31.8.10

ஏதோ ஒன்று

இதைத் தான் எழுத வேண்டும் என்று எண்ணாமல், மனம் போன போக்கில் என் விரல்கள் தட்டிய ஏதோ ஒன்று. . .

ஏழ்மை
------------

இருள் வானில் ஓட்டை

தெரிகிறது அந்தப் பக்கம்

பௌர்ணமி நிலவு

********************************************
வானூர்தி
---------------

பறக்கும் ரயிலுக்கென

போட்ட அந்தரத் தண்டவாளம்

வானவில் கோடுகள்

*********************************************

28.8.10

ஏன் எழுதுகிறேன் ?

இருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு இப்படி கணினியின் முன் அமர்ந்து ஏன் வெட்டியாய் தட்டிக் கொண்டிருக்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்.

மற்ற கடமைகளைச் செய்யும் போது அலைபாயும் மனது, ஏனோ எழுதும் போது மட்டுமே குற்ற உணர்வின்றி இருக்கிறது.
இது தான் என் பேட்டை (சுஜாதாவுக்கு நன்றி!)என்று தோன்றுகிறது.

சில வேளைகளில் ஏற்படும் மன அழுத்தங்களை, எழுத்தின் மூலம் மட்டுமே கரைக்க முடிகிறது. மனம் சோர்வாய் இருக்கும் போது, மைக்ரோசாப்ட் வார்டைத் திறந்து ஏதோ ஒரு குதிரையைப் பற்றி எழுத ஆரம்பித்தால், என் சோர்வு அந்த குதிரையின் முதுகில் ஏறிக் கொண்டுவிடுகிறது. வார்த்தைகளில் சுற்றிவிட்டுத் திரும்பும் போது புத்துணர்ச்சி அடைந்து விதியை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறது.

சில நல்ல எழுத்துக்களைப் படிக்கும் பொழுதும் மனம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. மற்றவர்களுக்கு சிறந்ததாய்த் தோன்றும் அனைத்து எழுத்துகளும் எனக்கு பிடித்தமானதாய் இருந்ததில்லை. எந்த எழுத்தால் என் மனதிற்குள் நுழைத்து, என்னைத் தன்னுடன் கடத்திப் போக முடிகிறதோ, அதுவே எனக்கு பிடித்தமானதாய் இருக்கிறது.

நான் ஓட்டுப் போட்டாச்சு, நீயும் போடு போன்ற அன்புக் கட்டளைகள் எனக்கு ஒத்து வருவதில்லை. என்னை மிகவும் பாதித்த பதிவுகளுக்கு நான் கண்டிப்பாய் பின்னூட்டமிடுகிறேன். சில சிறந்த பதிவுகளெல்லாம் என்னை பாதிக்காமல் போயிருக்கின்றன. என் சிற்றறிவுக்கும், அனுபவத்திற்கும், அவற்றின் பிரம்மாண்டம் அதிகமானதாய் இருந்திருக்கிறது. அவற்றுடன் என்னால் ஒன்றிப்போக முடியவில்லை. அவற்றை ஜீரணிக்க இன்னும் சற்று கால அவகாசம் தேவைப்படலாம்.

எதிர்காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளராக வேண்டும், இதில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இப்போதைக்கு இல்லை. அதே போல என் எழுத்துகளுக்கு கண்டிப்பாய் அங்கீகாரம் தேவை என்றும் தோன்றவில்லை. என் எழுத்தால் மற்றவர் மனதை பாதிக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைகிறேன், இல்லையென்றால் வருத்தப்படுவதில்லை. அங்கீகாரமற்ற நிலையை, இன்னமும் என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள ஏற்பட்ட ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன்.

25.8.10

சாமி மாமா

அப்போதெல்லாம் அவர் என் போன்ற சிறு பிள்ளைகளுக்கு சாமி மாமா தான். உண்மையான பெயர் மணி மாமா என்பது ரொம்ப வருடங்கள் கழித்து தான் தெரியும். கழுத்தில் ரப்பர் பாம்பையும், இடையில் புலித்தோலையும் சுற்றிவிட்டால் சிவன் வேடம் போட்ட சிவாஜி போல இருப்பார் என்று நினைத்துக் கொள்வேன். அப்படி ஒரு கம்பீரம்!

