28.8.10

ஏன் எழுதுகிறேன் ?

இருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு இப்படி கணினியின் முன் அமர்ந்து ஏன் வெட்டியாய் தட்டிக் கொண்டிருக்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்.

மற்ற கடமைகளைச் செய்யும் போது அலைபாயும் மனது, ஏனோ எழுதும் போது மட்டுமே குற்ற உணர்வின்றி இருக்கிறது.
இது தான் என் பேட்டை (சுஜாதாவுக்கு நன்றி!)என்று தோன்றுகிறது.

சில வேளைகளில் ஏற்படும் மன அழுத்தங்களை, எழுத்தின் மூலம் மட்டுமே கரைக்க முடிகிறது. மனம் சோர்வாய் இருக்கும் போது, மைக்ரோசாப்ட் வார்டைத் திறந்து ஏதோ ஒரு குதிரையைப் பற்றி எழுத ஆரம்பித்தால், என் சோர்வு அந்த குதிரையின் முதுகில் ஏறிக் கொண்டுவிடுகிறது. வார்த்தைகளில் சுற்றிவிட்டுத் திரும்பும் போது புத்துணர்ச்சி அடைந்து விதியை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறது.

சில நல்ல எழுத்துக்களைப் படிக்கும் பொழுதும் மனம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. மற்றவர்களுக்கு சிறந்ததாய்த் தோன்றும் அனைத்து எழுத்துகளும் எனக்கு பிடித்தமானதாய் இருந்ததில்லை. எந்த எழுத்தால் என் மனதிற்குள் நுழைத்து, என்னைத் தன்னுடன் கடத்திப் போக முடிகிறதோ, அதுவே எனக்கு பிடித்தமானதாய் இருக்கிறது.

நான் ஓட்டுப் போட்டாச்சு, நீயும் போடு போன்ற அன்புக் கட்டளைகள் எனக்கு ஒத்து வருவதில்லை. என்னை மிகவும் பாதித்த பதிவுகளுக்கு நான் கண்டிப்பாய் பின்னூட்டமிடுகிறேன். சில சிறந்த பதிவுகளெல்லாம் என்னை பாதிக்காமல் போயிருக்கின்றன. என் சிற்றறிவுக்கும், அனுபவத்திற்கும், அவற்றின் பிரம்மாண்டம் அதிகமானதாய் இருந்திருக்கிறது. அவற்றுடன் என்னால் ஒன்றிப்போக முடியவில்லை. அவற்றை ஜீரணிக்க இன்னும் சற்று கால அவகாசம் தேவைப்படலாம்.

எதிர்காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளராக வேண்டும், இதில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இப்போதைக்கு இல்லை. அதே போல என் எழுத்துகளுக்கு கண்டிப்பாய் அங்கீகாரம் தேவை என்றும் தோன்றவில்லை. என் எழுத்தால் மற்றவர் மனதை பாதிக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைகிறேன், இல்லையென்றால் வருத்தப்படுவதில்லை. அங்கீகாரமற்ற நிலையை, இன்னமும் என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள ஏற்பட்ட ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன்.

6 comments:

பத்மா said...

எல்லாரும் தமக்குள் கேட்டுக்கொள்வதுதான்....நமக்காக என்னும் போது அதில் நிச்சயம் ஒரு போலித்தனம் இருக்காது .உங்களுக்காக எழுதுங்கள் ..உங்களுக்காகவே படியுங்கள்

HVL said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, பத்மா! நானும் அப்படி இருக்கவே விரும்புகிறேன்.

ராம்ஜி_யாஹூ said...

உண்மையான வார்த்தைகள்

பகிர்ந்தமைக்கு ன்றிகள், வாழ்த்துக்கள்

HVL said...

மிக்க நன்றி ராம்ஜி_யாஹூ!

சு.மோகன் said...

நண்பரே,

மிகவும் உண்மையான கேள்வி, உண்மையான பதில். மிகவும் ரசித்தேன்.

இதே கேள்வி எனக்குள் எழுந்தபோது இந்தக் கட்டுரை நல்ல தெளிவைக் கொடுத்தது http://www.jeyamohan.in/?p=7757
நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

HVL said...

@ சு.மோகன்
கண்டிப்பாய் படிக்கிறேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!