27.7.10

வேலைச் சுமை (55 வார்த்தைக்கதை -5)

சுந்தரேஸ்வரன் தன் ‘டை’யைத் தளர்த்திக் கொண்டார். இவருக்காக வெளியே பலர் காத்திருந்தனர்.

இவர் புகழ் பாடவும், நிர்வாகக் குறைகளை முறையிடவும் வந்திருந்தவர்களைப் பார்க்க சலிப்பாய் இருந்தது.

தனக்கிருக்கும் வேலைச் சுமைக்கு, இரண்டு யுகங்களாவது விடுமுறை தேவையென அவருக்குப் பட்டது.

இப்போது நேரமாகிவிட்டது. வாசலில் இருந்தவர்களை விலக்கி, அவசரமாய் வெளியேறினார்.

மதுரையின் குறுகிய தெருக்களை அதிவேகமாய் தன் வாகனத்தில் கடந்து, கோயிலினுள்ளே சென்றார். தீபாராதனை காட்டப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்த சுந்தரேஸ்வரனின் கழுத்திலிருந்த ‘டை’ நெளிந்தது.


55-கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே
http://rithikadarshini.blogspot.com/2010/06/55.html

26.7.10

நகைச்சுவையும் கொலைவெறியும்

உள்ளூர் தொ.காவில் ஒளிபரப்பப்படுகிறது ‘ஹா...ஹா...ஹா... சிரிப்பு’ என்ற நிகழ்ச்சி. அது மற்றவர்களிடம் தூண்ட வேண்டிய அடிப்படை உணர்வையும் தாண்டி மேலதிகச் சேவையாக, மற்ற உணர்வுகளையும் கிளறி மகத்தான தொண்டு புரிகிறது என்றால், நான் சொல்வதில் .00001 சதவிகிதம் கூட மிகையில்லை.

•வடிவேலு காப்பாளராக பணிபுரியும் விடுதிக்கு வருகை புரிந்து, அவரைக் கலாய்க்கும் பெண்கள்

•அதே விடுதியில் அவர் தலையில் குட்டியே அவரை வெறுப்பேற்றும் ஆண்கள்

•மற்றொரு வடிவேலு தன் குளிர் பானத்தை ஒரு மொட்டையர் குடித்துவிட்டதாய் நினைத்து அவரை வெளுத்து வாங்கி ,பின் அவரிடமே வாங்கிக் கட்டிக் கொள்ளும் காட்சி.

இதே போல இன்னும் சில காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, மாதக் கணக்கில் மக்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்கு மனனமான பின் ‘அர்ஜீன் அம்மா யாரு ?’ என்று போட்டி வைத்து, வெல்பவர்களுக்கு ஆயிரம் வெள்ளி கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா என்று புரியவில்லை.இல்லை, இவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ஒளிவட்டுகள் தான் இருக்கின்றனவா என்றும் தெரியவில்லை.

இருக்கும் வெறுப்பில் நூறு ஒளி(ஒலி)வட்டு பார்சேல்ல்ல்ல்ல்......... என்று கூவலாம் போல தோன்றுகிறது.

முடிந்த பொழுதெல்லாம் தொ.காவை நிறுத்தியும், பிள்ளைகளின் தயவால் அது முடியாத போது, மற்றொரு முறை பார்த்து கொலைவெறியை ஏற்றிக் கொண்டும் நாட்களைக் கடத்துகிறோம், இன்னும் கொஞ்சம் மாதங்களில் மாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்.

11.7.10

துரோகம்

நம்பிக்கை துரோகம் செய்பவர்களை என்னால் மன்னிக்கவே முடிந்ததில்லை.

அது, அம்மா தருகிறார் என்ற மிகப் பெரிய நம்பிக்கையில், தைரியமாய் சாப்பிடும் குழந்தைக்கு, சாதத்தில் ஒரு துளி விஷத்தை கலந்து ஊட்டுவதற்கு சமம். எதிர்பாரா நேரத்தில் எட்டி உதைக்கும் செயல்.


சில விஷயங்களில் ஒருவரை முழுமையாய் நம்பியிருக்க, கால் வாரப்பட்டு குப்புறவிழும் போது, முதலில் நம் மீதே நமக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது. இவரா துரோகம் செய்தார் என்று சந்தேகமாய் பார்க்கிறோம்.

