25.8.10

சாமி மாமா

அப்போதெல்லாம் அவர் என் போன்ற சிறு பிள்ளைகளுக்கு சாமி மாமா தான். உண்மையான பெயர் மணி மாமா என்பது ரொம்ப வருடங்கள் கழித்து தான் தெரியும். கழுத்தில் ரப்பர் பாம்பையும், இடையில் புலித்தோலையும் சுற்றிவிட்டால் சிவன் வேடம் போட்ட சிவாஜி போல இருப்பார் என்று நினைத்துக் கொள்வேன். அப்படி ஒரு கம்பீரம்!

கைகளிலும், மார்பிலும் பட்டையடித்துக் கொண்டு சத்தமாய் பேசுவார். சிறுமிகளைப் பார்த்தால் ‘என்னய கல்யாணம் கட்டிக்கறியாடி?' என்று கேட்டுவிட்டு பலமாய் சிரிப்பார். மார்கழி மாத விடியலில் சாமி மாமா தலைமையில் செல்லும் பஜனைக் குழு , மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் .

ஓங்கிய குரலில் தாளச்சத்தத்துடன் இயைந்த அவர் பாடல்களே, மார்கழித் திங்களில் எங்களுக்கு அலாரம் க்ளாக். விடியலின் நறுமணமேறிய காற்று நுரையீரலை நிரப்ப, அடந்த பனி தலையில் சில்லென்று இறங்க, அம்மா போட்ட பூசணிப்பூ கோலத்தை கலைக்காமல் ஒதுங்கி நின்று, பாதித் தூக்கமும் பாதி விழிப்புமாய் அந்தக் குழுவை கவனித்தது இன்றும் எனக்குள் கலையாமல் இருக்கிறது.

குளித்து முடித்து கோயிலுக்குப் போகும் போது பிள்ளையார், சாமி மாமாவின் உதவியோடு அலங்காரத்தை முடித்துக் கொண்டு பிரசாதத்துடன் தயாராய் இருப்பார்.

எங்களுக்கு, மிளகு, சீரகம் மற்றும் அங்கங்கே எட்டிப்பார்க்கும் முந்திரியுடன் வெண்பொங்கல் சுடச்சுட தொன்னையில் கிடைக்கும் .மாலா,என்னுடனே வந்தாலும் வரிசையினிடையே எப்படியோ நுழைந்து, எனக்கு முன்னால் பொங்கலை வாங்கி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வாள்.

தொன்னை முடிந்து போன சில நாட்களில் பொங்கல் சூடாக கையில் வந்து விழும். கை பற்றிக் கொண்டாலும் , கைமாற்றி , கைமாற்றி அதைச் ஊதிச் சாப்பிட்டிருக்கிறேன். அந்த பொங்கலின் தனிருசிக்கு சூடும் ஒரு காரணமாய் இருந்திருக்க வேண்டும். சாப்பிட்ட பின்னும், சிகப்பேறிய கைகளில் அந்தச் சூடு மிச்சமிருக்கும். இன்றுவரை பால்ய நினைவுகளுடன் கலந்து ருசிக்கும் அந்த பொங்கலுக்கு ஈடான பொங்கலை வேறு எங்கும் நான் சாப்பிட்டது இல்லை .

சபரிமலைக்குச் செல்லும் போது அதே கோயில், திருவிழா கோலம் பூண்டிருக்கும். சாமி மாமாவின் சிம்மக் குரலில் ஐயப்பப் பாடல்கள் ஒலிப்பெருக்கியினூடாக பிளாக் பூராவும் எதிரொலிக்கும்.

சாமி கும்பிட்டுவிட்டு வரும் படி வற்புறுத்தும் அம்மாவை சமாளிக்க , நண்பர்களுடன் கோயிலுக்குச் செல்வேன். நண்பர்கள் அனைவரும் சாமி மாமாவின் கால்களில் விழ, அவர்கள் நெற்றியில் நீறு பூசி விடுவார். அப்போதெல்லாம் எனக்கு ஏனோ மற்றவர் காலில் விழ தயக்கமாய் இருக்கும். நண்பன் நெற்றியிலிருந்த திருநீற்றை கட்டைவிரலால் தடவி பூசிக் கொண்டு அம்மாவை ஏமாற்றியிருக்கிறேன்.

இப்படியாக என் பால்ய காலத்து ஆன்மீக நினைவுகள் சாமி மாமா சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் இடம் பெயர்ந்தாலும், அவ்வப்போது சாமி மாமா பற்றிய செய்திகள் என் காதுகளுக்கு வந்துக் கொண்டு தான் இருந்தன.

மூன்று வருடங்களுக்கு முன் கோமாவில் விழுந்த சாமி மாமா , இரண்டு வருடங்கள் நினைவு திரும்பாமல் , உடல் மெலிந்து செத்துப் போனார். அவரில்லா விட்டாலும் அவரது நினைவுகள், எனக்கும், என்னுடன் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டு பின் நாட்களில் இடம் பெயர்ந்தவர்களுக்கும், பெயராதவர்களுக்கும் கண்டிப்பாய் இருக்கும்.

3 comments:

பத்மா said...

நல்லா எழுதிருக்கீங்க ....மார்கழிப் பொங்கலின் சுவையே தனி தான் ...ருசித்த ரசனை சிறப்பு
..

HVL said...

மிக்க நன்றி பத்மா!

சு.மோகன் said...

நண்பரே,

என்னுடைய பால்ய வயது நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள். உங்கள் சாமி மாமா இன்னும் உங்களுடன்தான் இருக்கிறார், இதுபோன்ற நினைவுகள் மூலமாக.

பகிர்ந்தமைக்கு நன்றி!