கைகளிலும், மார்பிலும் பட்டையடித்துக் கொண்டு சத்தமாய் பேசுவார். சிறுமிகளைப் பார்த்தால் ‘என்னய கல்யாணம் கட்டிக்கறியாடி?' என்று கேட்டுவிட்டு பலமாய் சிரிப்பார். மார்கழி மாத விடியலில் சாமி மாமா தலைமையில் செல்லும் பஜனைக் குழு , மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் .

ஓங்கிய குரலில் தாளச்சத்தத்துடன் இயைந்த அவர் பாடல்களே, மார்கழித் திங்களில் எங்களுக்கு அலாரம் க்ளாக். விடியலின் நறுமணமேறிய காற்று நுரையீரலை நிரப்ப, அடந்த பனி தலையில் சில்லென்று இறங்க, அம்மா போட்ட பூசணிப்பூ கோலத்தை கலைக்காமல் ஒதுங்கி நின்று, பாதித் தூக்கமும் பாதி விழிப்புமாய் அந்தக் குழுவை கவனித்தது இன்றும் எனக்குள் கலையாமல் இருக்கிறது.

குளித்து முடித்து கோயிலுக்குப் போகும் போது பிள்ளையார், சாமி மாமாவின் உதவியோடு அலங்காரத்தை முடித்துக் கொண்டு பிரசாதத்துடன் தயாராய் இருப்பார்.

எங்களுக்கு, மிளகு, சீரகம் மற்றும் அங்கங்கே எட்டிப்பார்க்கும் முந்திரியுடன் வெண்பொங்கல் சுடச்சுட தொன்னையில் கிடைக்கும் .மாலா,என்னுடனே வந்தாலும் வரிசையினிடையே எப்படியோ நுழைந்து, எனக்கு முன்னால் பொங்கலை வாங்கி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வாள்.

தொன்னை முடிந்து போன சில நாட்களில் பொங்கல் சூடாக கையில் வந்து விழும். கை பற்றிக் கொண்டாலும் , கைமாற்றி , கைமாற்றி அதைச் ஊதிச் சாப்பிட்டிருக்கிறேன். அந்த பொங்கலின் தனிருசிக்கு சூடும் ஒரு காரணமாய் இருந்திருக்க வேண்டும். சாப்பிட்ட பின்னும், சிகப்பேறிய கைகளில் அந்தச் சூடு மிச்சமிருக்கும். இன்றுவரை பால்ய நினைவுகளுடன் கலந்து ருசிக்கும் அந்த பொங்கலுக்கு ஈடான பொங்கலை வேறு எங்கும் நான் சாப்பிட்டது இல்லை .

சபரிமலைக்குச் செல்லும் போது அதே கோயில், திருவிழா கோலம் பூண்டிருக்கும். சாமி மாமாவின் சிம்மக் குரலில் ஐயப்பப் பாடல்கள் ஒலிப்பெருக்கியினூடாக பிளாக் பூராவும் எதிரொலிக்கும்.

சாமி கும்பிட்டுவிட்டு வரும் படி வற்புறுத்தும் அம்மாவை சமாளிக்க , நண்பர்களுடன் கோயிலுக்குச் செல்வேன். நண்பர்கள் அனைவரும் சாமி மாமாவின் கால்களில் விழ, அவர்கள் நெற்றியில் நீறு பூசி விடுவார். அப்போதெல்லாம் எனக்கு ஏனோ மற்றவர் காலில் விழ தயக்கமாய் இருக்கும். நண்பன் நெற்றியிலிருந்த திருநீற்றை கட்டைவிரலால் தடவி பூசிக் கொண்டு அம்மாவை ஏமாற்றியிருக்கிறேன்.

இப்படியாக என் பால்ய காலத்து ஆன்மீக நினைவுகள் சாமி மாமா சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் இடம் பெயர்ந்தாலும், அவ்வப்போது சாமி மாமா பற்றிய செய்திகள் என் காதுகளுக்கு வந்துக் கொண்டு தான் இருந்தன.

மூன்று வருடங்களுக்கு முன் கோமாவில் விழுந்த சாமி மாமா , இரண்டு வருடங்கள் நினைவு திரும்பாமல் , உடல் மெலிந்து செத்துப் போனார். அவரில்லா விட்டாலும் அவரது நினைவுகள், எனக்கும், என்னுடன் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டு பின் நாட்களில் இடம் பெயர்ந்தவர்களுக்கும், பெயராதவர்களுக்கும் கண்டிப்பாய் இருக்கும்.

12.8.10

பொம்பள மனசுல...

