8.7.10

தோழியின் தொலைப் பேச்சு

கர்ணனுக்கு கவச குண்டலம் எப்படியோ அது போல என் தோழிக்கு கை தொலைப் பேசி. சமைக்கும் போது, சாமான் தேய்க்கும் போது, சாலையில் நடந்துச் செல்லும் போது, ஏன் விருந்தாளிகள் வீட்டிலிருக்கும் போது கூட ,அது அவர் காதுகளை ஒட்டியே இருக்கும்.

கை.தொ.பே. திரையில் அவர் எண்ணைப் பார்த்தால் நானே மிரண்டு போகுமளவு பேசுவார். சென்ற வாரம் அவர் செய்ததால் பெருமையடைந்த சாம்பார், நான் பார்த்தேயிராத அவருடைய ஒன்றுவிட்ட பெரியப்பா பெண் குடும்பம் நடத்தும் அழகு, அவருடைய நாத்தனார் மகனின் பொறுப்பற்ற செயல்கள், இப்படி நீளும் பேச்சு. செய்யும் வேலையை விட்டு விட்டு, பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு எனக்குள் ஏற்படும்.

எனக்கு பொதுவாக போன் என்றால் அலர்ஜி. சற்று அதிகநேரம் பேசி விட்டால், போனைத் தொட்டுக் கொண்டிருக்கும் காது மடல்கள் சூடாகிவிடும். அது தான் எல்லை. அதையும் மீறி பேசும் போது, அந்தச் சூடு மண்டைக்குள் பாய்ந்து தலைவலியை ஏற்படுத்தி , மூளைக்குள் ‘ஞொய்’ என்ற சத்தம் சுத்தி வரும்.

அவருடன் மணிக்கணக்கில் இப்படி பேசுவதை விட கொஞ்சம் நேரம் செலவு செய்து , அவர் வீட்டிற்கே சென்று பேசுவது மேல், என்று தோன்றும். வேலையைக் காரணம் காட்டி பேச்சைச் சுறுக்கிக் கொள்வேன். பேச்சு தான் இப்படியே தவிர, முதல் வரியில் குறிப்பிட்ட இலக்கிய நாயகனைப் போலவே, பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சந்தோஷமாய் வரவேற்றார். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தனர். குடும்ப நலன்களை விசாரித்தபடியே ,மின்விசிறியைப் போட்டு விட்டு , உள்ளே சென்று ஜீஸ் எடுத்து வந்தார். அவர் கை.தொ.பே. ஒலித்தது. பதினைந்து நிமிடம் பேசிவிட்டு, வந்தார். எனக்காகவே அதை கட் செய்துவிட்டார் என்று புரிந்தது.

நாங்கள் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்குள் அடுத்த கால், பிறகு அடுத்தது.

இதைப் போலவே நிறைய பேர் இருப்பார்கள் போல!அன்று அவர் என்னுடன் பேசியதைவிட, தொ.பேசியில் பேசியதே அதிகம். வெறுப்பில், என் தொ.பேசியிலிருந்து அவருக்கு அடித்துப் பேசலாமா என்று கூட தோன்றியது.

அவரைத் தொடர்பு கொள்ள தொலைப் பேசியே சிறந்த சாதனம் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.

7 comments:

soundr said...

//வெறுப்பில், என் தொ.பேசியிலிருந்து அவருக்கு அடித்துப் பேசலாமா என்று கூட தோன்றியது//

:)

http://vaarththai.wordpress.com

HVL said...

நன்றி soundr

Thekkikattan|தெகா said...

என்னாத்தை சொல்லுறது போங்க, வேதனையான உண்மை... :))

கபிலன் said...

கொஞ்சம் கஷ்டம் தான்...
அவருக்கும்...உங்களுக்கும்...
//அதையும் மீறி பேசும் போது, அந்தச் சூடு மண்டைக்குள்
பாய்ந்து தலைவலியை ஏற்படுத்தி , மூளைக்குள் ‘ஞொய்’ என்ற சத்தம் சுத்தி வரும்//
அதே அதே...

simariba said...

இது நான் இல்லனு பெருமைபட்டுக்குறேன். ஆனாலும் உங்க கூட போன்ல கொஞ்சம் பார்த்து தான் பேசனும் போலருக்கு. சரி எழுதியிருக்கிற பாங்கு நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

HVL said...

இது நமக்கு இல்லை. நீங்க போன் செய்யலன்னாலும் நான் செஞ்சிடுவேன்.

சு.மோகன் said...

தொலைபேசியில் பேசுவதில் சில வசதிகள் இருக்கின்றன. எதிராளியின் முகக் குறிப்பு தெரியாது, என்ன வேண்டுமானாலும் பேசலாம்.