26.10.10

ப்ளாகரின் வளர்ச்சிப் படிகள்
இள நிலை ப்ளாகர் :

புதிதாய் ப்ளாக் ஆரம்பித்து எழுதப் பழகுபவர் இவர்.
இந்நாட்களில் இடப்படும் ஒவ்வொரு பின்னூட்டமும், பல்லாங்குழி ஆட்டத்தில், வெறுங்குழியைத் துடைத்து அடுத்திருக்கும் புதையலை எடுப்பதற்கு ஈடான மகிழ்ச்சியை கொடுக்ககூடியது.

டாஷ் போர்டில் ‘NEWPOST ’ ட்டுக்குக் கீழே அழுத்தமான நீல எழுத்துகளில் தோன்றும் ‘x comment ’ என்ற வார்த்தையில் இருக்கும் ஒரு எதிர்பாராத் தன்மை , வேறு எந்த வார்த்தையிலும் கிடைப்பது இல்லை,இவருக்கு.

புதிய ப்ளாகரின் மனம் நன்றியுடன் இவ்வார்த்தைகளைப் பார்க்கிறது. பின்னூட்டமிட்டவருக்கு பவ்யமாய் நன்றி தெரிவித்து, முடிந்தால் அவரின் ப்ளாக் வரை சென்று தன் உணர்ச்சிப் பெருக்கை தெரிவிக்கிறார் ப்ளாகர். இதைச் செய்யாவிட்டால் மனதுள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுவதை அவரால் தடுக்க முடிவதில்லை.

ஒவ்வொரு முறை புதிய பதிவிட்ட பின்னரும், எதிர்பார்ப்புடன் அடிக்கடி தன் ப்ளாகர் கணக்கைத் திறந்து பார்க்க வைக்கிறது, ‘x comment ’ என்ற இந்த மந்திர வார்த்தை.

இந்நிலையில் வரும் பின்னூட்டங்கள் பெரும்பாலும் உண்மையையே தெரிவிக்கின்றன. படிப்பவரைக் கவரமுடிந்தால் மட்டுமே பின்னூட்டம் பெறமுடிகிறது.
ப்ளாகர் தன் எழுத்தைச் செம்மைப்படுத்துவதற்காக பெரும்முயற்சிகள் எடுத்துக் கொள்கிறார்.
ஒரு சிறுவன் பாடம் கற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறார் ப்ளாகர்.இடைநிலை ப்ளாகர் :

கொஞ்சம் நாட்களில் புதிய ப்ளாகருக்கென்று ஒரு நட்பு வட்டம் உருவாகிறது. இந்நிலையில் இவருக்கு சற்று தன்னம்பிக்கை ஏற்படுகிறது.

எழுதும் போதெல்லாம் குறிப்பிட்ட அளவு பின்னூட்டங்களைப் பெற முடிகிறது. தொடர் பதிவு, பிறந்த நாள் வாழ்த்து பதிவு போன்றவை இந்நிலையில் ஆரம்பிக்கின்றன. முடிந்தவரை பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் நன்றி சொல்கிறார், ப்ளாகர். முடிந்தால் அவர்கள் பதிவைப் படித்து அதற்கு பின்னூட்டமிடுகிறார் .


கடைநிலை ப்ளாகர் :

இந்நிலையில் படிப்பவர்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடுசெய்யும் தலையாய கடமை எழுத்தாளருக்கு வந்துவிடுகிறது.

இவர் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படுகிறது. ஏதோவொரு மயக்கத்தில் ஏதேனும் ஒரு வார்த்தையை தவறாய் உபயோகப் படுத்திவிட்டால் போச்சு! __________.
கோடிட்ட இடத்தை அவரவர் அனுபவத்திற்கேற்றவாறு நிரப்பிக் கொள்ளலாம். எதையும் தாங்கும் இதயத்தைப் பெறுகிறார் ப்ளாகர்.

எழுதுவதற்கு முன்னர் கடவுளைக் கும்பிடுகிறாரோ, இல்லையோ! கீ போர்டுடன் தாக்கக் காத்திருக்கும் வாசகர்களை ஒருமுறை நினைத்துப் பார்ப்பது அவசியம்.

இந்நிலையில் இவருக்கு இடம்படும் பின்னூட்டங்களைப் பல வகைப்படுத்தலாம்.