யாருக்கோ கேட்க வேண்டும் என்பது போல அவன் சத்தமாய் பேசினான்.

“எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தார் தெரியுமா!”

“சங்கராபுரத்திலேருந்து பஸ் புடிச்சா காசாகும். அந்தக் காசு இருந்தா புள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போலாம்னு எங்களுக்கு பொட்டலம் வாங்கிகிட்டு நாலு கிலோ மீட்டர் நடந்தே வருவாரு...”

இவளுக்கு அப்பா, பெண்ணின் சந்தோஷத்துக்காகத் தன் உணவைத் துறந்து, கடையில் பூரி வாங்கிக் கொடுத்தது ஞாபகம் வந்தது.

“எங்க ரெண்டு பேரையும் சைக்கிள்ள உட்கார வச்சி மெதிச்சே தான் தெனமும் ஸ்கூலுக்கு கொண்டுவிடுவாரு...”

“ பத்தாவது பரீட்சையிம்போது எக்ஸாம் ஃபீஸ் கட்டணும்னு சொன்னப்ப, ஒடனே ஓடிப்போய் வட்டிக்கு வாங்கிட்டு வந்து அப்படியே எங்கிட்ட கொடுத்தாரு...”

இவளின் அப்பா அதற்காகத் தன் சைக்கிளை அடமானம் வைத்திருந்தார்.

“எங்களுக்கு முழுசா வயிறு நெறய சாப்பாடு போட்டுட்டு, அவரு அர வயிறு சாப்பிட்டிருக்கார்”

தன் வீட்டில் மூன்று வேலை சாப்பாடே எப்போதாவது தான் என்பது இவள் நினைவுக்கு வந்தது. அதுவும் அப்பாவுக்கு காலை முதல் இரவு வரை செய்ய வேலை கிடைக்கும் போது மட்டுமே.

நிறைய நாள் பழஞ்சோறு பெண்களுக்கு அளிக்கப்பட்டு, ஒரு கை சாதத்தில் கரைக்கப்பட்ட அதன் நீர் மட்டும் பெற்றோரின் பசியை ஏமாற்றியிருக்கிறது.

“எங்களப் படிக்க வெக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார் தெரியுமா? இன்னிக்கு வெவசாயி புள்ள சூப்பர்வைசராயிருக்கேன்னா முழுக்க முழுக்க எங்கப்பா தான் காரணம்...”

“இவரப் போயி எதுத்துப் பேசற! ஒழுங்கா இருக்கறதாயிருந்தா இரு, இல்ல ஒங்கப்பன் வீட்டுக்கு ஓடிப் போயிடு.”

இவளுக்கும் கோபம் வந்தது.
மூச்சுக்காற்று வேகமாய் உள்வந்து வெளியேறியது.
கண்களில் நீர் வெளியே வந்து விடுவேன் என்று பயமுறுத்தியது.

“ஒலகத்துல ஒங்கப்பா மட்டுமில்ல, எல்லா அப்பாவும் இப்படித் தான். நான் என்ன கேட்டேன்? எங்கப்பா வீட்டுக்கு வந்தாரு. ஒரு நா ராத்தங்கிப் போங்கன்னு சொல்லக்கூடாதா? அப்படியே சொன்னாலும் அவர் தங்கப் போறதில்ல! ஒரு பேச்சுக்குத் தான் அப்பிடி சொல்லக் கூடாதா?”

“இத்தன நா ஒங்களுக்காக தானே மழ, வெயில், ஜீரம், சளின்னு பாக்காம ஒழக்கிறேன். ஆட்டுக்கறிக் கொழம்பையும், உப்பில்லா பத்தியத்தையும் தனித் தனியா பாத்துப் பாத்து செய்யிறேன். எனக்குன்னு என்ன வச்சி வாழுது! எனக்காக இதக் கூட செய்யக் கூடாதா.....”

“நீ நெனச்சா வச்சி வாழறதுக்கும் , எட்டி ஒதச்சா ஓடிப் போறதுக்கும், எங்கப்பா என்னிய மட்டும் தவுட்டுக்கா வாங்கினாரு”

“ஒங்கப்பா செஞ்ச எல்லாத்தையும் எங்கப்பாவும் செஞ்சிருக்காரு. புள்ளைய பெத்ததால இவரு ஒசந்துட்டாரு. நானுந்தேன் சம்பளமில்லாம வேலச் செய்யுறேன். எங்கப்பாருக்குன்னு பொரி கடலையாவது வாங்கிப் போக முடியுதா!”

