5.8.10

வார இறுதி அறுவைப் படமும், ஒரு ரசிகையும் ...

இப்போது உள்ளூர் சானலில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்து விட்டது . இதில் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ என் குட்டிப் பெண்ணுக்கு நிறைய.

இன்னின்ன படங்கள் இன்றின்று என்ற அறிவிப்பை உன்னிப்பாக கவனித்து வைக்கும் அவள், இந்த வாரம் இன்னின்ன படங்களை பார்க்கப் போகிறேன் என்ற அறிக்கையையும் முதலிலேயே வெளியிட்டு விடுகிறாள்.

விளையாட்டாக வார முதலில் ஆரம்பிக்கும் இந்த அறிவிப்பு, வார இறுதியின் நெருக்கத்தில் தீவிரமாகிவிடுகிறது. மணி பார்க்கத் தெரியாவிட்டாலும் தமக்கையின் உதவியோடு படம் ஆரம்பிக்கும் நேரத்தைக் கண்டுபிடித்து உட்கார்ந்துவிடுகிறாள். உதாரணமாக

திங்கள்:


‘அய்ய்ய்ய்.... இந்த வாரம் ‘குருவி’ படம். நாம்பாக்கப்போறேன்’


‘நீதான் ஏற்கனவே ஒரு முறை பார்த்தாச்சே!!!!’

‘அது மறந்துப் போச்சுப்பா. அதனால இந்த சண்டே மட்டும்ப்பா, ப்ளீஸ்’


செவ்வாய்:


‘அக்கா வர சண்டே தான ‘குருவி’!!!!!’

‘அம்மா! வர சண்டே நைன்னோ க்ளாக் நான் குருவி பாக்கப் போறேன்!’

‘அதுல வந்துட்டான்யா அங்கிள் இல்லையே!’

‘பரவாயில்லம்மா! சிவகாசி அங்கிள் இருக்கார்’


புதன்:

‘அம்மா இந்த சண்டே ஜாலி ! ‘குருவி’ படம் பாக்கப் போறேன். உனக்கு
சிவகாசி அங்கிள் கூடவே வருவாரே, அந்த அங்கிளைப் பிடிக்கும்ல்ல’


வியாழன்:

‘அம்மா மறந்துடாத...! உனக்கு பிடிச்ச அங்கிளோட படம் வரப்போகுது.
சண்டே நைன்னோ க்ளாக்’

வெள்ளி:

‘அப்பா, இன்னும் ஒன் டேல அம்மாக்குப் பிடிச்ச அங்கிளோட படம்.
நாங்க பாக்கப் போறோம்.’

‘எனக்குப் பிடிக்கும்ன்னு யார் சொன்னது?’

‘அம்மா, அந்த அங்கிள் நடிச்ச படத்த பார்த்து அன்னிக்கு நீ சிரிச்சல்ல!’

சனி:

‘அப்பா , நாளைக்கு ‘குருவி’ மறந்துடக் கூடாது.’

‘அதெல்லாம் பார்க்கக் கூடாது. பார்த்த படத்தையே எத்தன முறை பாக்கறது!’

‘அப்பா , அத நான் ஃபுல்லா பாக்கல.’

‘ஏய்... அன்னிக்கு நாந்தான் உன் கூட உட்கார்ந்து பார்த்தேனே!’

‘நீங்க எனக்கு முன்னாலேயே பொறந்துட்டீங்க. அதால எல்லாத்தையும் பார்த்துட்டீங்க. நான் இன்னும் பார்க்கல!!!’

திங்களிலிருந்து இந்த உரையாடல்களின் ஃப்ரீகுவென்சி மெதுவாய் அதிகரித்து, ஞாயிறு அன்று உச்சத்தை அடைந்து, அடமாய் மாறி ‘குருவி’ பார்க்கும் வரை ஓய்வதில்லை. குருவி மட்டும் அல்ல, எந்தப் அடாசு படமாயிருந்தாலும்.

இந்த டெக்னிக் புரிந்துவிட்டதில், இந்த வாரம் முதல் எங்கள் வீட்டில், தேவையில்லாத படங்களுக்கு தடையுத்தரவு அமலுக்கு வருகிறது. அதை அவளுடைய முறையிலேயே திங்களிலிருந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

5 comments:

நர்சிம் said...

;)

HVL said...

வாங்க நர்சிம்!

ராம்ஜி_யாஹூ said...

அருமை. நான் கூட வடிவேலு அங்கிள் படம் என்று நினைத்து விட்டேன், விஜய் அங்கிள் படமா, ஓகே ஓகே

HVL said...

நன்றி ராம்ஜி_யாஹூ!

சு.மோகன் said...

தொடர்ந்து பின்னூட்டமிடுவதால் ‘சொறிகிறேன்’ என்று நினைத்துவிடாதீர்கள். பதிவுலகம் தரும் மயக்கத்தில், பிரபலமாக ஆசைப்பட்டு பொருளற்ற கண்டதையும் எழுதுபவர்களுக்கு மத்தியில், முழுமையாக உங்களுக்குப் பிடித்ததை, உங்களுக்கு ப் பிடித்தவிதத்தில் எழுதி வருவது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள், மீண்டும் வருகிறேன்