1. ‘உள்ளேன் ஐயா ‘வகை
2. ‘நான் போட்டாச்சு, நீயும் போடு’ வகை
3. ‘நட்பிற்காக’ வகை
4. ‘அருமையாய் இருக்கிறது’, வகை
5. :) :( வகை
6. ‘உன் பாட்டுக்கு எசப் பாட்ட எம்பக்கம் வந்து பாரு’ வகை
7. ‘நீயெல்லாம் எழுதறத்துக்கு பதில் கழுதை மேய்க்கப் போகலாம்’ வகை
8. ‘ எங்கள் திரட்டியில் சேருங்கள் ‘ வகை
9. படித்துவிட்டு சின்சியராய் விமர்சனம் எழுதும் வகை

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பின்னூட்டமிடும் எல்லோருக்கும், தன் பதிலையும், நன்றிகளையும் பொதுவாகவோ, தனித் தனியாகவோ தெரிவிக்கிறார் நம் எழுத்தாளர். கொஞ்சம் நாட்களில் பதில் எழுதத் தேவையில்லாத பேரின்ப நிலையையும் அடைகிறார் .

இதற்கு அடுத்த நிலை என்ன என்பதை ஆராய்ந்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

23.10.10

நினைவுகள்

முதலில் பூச்சாண்டிக்காகவும் பின் பேய், பிசாசிற்காகவும் தனியாக வெளியே போக பயந்த இரவுகள் ,

எப்போதுமே படிப்பதற்காய் காத்திருந்த கடன்கார பாட புத்தகங்கள்,

வீட்டுப்பாடம் செய்ய மறந்ததால் ராதா டீச்சர் முடியைப் பிடித்து இழுத்து அடித்த பள்ளிக்கூட நாட்கள்,

சீக்கிரம் பெரியவனானால் இதையெல்லாம் அடியோடு விட்டொழிக்கலாம் என்ற கனவோடு கடந்த பரீட்சைப் பொழுதுகள்,

துரத்திய நாயை எதிர்க்க தைரியமின்றி கடைக்குச் செல்ல பயந்த சாயங்காலங்கள்,

தூர வெடிக்கப் போகும் திரி கொளுத்தப்பட்ட லட்சுமி வெடிக்காய் பயந்து, காதைப் பொத்திக் கொண்ட தீபாவளி கணங்கள்,

காணாமல் போய்விடுவேனென்ற பயத்தில், கூட்டத்தினூடே அப்பாவை தேடித் தவித்தபடியே திகிலுடன் மேற்கொண்ட உள்ளூர் பஸ் பயணங்கள்,

இடை நிறுத்தத்தில் ஐந்து நிமிடம் மட்டுமே பேருந்து நிற்கும் என்று தெரிந்தும் ஆறாவது நிமிடம் ஓடிவந்து ஏறி, நிற்கவிருந்த மூச்சை சீராக்கிய அப்பாவின் சாகசம்,

பெரியம்மா வீட்டில் தங்கிய போது சாப்பிட்டுவிட்டதாய் நினைத்து அவர்கள் விட்டுவிட, சாப்பாடு கேட்க வெட்கப்பட்டு பசியுடன் மரத்தை வெறித்த பகற்பொழுது . . .

என் இளம்பிராயம் முழுவதும் இவையே நிறைந்திருந்தாலும், சேரன் படத்து ப்ளாஷ் பேக் போல இந்நினைவுகள் மனதிற்கு இதமளிப்பதை மறுக்க முடியவில்லை.

21.10.10

மேக்கிங் ஆப் (என்னுடைய) சவால் சிறுகதை

செப்டம்பர் பதினாலு அன்று வழக்கம் போல ப்ளாகில் உலாத்திக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்த ‘சவால் சிறுகதை’ போட்டி அறிவிப்பு என்னை ஒன்றுமே செய்யவில்லை. யாரோ, யாருக்கோ எழுதியது, எனக்கென்ன என்று சென்று விட்டேன்.

அக்டோபர் 13 வரை எழுதும் எண்ணம் இல்லையென்றாலும், காரணமே இல்லாமல் அப்பக்கத்தை பலமுறை சென்று பார்த்து வந்தேன். என்னுள் இருந்த எழுத்தாளனுக்கு சவாலாய் தோன்றியிருக்க வேண்டும்! ( எழுத்தாளனா யாரது?).

பொதுவில் உணர்சிவசப்பட்டு அவ்வப்போது ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருந்தாலும், சிறுகதை அல்லது கவிதை என்ற வடிவதின் பெயரை அவற்றிற்கு கொடுக்க எனக்கு தயக்கமாகவே இருந்தது.