உண்மையை உணர்ந்ததும் அவர் மீது சொல்லொன்னா வருத்தம் ஏற்படுகிறது. துரோகம் செய்தவருடனான அடிப்படை உறவின் மீதே சந்தேகம் வருகிறது. பிறகு நட்பில் விரிசல். அதன் பிறகு யார் மீதும், எதன் பொருட்டும் நம்பிக்கை வைப்பதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிகப் பெரிய குற்றமாய் நான் கருதுவது இதைத்தான்.
இவர்களையெல்லாம் கண்டிப்பாய் தெய்வம் நின்று தண்டிக்கும். அன்றே தண்டிப்பதை பல முறை கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆழமான தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும், இந்த ஒன்றை மட்டும் ஆணித்தரமாய் நம்புகிறேன்.

9.7.10

தயக்கம்

ஊருக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது. என்ன தான் வெளிநாட்டில் தங்கி இருந்தாலும், வேர்கள் மண்ணை நோக்கியே இழுக்கின்றன. ஜு.வி, செய்திகள் மற்றும் உறவினர்கள் மூலமாய் மட்டுமே, கடந்த சில வருடங்களாய் ஊரை அறிந்திருப்பதால், இந்தியா எப்படி இருக்கிறது என்ற கவலை ஏற்படுகிறது. நான் விட்டு வந்தது போல இல்லை என்று மட்டும் புரிகிறது.

பள்ளியைப் பற்றி, என் முகம் பார்த்து கேள்வி எழுப்பும் பிள்ளைகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
‘அங்கெல்லாம் ஆசிரியர்கள் கொஞ்சம் மண்ணைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தப்பு செய்தால் அதைக் விரலிடுக்கில் எடுத்துக் கொண்டு தொடையில் திருகுவார்களாமே?’
என்று கேட்கும் சின்னவளை என்ன சொல்லி சமாளிப்பது!
நானே அறிந்திராத இது போன்ற தண்டனைகள், அவள் காதுகளுக்கு எப்படி வந்தன என்று புரியவில்லை.
பள்ளிப் பாடங்களை பிள்ளைகளால் சமாளிக்க முடியுமா, என்பது மட்டுமே என் பயம்.

இதெல்லாம் அருவியில் குளிப்பதற்கு முன் ஏற்படும் தயக்கத்தைப் போன்றது . தண்ணீரில் நனைந்தவுடன் தெளிந்து போகக் கூடும். நல்லதையே எதிர்பார்க்கிறேன்.

8.7.10

தோழியின் தொலைப் பேச்சு

கர்ணனுக்கு கவச குண்டலம் எப்படியோ அது போல என் தோழிக்கு கை தொலைப் பேசி. சமைக்கும் போது, சாமான் தேய்க்கும் போது, சாலையில் நடந்துச் செல்லும் போது, ஏன் விருந்தாளிகள் வீட்டிலிருக்கும் போது கூட ,அது அவர் காதுகளை ஒட்டியே இருக்கும்.

கை.தொ.பே. திரையில் அவர் எண்ணைப் பார்த்தால் நானே மிரண்டு போகுமளவு பேசுவார். சென்ற வாரம் அவர் செய்ததால் பெருமையடைந்த சாம்பார், நான் பார்த்தேயிராத அவருடைய ஒன்றுவிட்ட பெரியப்பா பெண் குடும்பம் நடத்தும் அழகு, அவருடைய நாத்தனார் மகனின் பொறுப்பற்ற செயல்கள், இப்படி நீளும் பேச்சு. செய்யும் வேலையை விட்டு விட்டு, பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு எனக்குள் ஏற்படும்.

எனக்கு பொதுவாக போன் என்றால் அலர்ஜி. சற்று அதிகநேரம் பேசி விட்டால், போனைத் தொட்டுக் கொண்டிருக்கும் காது மடல்கள் சூடாகிவிடும். அது தான் எல்லை. அதையும் மீறி பேசும் போது, அந்தச் சூடு மண்டைக்குள் பாய்ந்து தலைவலியை ஏற்படுத்தி , மூளைக்குள் ‘ஞொய்’ என்ற சத்தம் சுத்தி வரும்.

அவருடன் மணிக்கணக்கில் இப்படி பேசுவதை விட கொஞ்சம் நேரம் செலவு செய்து , அவர் வீட்டிற்கே சென்று பேசுவது மேல், என்று தோன்றும். வேலையைக் காரணம் காட்டி பேச்சைச் சுறுக்கிக் கொள்வேன். பேச்சு தான் இப்படியே தவிர, முதல் வரியில் குறிப்பிட்ட இலக்கிய நாயகனைப் போலவே, பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சந்தோஷமாய் வரவேற்றார். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தனர். குடும்ப நலன்களை விசாரித்தபடியே ,மின்விசிறியைப் போட்டு விட்டு , உள்ளே சென்று ஜீஸ் எடுத்து வந்தார். அவர் கை.தொ.பே. ஒலித்தது. பதினைந்து நிமிடம் பேசிவிட்டு, வந்தார். எனக்காகவே அதை கட் செய்துவிட்டார் என்று புரிந்தது.

