14.9.10

நம்மவர்களுடன் ஒருமணி நேரம்

‘மேடம், இந்த அஃபிடவிட்டில் ஒரு தப்பு வந்திருச்சி. கொஞ்சம் மாத்தித் தரீங்களா?’

மேடம் என்று விளிக்கப்பட்ட அந்த அம்மாள் கொஞ்சம் தாட்டியாய் சுடிதார் அணிந்திருந்தாள்.
தமிழ் நாட்டாள் இல்லை. ஆனால் சரளமாய் தமிழ் பேசினாள். தலையை சிரமப்படாமல்
நிமிர்த்தி என்னை ஒரு புழுவாய் பார்த்தாள்.

‘ஸாரி சார்! நீங்க புதுசா ஒரு அப்பிளிகேஷன் எழுதி கொடுத்துட்டுப் போங்க, நாங்க தரோம்.’

‘இல்லிங்க மேடம்! இதை மட்டும் திருத்தி ஒரு கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா போதும்.....’

‘இதையெல்லாம் நாங்க செய்ய முடியாது. நீங்க அப்பிளிகேஷன் கொடுத்திட்டுப் போங்க. அடுத்த ஆள் வாங்க!’

அடுத்தவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை கண்டுக் கொள்ளாமல்,

‘ இங்கெ இருக்கிற ஆபிசரை நான் பார்க்க முடியுமா?’ என்றேன்

‘சாரி சார் அதெல்லாம் பார்க்க முடியாது!’

பின்னிருந்த ஆள் என்னை இடித்து படி முன்னேற, நான் கவுண்ட்டர் வாயிலிலிருந்து நகர்த்தப்பட்டேன்.

சுற்றிலும் மக்கள் நின்றபடி, உட்கார்ந்தபடி, நடந்தபடி , பேசிக் கொண்டோ, பாரங்களை நிரப்பிக் கொண்டோ, மோட்டுவளையை வெறித்துக் கொண்டோ இருந்தனர்.

நான் சென்றுவிட்டதாய் நினைத்த கவுண்டர் பெண்ணொருத்தி,

‘பாருங்கக்கா! இந்தாளுக்கு ஆபிசரப் பாக்கணுமாம்! எழுதும் போது ஒழுங்கா எழுதிக் கொடுக்க என்ன கேடு!’ என்றாள்.

‘இது பரவாயில்ல, நேத்து ஒரு வயசான ஆள், பேரையே தப்பா எழுதி கொடுத்திட்டான். நாம தப்பு பண்ணிட்டோம்ன்னு கெடந்து குதிக்கிறான். இவ்வளவு வயசாவுதில்ல , ஒழுங்கா பேரக் கூட எழுதத் தெரியல.’

‘இதை எல்லாம் செய்யறத தவிர நமக்கு வேற வேலையில்லையா ? நம்ம உயிர எடுக்க கிளம்பி வந்துடுறானுங்க.’

நேரம் நழுவியது.

பக்கத்தில் காலியாய் இருந்த கவுண்டருக்கு நகர்ந்தேன்.

‘மேடம் நான் ஆபிசரைப் பார்க்கணும்.’ என்றேன்.

சேலை கட்டியிருந்த இளவயது மேடம்

‘எதுக்கு?’ என்றாள்.

‘இந்த இடத்தில ஒரு கரெக்ஷன் .அதுக்காக.'

‘அதோ உட்கார்ந்திருக்காங்களே அந்த மேடம் தான் அதுக்கு இன்சார்ஜ். அவங்களைக் கேளுங்க!’

‘அவங்க முடியாதுன்னுட்டாங்க. அதான் ஆபிசரப் பாக்கலாம்ன்னு...’

சட்டென்று வில்லியாய் மாறினாள் அவள்.

‘அக்கா இங்கப் பாருங்க ! இவருக்கு ஆபிசரப் பாக்கணுமாம்.’

மொத்த ஆபீசும் என்னைத் திரும்பி பார்த்தது.

‘ஹலோ! கம் ஹியர். என்ன வேணும்? உங்களுக்கு ஆபிசரப் பார்க்க யார் பர்மிஷன் கொடுத்தது? இந்தப் பக்கம் வாங்க!’

‘ஐ வான்ட் டு ஸீ தி ஆபிசர். வய் ஷீட் ஐ கெட் யுவர் பர்மிஷன்?’

‘இங்க வாங்க நீங்க. என்ன வேணும் உங்களுக்கு, ம்...????

‘ஸாரி மேடம் ! நான் ஆபிசரைப் பார்த்தே பேசிக்கிறேன்...’

‘ ஏன் ? என்னாச்சு? முதல்ல இங்க வாங்க!”

என்று அந்த அம்மாள் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே ஆபிசர் உள்ளே நுழைந்தார்.
சூழ்நிலையில் இருந்த அசாதாரணத் தன்மையை உணர்ந்து ஆபீசராய், லட்சணமாய்,

‘வாட்ஸ் த ப்ராப்ளம்?’ என்றார் .

அவருடைய கேள்வி கொடுத்த தைரியத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அங்கு நடந்த புறம் பேசலையும் கூறினேன்.

‘ப்ளீஸ் கூல் டவுன் சார் ‘என்று என்னை ஒரு ஓரமாய் அழைத்துச் சென்றார்.

நாற்காலியில் உட்காரும்படி பணித்துவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார்.

‘எனக்கு உங்க கஷ்டம் புரியுது. யூ நோ அபவ்ட் அவர் இன்டியன் லேடீஸ். நான் பதினைந்து வருஷமாய் இதையே பார்க்கறேன். என்ன செய்யறது? இவங்களோட தான் வேலை செய்யணும் .வேற வழியே இல்லை. உங்க ப்ராப்ளத்த நான் பாக்கறேன். ப்ளீஸ் கிவ் இட் டு மி’

‘ரொம்ப நன்றிங்க!’ என்று சொல்லியபடி ,வந்த வேலையை முடித்துக் கொண்டு புறப்பட்டேன்.

மேலே சொன்ன சம்பவம் எங்கே நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா ?
வேறு எங்கே? வெளிநாடு ஒன்றில் இருக்கும் நமது ஹை கமிஷனில் தான். நமது அரசாங்க அலுவலகத்திற்கே உரிதான பாணியில் வரவேற்று, ‘இடம் மாறி வந்து விட்டோமோ !’ என்று குழம்பும் சாத்தியக் கூறுகளை அறவே நீக்கி, தேசிய சேவை புரிகிறார்கள் நம்மவர்கள்.

1 comment:

Anonymous said...

வெளி நாட்டில் வேலை செய்தாலும் அந்தப் புத்தி மாறவே மாறாது.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அப்படியே தான்.மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. இவர்கள் அடித்த லூட்டி தாங்காமல் விசா செயல்பாடுகளையே வேறு நிறுவனங்களுக்குக் கொடுத்து விட்டப் பெருமையும் உண்டு !!!!!!