இந்த வடிவம் அனைவருக்கும் பிடித்துப் போய், சிறுகதை, கவிதையின் வடிவமே காலப் போக்கில் மாறிப் போனால் என்ன செய்வது, என்ற இலக்கியத்தரமான கவலை எனக்குள் இருந்ததால் இந்தத் தயக்கம்.

இப்படியே நான் ஜடம் போல இருந்தது, என்னுள் இருந்த எழுத்தாளனை (எமோ) உசுப்பிவிட்டிருக்க வேண்டும். (மறுபடியும் எழுத்தாளன், யாரையா அது?) அவன் என்னை அன்னியன் ரெமோவாய் ஆக்கிரமிக்கத் துவங்கினான்.

எமோ: எழுதித்தான் பாரேன்!

நான்: கதை போல இல்லைன்னா ?

எமோ: அத நீயா படிக்கப் போற, படிக்கிறவங்க பாடு.

நான்: ஆனாலும் என்ன நினைப்பாங்க?

எமோ: என்ன வேணா நெனச்சிகட்டும். உன்னய பார்த்தா அடையாளம் தெரியவா போகுது?

நான்: அப்படியா சொல்லுற ம் ம் ம். . . நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.

எமோ: இதையெல்லாம் யோசிக்கவே கூடாது. யோசிச்சா உனக்கு கதையே வராது. வேர்ட திறந்தோமா, ஈ- கலப்பைய புடிச்சோமா, போய்கிட்டே இருக்கணும்.

நான்: இப்படி எழுதினா பரிசு கிடைக்கும்ன்ற. . . ?

எமோ: பரிசு கிடைத்தால் தான் போட்டிக்குப் போகனுமா? அப்படியிருந்தா எப்படித் தான் போட்டிய நடத்துவாங்க? நம்ம போல நாலு பேர் எழுதினாத்தான், மத்தவங்க கிட்ட இருக்க நல்ல கதை தெரிய வரும். இதெல்லாம் ஒரு சேவை. . .

நான்: இருந்தாலும். . .

எமோ: நோ. இனி பேசாதே! நீ எழுதற! என்ன ஆனாலும் நான் பொறுப்பு.

நான்: ம்ம்ம்...சரி உன் ஆசைய ஏன் கெடுக்கணும். ப்ளாகர்களின் தலைஎழுத்து அப்படி இருந்தால் என்ன செய்யறது.

இப்படியாக ஆரம்பித்தன சிறுகதைப் போட்டிக்கான என் முஸ்தீபுகள்.
போட்டிக்கான விதிகளைப் படித்ததும் வயிறு கலங்கியது.

1)டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுத வேண்டும். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, பிளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.

இறுதித் தேதி: அக்டோபர் 15.

அதாவது கதையை அனுப்ப இன்னும் இரண்டே நாட்கள். எம்.எஸ்.வேர்டை திறந்ததும் வார்த்தை மடை திறந்த வெள்ளம் போல கொட்டவில்லை. என்னவோ எம்.ஜி.ஆர் படத்திற்கு கதையெழுத உட்கார்ந்தது போல இருந்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பின்னால் துப்பாக்கியுடன் நின்றிருந்த பரந்தாமன். அவர் அருகிலிருந்த காமினியின் கைப்பையினுடைய வாய் திறந்திருந்தது.

“அதான் நீ கேட்டபடி கொண்டு வந்துட்டேன்ல்ல , சிவாவை ஒன்னும் செஞ்சிடாதே” என்ற காமினிக்கு தொண்டை அடைத்தது.
‘ஸாரி காமினி, நாங்க அப்பிடித் தான் பேசுவோம், அதையெல்லாம் நம்பலாமா.நீ பழைய சினிமா பார்த்ததில்ல!’ சொல்லிவிட்டு நம்பியார்த்தனமாய் ஒரு சிரிப்பு சிரித்தார் பரந்தாமன்.

‘என்ன வயசான அப்பா, அம்மா இவங்களை கட்டிப்போட்டுட்டு தீயை மூட்டிட்டு இப்படி டயலாக் பேசிட்டு சிரிப்போம். எல்லோரும் தனிக் குடித்தனம் வந்துட்டதால, இவங்களையெல்லாம் இழுக்க முடியாம போச்சு’

இப்படியெல்லாம் எழுதப் போய் , எமோ ‘நீ நகரு, நான் எழுதறேன்’ என்றான்.

நான்: ஸ்டாப் எமோ ! எழுதும் போது தொல்லைப் பண்ணாதே!