நாங்கள் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்குள் அடுத்த கால், பிறகு அடுத்தது.

இதைப் போலவே நிறைய பேர் இருப்பார்கள் போல!அன்று அவர் என்னுடன் பேசியதைவிட, தொ.பேசியில் பேசியதே அதிகம். வெறுப்பில், என் தொ.பேசியிலிருந்து அவருக்கு அடித்துப் பேசலாமா என்று கூட தோன்றியது.

அவரைத் தொடர்பு கொள்ள தொலைப் பேசியே சிறந்த சாதனம் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.

6.7.10

புத்தகமும் நானும்....

எனக்கு புத்தகம் படிக்கும் வழக்கம் நான்காம் வகுப்பில் தொடங்கியதாக ஞாபகம்.

அப்பா அப்போது தான் என்னை அருகிலிருந்த நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே நிறைய புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அதுவரை புது பாட புத்தகங்களை ஆசையாய் முகர்ந்திருக்கிறேன். ஆனால் நூலக புத்தகங்களுக்கு வேறு வாசனை இருந்தது.. அது அந்த அறை முழுதும் பரவிக் கிடந்தது.

அப்பாவே ஆரம்பத்தில் புத்தகங்கள் எடுத்துக் கொடுக்க, சுவாரஸ்யமாய் இருந்தது. ஆர்வத்தில் நிறைய பக்கங்கள் சீக்கிரம் புரள ஆரம்பித்தன. அப்பாவுடன் சுற்றுலா செல்லும் போது கூட புத்தகங்கள் உடன் வந்தன. சுற்றுலா முடியும் வரை புத்தகங்கள் நீடிக்காமல் , சீக்கிரம் முடிந்து விடுபவையாக இருந்தன. அப்பாவின் நண்பர் ஒருவர் புத்தகத்தை தலைகீழாக பிடித்து படிக்கும் படி அறிவுரை சொல்லுமளவு ,என் படிக்கும் வேகம் போனது. பிறகு பெரிய புத்தகங்கள்.

ஏழாவது , எட்டாவது படிக்கும் போது லஷ்மியும் , அனுராதா ரமணனும் ஒன்பதாவது படிக்கும் போது பாலகுமாரனனும், பிறகு கல்கியும் அறிமுகமானார்கள். அதன் பிறகு சுஜாதா. இன்று நிறைய எழுத்தாளர்களைப் படிக்கிறேன் என்ற போதும் எழுத்தின் ருசியை எனக்குக் காட்டியவர்கள் இவர்களே!
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவை முதன்முதலாய் எழுத்தை சுவைக்கக் கற்றுக் கொடுத்தன. சுஜாதாவின் கட்டுரைகள் மற்ற எழுத்துகளிலிருந்து வேறுபட்டிருந்தன.

இப்படியாக எழுத்து, என் வாழ்வில் என்னையறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டது.

இன்றும் புத்தகம் எனக்கு எங்கும் துணையாய் வருகிறது. நண்பர்களுடன் பேசும் போது இல்லாத சுகம் புத்தகத்தில் கிடைக்கிறது. உறவினர்களால் ஏற்படும் மனச் சோர்வைக்கூட நிமிடத்தில் மாற்றவல்ல ஆயுதமாகிப் போனது புத்தகம்.
எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது புத்தகத்தையே நாடுகிறேன். அதனுள்ளே அமிழ்ந்து எழுந்தவுடன் எல்லாம் தெளிந்து விடுகிறது. மாயக் கம்பளத்தில் ஏறத் தேவையின்றி என்னை ஒரு உலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு கண நேரத்தில் கடத்தக் கூடிய ஆற்றல் புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது.

புது இடங்களில் சில நாட்கள் தங்க நேர்ந்தால் , நூலகம் எங்கே என்று முதலில் தேடிப் பிடிக்கிறேன். இணைய புத்தகங்களை விட சாதாரண புத்தகங்களே எனக்கு பிடித்திருக்கிறது.

