5.9.10

தேடுகிறேன் . . .

நான் பிறந்த ஊரைக் காணவில்லை!

குட்டையான செங்கல் வீடுகள்

அதன் தலை மேலிருந்த கரண்டு கம்பம்

தூரத்து ரயில் சத்தம்

குறுகிய தெருக்களில் எப்போதாவது

சென்ற சைக்கிள்


சுண்ணாம்பு பூசிய

மஞ்சள் நீர்த் தொட்டி

அதன் தலையில் அமர்ந்த அண்டங்காக்கை

காலை சங்கு பிடிக்க

இயற்கை அழைப்பிற்காய்

ஒதுங்கிய தோப்பு

அதற்கு பக்கமிருந்த இடுகாடு


ஆகாஷ் வாணி செய்தி அறிக்கை

அதைத் தொடந்த ஹிந்தி பாடல்கள்

விடுமுறை நாட்களில்

எதையோ ரிப்பேர் செய்து கொண்டிருந்த

இளமையான அப்பா

அவருக்காய் உள்ளே

சமைத்துக் கொண்டிருந்த அம்மா


அப்பா இல்லா தினங்களில்

வீடு வந்து கதை பேசிச் சென்ற

அமிர்தம் பாட்டி

மின்சாரமற்ற இரவில் என்னுடன்

கண்ணாமூச்சியாடிய நண்பர்கள்

அவர்களுடன் சேர்ந்து விளையாடிய

சிறு வயது நான்


இவற்றுடன்

முற்றுமாய் தொலைந்துப் போன

என் பிறந்த ஊர்

தொலைத்த இடம் சென்று

தேடியும் கிடைக்க வில்லை.


பழைய படம் பார்க்கும் போதும்

அவற்றின் பாடல் கேட்கும் போதும்

கண்களில் நீருடன்

நெஞ்சில் மோதும் இந்நினைவுகளை

கம்ப்யூட்டரில் விளையாடும் என்

பிள்ளைக்கு காட்ட விழைகிறேன்.


ஆனால் இவற்றை கனவில் மட்டுமே

திரும்பப் பார்க்க முடிகிறது.

3 comments:

பா.ராஜாராம் said...

ஆம், காணவில்லைதான்.

நல்லாருக்குங்க.

பத்மா said...

காணாமல் போனால் போகட்டும் நினைவுகள் உள்ளதல்லவா ? தேங்கியே நின்றால் பூச்சிகள் மலியும் ..மாறும் உலகில் மாறட்டும் ஊரும் ..இந்த வயது இன்பம், இந்த வயது சிறுவனுக்கு ..நம் எண்ணத்தை அவனிடம் திணிக்க வேண்டாம் ..
என்ன சொல்றீங்க ?

HVL said...

மிக்க நன்றி பா.ராஜாராம்

@ பத்மா
உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.என்றும் மாற்றமில்லாதவை மாற்றங்கள் மட்டுமே!
ஆனாலும் இக்காலச் சிறுவர்கள், நமக்கெல்லாம் எளிதில் கிடைத்த ஏதோ ஒன்றை கம்ப்யூட்டரில் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.