24.6.10

55-வார்த்தைக் கதைகள் (55 – கதை -1)

இவற்றைப் பற்றிய அறிமுகம் சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து கிடைத்தது. மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!

மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் (பஞ்சுவேஷன்ஸ்)வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.


சுஜாதாவின் வரிகள் மீண்டும் இங்கே -

‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’

அவரே இப்படி சொல்லிவிட்ட பின் முயற்சிக்காமல் இருந்தால் எப்படி? தினமும் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன். இதோ என் முதல் 55- வார்த்தைக்கதை .


தலைப்பு: ஓர் பயங்கரமான இரவில்...


கதை:

கதவு படீரென்று சாத்திக்கொண்டது.

விளக்குகள் அளவுக்கதிகமாய் ஒளிர்ந்து உயிரைவிட்டன.

இந்தப் புத்தகம் வேண்டாமென அம்மா சொன்னதைக் கேட்டிருக்கலாம்!

படித்துக் கொண்டிருந்ததை மேசையில் வைத்தேன்.

தூரமாய் நாய் ஊளையிடுவது போல...... பிரம்மை!!!???

உடலெங்கும் சிலிர்த்தது.

படிகளில் பூட்ஸின் டக்...டக், யாரோ ஏறுவது போல... பிரம்... அப்படியென்றால்,
இப்போது கதவைப் பிராண்டுவது.....

சட்டென்று விளக்குகள் எரிந்தன.

கண்ணாடியில் வெண்புகையாய் தெரிந்த என் உருவத்தை விலக்கி, சுவற்றினூடே அடுத்த அறையை நாடினேன். மேசையில் ‘மனிதர்களின் மர்மங்கள்’ என்ற அந்த புத்தகம் படபடத்தது.

7 comments:

கபிலன் said...

நிஜமாகவே...மிரட்டி இருக்கிறீர்கள்...
ஒரு 55 - கதை எழுதும் ஆர்வத்தை தூண்டி
இந்த வார சனி ஞாயிறுக்கு ஒரு இனிய வேலை
கொடுத்தமைக்கு நன்றி.

HVL said...

கருத்துக்கு நன்றி கபிலன்!

சி. கருணாகரசு said...

55 வார்த்தயில் கதை ... சாத்தியமா? என நினைத்தேன் ....
உங்க கதையை படித்த பின் சாத்தியமே!

simariba said...

இப்படி ஒன்று இருப்பதே இப்போதுதான் தெரிந்தது. நன்றி! ரொம்ப நல்லாயிருக்கு கதை!!

HVL said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
simariba ,சி. கருணாகரசு.

பத்மா said...

thrilling

HVL said...

நன்றி பத்மா!