12.6.10

மரணங்களுடன் பயணிப்பவர்கள்

ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார் .இது கதையின் தலைப்பு.

ஏழு வயது இலங்கைச் சிறுவன், முதன்முதலாய் மரணத்தைச் சந்திக்கிறான், தன் தந்தையின் மரணத்தை.

பாம்பு அப்பாவைக் கடித்துவிட்டது என்றவுடனேயே எல்லாரும் பதறி, தூக்கிக் கொண்டு றோட்டுக்கு ஓடுகிறார்கள். மணி ஆறரைக்கு மேலே ஆனதால், றோட்டில இந்தியனாமி முள்ளுக்கம்பி போட்டுவிடுகிறார்கள்.அதையெல்லாம் எடுத்தால்தான் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியும் என்றநிலை.

‘சேர் மூர்த்திசேர் பாம்பு கடிச்சிடுத்து சேர்.’ என்று ராணுவத்துடன் கெஞ்சும் குரல்களை மட்டுமே சிறுவனால் கேட்க முடிகிறது.
ஆனால் இந்திய ராணுவம் பலமாய் மறுக்கிறது.

கூட்டத்தில் நசிந்துக் கொண்டிருக்கும் சிறுவன் , கால்களுக்கிடையே புகுந்து அப்பாவிடம் போகிறான். அப்பா அவனைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுகிறார் . அந்தக் கொஞ்சலில் என்றைக்குமில்லாத அழுத்தம் நிரம்பியிருக்கிறது
“அப்பா அப்புசாமியிட்ட போயிட்டு வாறன் பிள்ளை. . வடிவாப் படியுங்கோ” அப்பாவின் குரல் தழுதழுக்கிறது .
அந்த வார்த்தையின் இறுதியையும் நிரந்தரத்தையும் சிறுவனால் அப்போது புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அப்பா செத்துப் போகிறார். யார் யாரோ அவனைக் கட்டிப் பிடித்து அழுகிறார்கள். சிறுவனுக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. அவ்வளவுதான். சிறுவனுக்கு அந்த துக்கம் ஏனென்று புரியவில்லை.

அப்பா இப்போது பொடி (Body) யாகிவிட்டதால் , கையை பொடிக்கு நேரே நீட்டினால் அழுகிவிடுமோ என்ற மூடநம்பிக்கையில், கையை பின்னால் கட்டிக் கொள்கிறான் அவன் .
அப்பாவின் இல்லாமை அப்போதும் அவனை உறுத்தவில்லை.

நடக்கும் சம்பிரதாயங்களை ஒரு பார்வையாளனாய் வாசித்துக் கொண்டிருக்கிறான்.ஆனால் அழவேயில்லை.

கொள்ளிக்குடத்தோடு அவனைத் தோளில் வைத்துக் கொண்டு அப்பாவைச் சுற்றி வந்தபோது அவனுக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்து அழுகிறான்.
கடைசியில் சுடலையில் அப்பாவைக் கொளுத்திய போது , அப்பா இனிமேல் வரவே மாட்டார் என்று அவனுக்கு புரிந்து வீறிட்டுக் கத்துகிறான்.

அப்பாவின் இழப்பு அவனுக்கு அந்த கணத்தில் தான் புரிகிறது .

இந்தக் கதை, எழுத்தாளரின் அனுபவமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆழமான எழுத்துகள் மனதினுள்ளே சென்று தைக்கிறன.கதை 90களின் ஆரம்பத்தில் நடப்பதாய் இருக்கிறது .என்னை மிகவும் பாதித்த கதை இது.

'மரணத்தின் வாசனை – போர் தின்ற சனங்களின் கதை' என்ற தொகுப்பின் முதல் சிறுகதை இது. த. அகிலன் எழுதியது.
http://www.agiilan.com/

இந்தத் தொகுதி முழுவதும் அவர் எதிர் கொள்ளும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மரணங்கள் , வார்த்தைகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன.ஈழத்து மொழி வழக்கு இயல்பாய் பொருந்தி , மரணத்தோடு பயணிக்கும் மக்களின் அனுபவங்களில் மனதை நெகிழ வைக்கிறது.எதுவும் செய்யமுடியாமல் வேடிக்கைப் பார்க்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.கண்டிப்பாய் படிக்க வேண்டிய தொகுப்பு.

இணையம் மூலமாய் புத்தகத்தை வாங்க
http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=42

7 comments:

விசரன் said...

கனத்துக்கிடக்கிறது மனது

HVL said...

கருத்துக்கு நன்றி விசரன்!

கபிலன் said...

உலகமெங்கிலும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை
நம் சராசரி வாழ்க்கையின் மேல் நாம் கொள்ளும் சலிப்பை ஆழமான கேள்விக்குள்ளாக்குகிறது.
எத்தனை எத்தனை மரணங்கள். என்னதான் சாதிக்கின்றன இந்த அரசுகள்.
இரண்டாம் உலகப்போரின் அவலங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இது.
அப்பாவிகளின் வாழ்க்கையை அல்லல்படுத்தும் போர்கள்.
யாரை நோவது. என்னதான் செய்வது.
எனக்கு தெரிந்ததெல்லாம் போரின் உக்கிரமான மரணங்களுக்கு மேலான சதவிகிதத்தில்
நம் சக மனிதர்களுக்கு செலுத்தும் உக்கிரமான அன்பே ஆகும்.
நல்ல பகிர்வு என்று எழுத மனது வலிக்கிறது.
தமிழிஷ் மற்றும் தமிழ்மணம்-ல் பதியுங்கள்.
-கபிலன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

:-(

சி. கருணாகரசு said...

கதையாக இருந்தாலும்... மனம் நிகழ்வை ஒட்டியே பயணிக்கிறது....
பகிர்வுக்கு நன்றிங்க.

HVL said...

கருத்துக்கு நன்றி கருணாகரசு !

Anonymous said...

Hi there everyone, it's my first pay a visit at this website,
and post is truly fruitful in favor of me, keep up posting such content.


Look at my website - preventing panic attacks (http://en.wikipedia.org/wiki/List_of_Self-help_books)