இதையெல்லாம் கேட்க நினைத்து கேட்காமல் ஆத்திரத்துடன், அமைதியாய் உள்ளே சென்றாள்.

5.8.10

வார இறுதி அறுவைப் படமும், ஒரு ரசிகையும் ...

இப்போது உள்ளூர் சானலில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்து விட்டது . இதில் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ என் குட்டிப் பெண்ணுக்கு நிறைய.

இன்னின்ன படங்கள் இன்றின்று என்ற அறிவிப்பை உன்னிப்பாக கவனித்து வைக்கும் அவள், இந்த வாரம் இன்னின்ன படங்களை பார்க்கப் போகிறேன் என்ற அறிக்கையையும் முதலிலேயே வெளியிட்டு விடுகிறாள்.

விளையாட்டாக வார முதலில் ஆரம்பிக்கும் இந்த அறிவிப்பு, வார இறுதியின் நெருக்கத்தில் தீவிரமாகிவிடுகிறது. மணி பார்க்கத் தெரியாவிட்டாலும் தமக்கையின் உதவியோடு படம் ஆரம்பிக்கும் நேரத்தைக் கண்டுபிடித்து உட்கார்ந்துவிடுகிறாள். உதாரணமாக

திங்கள்:


‘அய்ய்ய்ய்.... இந்த வாரம் ‘குருவி’ படம். நாம்பாக்கப்போறேன்’


‘நீதான் ஏற்கனவே ஒரு முறை பார்த்தாச்சே!!!!’

‘அது மறந்துப் போச்சுப்பா. அதனால இந்த சண்டே மட்டும்ப்பா, ப்ளீஸ்’


செவ்வாய்:


‘அக்கா வர சண்டே தான ‘குருவி’!!!!!’

‘அம்மா! வர சண்டே நைன்னோ க்ளாக் நான் குருவி பாக்கப் போறேன்!’

‘அதுல வந்துட்டான்யா அங்கிள் இல்லையே!’

‘பரவாயில்லம்மா! சிவகாசி அங்கிள் இருக்கார்’


புதன்:

‘அம்மா இந்த சண்டே ஜாலி ! ‘குருவி’ படம் பாக்கப் போறேன். உனக்கு
சிவகாசி அங்கிள் கூடவே வருவாரே, அந்த அங்கிளைப் பிடிக்கும்ல்ல’


வியாழன்:

‘அம்மா மறந்துடாத...! உனக்கு பிடிச்ச அங்கிளோட படம் வரப்போகுது.
சண்டே நைன்னோ க்ளாக்’

வெள்ளி:

‘அப்பா, இன்னும் ஒன் டேல அம்மாக்குப் பிடிச்ச அங்கிளோட படம்.
நாங்க பாக்கப் போறோம்.’

‘எனக்குப் பிடிக்கும்ன்னு யார் சொன்னது?’

‘அம்மா, அந்த அங்கிள் நடிச்ச படத்த பார்த்து அன்னிக்கு நீ சிரிச்சல்ல!’

சனி:

‘அப்பா , நாளைக்கு ‘குருவி’ மறந்துடக் கூடாது.’

‘அதெல்லாம் பார்க்கக் கூடாது. பார்த்த படத்தையே எத்தன முறை பாக்கறது!’

‘அப்பா , அத நான் ஃபுல்லா பாக்கல.’

‘ஏய்... அன்னிக்கு நாந்தான் உன் கூட உட்கார்ந்து பார்த்தேனே!’

‘நீங்க எனக்கு முன்னாலேயே பொறந்துட்டீங்க. அதால எல்லாத்தையும் பார்த்துட்டீங்க. நான் இன்னும் பார்க்கல!!!’

திங்களிலிருந்து இந்த உரையாடல்களின் ஃப்ரீகுவென்சி மெதுவாய் அதிகரித்து, ஞாயிறு அன்று உச்சத்தை அடைந்து, அடமாய் மாறி ‘குருவி’ பார்க்கும் வரை ஓய்வதில்லை. குருவி மட்டும் அல்ல, எந்தப் அடாசு படமாயிருந்தாலும்.

இந்த டெக்னிக் புரிந்துவிட்டதில், இந்த வாரம் முதல் எங்கள் வீட்டில், தேவையில்லாத படங்களுக்கு தடையுத்தரவு அமலுக்கு வருகிறது. அதை அவளுடைய முறையிலேயே திங்களிலிருந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.