அம்மா.

“ஆமாம்மா!”

ஆனாலும் அம்மாவுக்கு சந்தேகம். சந்தேகத்திற்கான காரணம் பிறகு.

“நான் டீச்சருக்கு போனடிச்சு கேட்பேன்!”

“கேளுங்க!”

“உண்மையா கேட்பேன் பிங்கு! டீச்சர் உன் கிட்ட அப்பிடி சொன்னாங்களா?”

“இல்லம்மா! நீங்க அன்னிக்கு நான் எப்பிடி படிக்கிறேன்னு டீச்சர்ட்ட கேட்டப்ப, நல்லா
படிக்கிறாள்னு தானே சொன்னாங்க! நல்லாப் படிக்கிறவங்க தானே க்ளாஸ்ல மானிட்டர்? "

என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டு,

"அதனால தான் அப்பிடி சொன்னேன்!” என்றாள்.

ய்ய்ய்யே ய்யப்பா!

அப்பா முகத்தப் பாக்கணுமே!

அம்மாவிற்கு சந்தேகம் வந்ததற்கான காரணம்:

பிங்கு படிப்பது கிண்டர்கார்டன் -2 .அதற்கு மானிட்டர் என்பதே கிடையாது! ஒன்றாம்
வகுப்பிற்கு மேலே தான் இந்த சம்பிரதாயங்கள் எல்லாம்!

18.6.10

எழுதாக் கடிதம் . . .


வயதாகிவிட்டது !

உன்னிடம்

எதையும் எதிர்பார்க்கவில்லை,

அன்பைத் தவிர!

எனக்குத் தேவை

பணமல்ல,

உன் காதுகள் மட்டுமே!


பிள்ளையாய் இருக்கையில்

தனித்து விடப்பட்ட கோபம்

உனக்குள் இருக்கலாம்,

தவறில்லை!

என் வேலை மட்டுமே

முக்கியமாய் போனது அப்போது . . .

உன் கான்வென்ட் படிப்பு,

கணினிப் பாடம் என்று

சூழலும் அதற்கு ஒப்பாய்!


வீடு திரும்பையில்

ஆசையுடன்

நண்பனைப் பற்றி

பேச வருவாய் . . .

என் சலிப்பான பதில் கேட்டு

அன்று வாடிய உன் முகம்

நினைவில் பசுமையாய் . . .


இன்று வலிக்கிறது!

உனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம் . . .


வெற்றுப் பகலில்

சோம்பலாய் ஒற்றைக் காகம் கரையும்

இப்பொழுதினில்

உன் அப்போதைய தனிமை புரிகிறது !


உன் வரவை மட்டுமே கணக்கிட்டு

நகரும் இவ்வாழ்வில்,

சுவை சேர்க்கிறது

உனது வார இறுதி

தொலைப் பேசி அழைப்புகள்.


உதிரப்போகும் கடைசி நாட்களில்

துணையிழந்து நிற்கும்

என் அவசியத் தேவை

உன் அருகாமை மட்டுமே!

12.6.10

மரணங்களுடன் பயணிப்பவர்கள்

ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார் .இது கதையின் தலைப்பு.

ஏழு வயது இலங்கைச் சிறுவன், முதன்முதலாய் மரணத்தைச் சந்திக்கிறான், தன் தந்தையின் மரணத்தை.

பாம்பு அப்பாவைக் கடித்துவிட்டது என்றவுடனேயே எல்லாரும் பதறி, தூக்கிக் கொண்டு றோட்டுக்கு ஓடுகிறார்கள். மணி ஆறரைக்கு மேலே ஆனதால், றோட்டில இந்தியனாமி முள்ளுக்கம்பி போட்டுவிடுகிறார்கள்.அதையெல்லாம் எடுத்தால்தான் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியும் என்றநிலை.

‘சேர் மூர்த்திசேர் பாம்பு கடிச்சிடுத்து சேர்.’ என்று ராணுவத்துடன் கெஞ்சும் குரல்களை மட்டுமே சிறுவனால் கேட்க முடிகிறது.
ஆனால் இந்திய ராணுவம் பலமாய் மறுக்கிறது.

கூட்டத்தில் நசிந்துக் கொண்டிருக்கும் சிறுவன் , கால்களுக்கிடையே புகுந்து அப்பாவிடம் போகிறான். அப்பா அவனைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுகிறார் . அந்தக் கொஞ்சலில் என்றைக்குமில்லாத அழுத்தம் நிரம்பியிருக்கிறது
“அப்பா அப்புசாமியிட்ட போயிட்டு வாறன் பிள்ளை. . வடிவாப் படியுங்கோ” அப்பாவின் குரல் தழுதழுக்கிறது .
அந்த வார்த்தையின் இறுதியையும் நிரந்தரத்தையும் சிறுவனால் அப்போது புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அப்பா செத்துப் போகிறார். யார் யாரோ அவனைக் கட்டிப் பிடித்து அழுகிறார்கள். சிறுவனுக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. அவ்வளவுதான். சிறுவனுக்கு அந்த துக்கம் ஏனென்று புரியவில்லை.