என் சந்தோஷம், கண்ணீர் எல்லாவற்றையும் புத்தகங்களால் அறிந்துக் கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். அது கொடுக்கும் ஆறுதலை எந்த நண்பனாலும் கொடுக்க முடிந்ததில்லை. புத்தகங்கள் புறம் பேசுவதில்லை, சண்டை போடுவதில்லை, மனதை புண்படுத்துவதில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக என்னிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
ஆகையால் புத்தகங்கள் சூழ இருப்பதையே நான் என்றும் விரும்புகிறேன்.

5.7.10

சிங்கையில் மாணவர்களும், கல்வியும்....

சிங்கையில் கல்வி, மாணவர்களுக்கு அனாவசிய மனஅழுத்தத்தைக் கொடுப்பதில்லை. மனப்பாடம் செய்யத் தேவை இல்லாத பாட திட்டம். என்ன ....... விஷயத்தை நன்றாகப் புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ‘டப்பா’ அடித்து ஓட்ட முடியாது.
வீட்டுப் பாடங்கள் நம்மூர் அளவுக்கு இல்லை. ஆசிரியர்கள் மிரட்டுவதில்லை. மாணவர்கள் ஜாலியாய் படிக்கிறார்கள். பார்க்கப் பொறாமையாய் இருக்கிறது.

பள்ளியும் அரை நாள் மட்டுமே! பெற்றோர்களாக துணைபாட வகுப்புகளை இழுத்துவிட்டாலே தவிர, அதிக மன உளைச்சல் இல்லை.

என்மொழி, உன்மொழி என்று அடித்துக் கொள்ளாமல், அவரவர் தாய்மொழியைக் கற்றுக் கொள்ளும் படி மாணவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். சீனம், மலாய், தமிழ் மூன்றிற்குமே இங்கு சம மதிப்பு . குடும்பத்தாருடன் தாய் மொழியில் பேசுங்கள் என்று மாணவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பாடம் மட்டுமே இல்லாமல் மற்ற கலைகளிலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்திய நடனம் , சீன நடனம், ஹார்மோனிகா, அங்கலாங் போன்ற பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுத்து , மேற்படிப்பின் போது இவற்றில் மாணவர்கள் ஆற்றிய பங்கையும் கவனத்தில் கொள்கிறார்கள்.

தமிழர்கள், தமிழில் பேசாமல் இருப்பது குற்றம், என மனதில் பதிய வைக்கிறார்கள்.பேச்சுத் தமிழில் இருந்தாலும் பரவாயில்லை, எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு கதை, கட்டுரை போட்டிகள் வைத்து பரிசு கொடுக்கிறார்கள். வானொலியிலும் , தொ.காவிலும் நல்ல தமிழ் பேசத் தெரிந்தால் மட்டுமே வேலை! கொஞ்சு தமிழெல்லாம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

நிறைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை சிறுவயதிலேயே ஏற்படுத்துகிறார்கள்.இத்தகு ஆவலைத் தூண்டுவதில் நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நூலகர்கள் நம்மை அனாவசியக் கேள்விகள் கேட்காமல், தனியாய் அமர்ந்திருக்கிறார்கள். நாமும் அவர்களை தொந்தரவு செய்யாமல் புத்தகங்களை எடுக்கவும், திருப்பவும் முடிகிறது. பல நல்ல நூல்களை இங்கே தொகுத்து வைத்திருக்கிறார்கள்.
நூலகத்தின் சூழலும், அமைதியாய், படிக்காவிட்டால் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் பாடச் சுமை அதிகம் உள்ளதாய் இங்கேயும் சிலர் குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம்மூருக்கு இழுத்து வந்து ஒரு கல்வியாண்டு படிக்கச் செய்து தண்டிக்க வேண்டும், என்ற ஆவல் ஏற்படுகிறது.

4.7.10

இண்டெர்நெட்டும் இன்லாண்டும்

எழுதுவதை எளிமையாக்க
கணினியும், ஈ-கலப்பையும்
மிச்சப்படுகிறது
நேரமும், சக்தி விரயமும்

விரல் தட்டலில்
ஆஸ்திரேலிய கங்காருவாய்
தொலைதூரம் தாவுகிறது
ஈ-மெயில்

கட்டளைகளை
நொடியில் நிறைவேற்ற
‘எண்டர்’ருக்காய் காத்திருக்கும்
அலாவுதின் ஜீனி
இணையதளம் - ஆனாலும்
இவற்றிலெல்லாம் இல்லை

இன்லாண்டு கடிதத்தின்
நுணுங்கிய எழுத்துக்களில்
இருந்த
ஏதோ ஒன்று. . . . .