அப்பா இப்போது பொடி (Body) யாகிவிட்டதால் , கையை பொடிக்கு நேரே நீட்டினால் அழுகிவிடுமோ என்ற மூடநம்பிக்கையில், கையை பின்னால் கட்டிக் கொள்கிறான் அவன் .
அப்பாவின் இல்லாமை அப்போதும் அவனை உறுத்தவில்லை.

நடக்கும் சம்பிரதாயங்களை ஒரு பார்வையாளனாய் வாசித்துக் கொண்டிருக்கிறான்.ஆனால் அழவேயில்லை.

கொள்ளிக்குடத்தோடு அவனைத் தோளில் வைத்துக் கொண்டு அப்பாவைச் சுற்றி வந்தபோது அவனுக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்து அழுகிறான்.
கடைசியில் சுடலையில் அப்பாவைக் கொளுத்திய போது , அப்பா இனிமேல் வரவே மாட்டார் என்று அவனுக்கு புரிந்து வீறிட்டுக் கத்துகிறான்.

அப்பாவின் இழப்பு அவனுக்கு அந்த கணத்தில் தான் புரிகிறது .

இந்தக் கதை, எழுத்தாளரின் அனுபவமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆழமான எழுத்துகள் மனதினுள்ளே சென்று தைக்கிறன.கதை 90களின் ஆரம்பத்தில் நடப்பதாய் இருக்கிறது .என்னை மிகவும் பாதித்த கதை இது.

'மரணத்தின் வாசனை – போர் தின்ற சனங்களின் கதை' என்ற தொகுப்பின் முதல் சிறுகதை இது. த. அகிலன் எழுதியது.
http://www.agiilan.com/

இந்தத் தொகுதி முழுவதும் அவர் எதிர் கொள்ளும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மரணங்கள் , வார்த்தைகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன.ஈழத்து மொழி வழக்கு இயல்பாய் பொருந்தி , மரணத்தோடு பயணிக்கும் மக்களின் அனுபவங்களில் மனதை நெகிழ வைக்கிறது.எதுவும் செய்யமுடியாமல் வேடிக்கைப் பார்க்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.கண்டிப்பாய் படிக்க வேண்டிய தொகுப்பு.

இணையம் மூலமாய் புத்தகத்தை வாங்க
http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=42

10.6.10

கடி. . . கடி. . . கடி. . .

ரொம்ப நாள் கழித்து மறுபடி இன்று மொக்கை

1. ஒரு ஒட்டகத்த ஃபிரிட்ஜீக்குள்ள(fridge) எப்படி வெக்கறது?

2.
அ. கழுகுக்கும் மனிதனுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

ஆ. கழுகுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

( உருவ ஒற்றுமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

3.'பாம்பு நம்பர் 2' வுக்கு 'பாம்பு நம்பர் 1' போன் செய்தது.

போனை அடித்தது 'பா.நம்பர்.1' தான் என்று, போனை எடுக்காமலேயே,

'பா.நம்பர்.2' கண்டுபிடித்துவிட்டது. எப்படி?

(இரண்டு பாம்புகளின் வீட்டிலும் காலர் ஐடி இல்லை)

4.எட்டு பாம்புப் புற்றுகள் , உள்ளே பாம்புகளுடன்.

பாம்பாட்டி ஒருவன் அங்கே வந்து மகுடி வாசிக்க,

1,3,5,7 புற்றிலிருந்த பாம்புகள் மட்டும் வெளியே வந்து படம் விரித்து ஆடின. ஏன்?

(பாம்புக்கு காது இருக்கான்னு சம்பந்தமில்லாமல் கேட்கக் கூடாது)

5.Dasaratha is Rama’s father.

Rama is Dasarada’s son.

So Dasaratha is Rama’s father’s _______.

6.ஒரு காட்டிலே மிருகங்களுக்குள்ளே மீட்டிங்.

யானை , புலி , சிங்கம் , நரி, ஓணாய், எல்லாம் வந்தன. ஆனால் ஒரு ஒட்டகம் மட்டும்

வரவில்லை. ஏன்?

பதில்கள் முதல் பின்னூட்டதில்.


மேலே உள்ளவை பிடித்திருந்தால் இதையும் படிக்கலாம்
http://rithikadarshini.blogspot.com/2009/08/blog-post.html