எமோ: இப்படியெல்லம் எழுதினா அடுத்த போட்டிக்கு உனக்கு நோ என்ட்ரி தான், தள்ளு.

நான்: எமோ, ப்ளீஸ் ஒரு நல்ல காவியம் எழுதறப்ப தடை சொல்லாதே!

எமோ அடுத்த வார்த்தை பேசவில்லை, கணினியின் முன் அவன் உட்கார்ந்திருந்தான்.
கதையை அவன் எழுதினாலும் அதிலிருக்கும் ட்விஸ்ட் எல்லாம் என்னுடையது.

‘கதையில் தவறு இருந்தால் அதற்கேற்றார் போல மதிப்பெண்களைக் குறைத்துக் கொண்டு, பரிசு புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தையாவது அனுப்புங்கள்’ என்ற கோரிக்கையை பின்குறிப்பில் வைக்க எமோ முறைத்தான். வேறு வழியின்றி டெலீட் செய்தேன்.

எது எப்படியோ! சவால் சிறுகதைக்காக ஒரு கதை தயாரித்து அனுப்பி வைத்தோம். மறுபடியும் படிக்கும் தைரியம் கூட வரவில்லை. பரிசு கிடைத்தால் நானும், கிடைக்காவிட்டால் எமோவும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

14.10.10

தொலைந்து போன நிஜங்கள் (சவால் சிறுகதை)

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். வெற்று பாதங்கள் ஈரத்தரையில் அழுந்தப் பதிந்து டீனேஜ் கிருஷ்ண தடங்களை ஏற்படுத்தின. சகதி சுடிதாரில் தெரித்து, சின்ன, பெரிய புள்ளிகளை இலக்கின்றி வரைந்தது. அதை கவனிக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

உடல் ஒத்துழைக்கவில்லையென்றாலும் மனதில் இருந்ததெல்லாம் சிவாவை அவசரமாய் . . . மிக அவசரமாய் காப்பாற்ற வேண்டும் என்பதே!

தெரு திரும்பும் போது மூச்சுக் காற்றுக்காக உடல் ஏங்கி, அவள் வேகத்தை சற்று மட்டுப்படுத்தியது. கழுத்தில் கடிபட்ட தெருநாய் ஒன்று இவளை திரும்பிப் பார்த்து தனக்குட்பட்ட ஸ்ருதியில் ‘வ்ழ்ர்ர்ர்ர்ர்ர்....’ என்றது . கைப்பையை அனிச்சையாய் தடவிக் கொண்டே ஓட்டத்தை நடையாக்கினாள். முழங்கையில் பேண்டேஜையும் மீறி லேசான ரத்த கசிவு தெரிந்தது.

நேற்று நடந்த விபத்திலிருந்து அவள் உடல் முழுதுமாய் தேறியிருக்கவில்லை. ஒரு சிறு கவனக்குறைவால் சாலையோரம் தூக்கியெறியப்பட்டு, சிற்சில சேதாரங்களுடன் உயிர் பிழைத்திருந்தாள். நல்ல வேளையாய் புறப்பட்ட காரியம் முடிந்த பின்.

கொடுக்கப் பட்ட அதிகபட்ச வேலையால், உடல் தளர்ந்து தண்ணீருக்காக தவித்தது. வழியிலிருந்த பெட்டி கடையில் குளிர்பானமொன்றை சில்லறை கொடுத்து வாங்கினாள். அவசரமாய் குடித்ததில் சுடிதாரின் மேல் பகுதி நனைந்து ஆரஞ்சு நிறமானது. அதைப் பற்றி கவலைப் படாமல் பெரிய மடக்குகளில் குடித்தாள்.

‘சிவாவைக் காப்பாற்ற வேண்டும் . . . சீக்கிரமாய்’

மறுபடி வீட்டிற்குப் போவதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் வேறு வழி இருப்பதாய் தோன்றவில்லை.

பேருந்து நிறுத்தத்திலிருந்து 12 B யைப் பிடித்தாள். கடைசி இருக்கையில் அமர இடம் கிடைத்தது. சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவள் தோற்றம் விசித்திரமாய் இருந்திருக்க வேண்டும். பக்கத்திலிருந்த பாட்டி அளவுக்கதிகமாய் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு சற்று தள்ளி அமர்ந்தாள். முன்னாலிருந்த பெண் சிரமத்துடன் தலையை திருப்பி இவளைப் பார்த்துவிட்டு உடனே திரும்பிக் கொண்டாள். அம்மா மடியிலிருந்த சிறுவன் இவளையே பார்த்தான்.

காமினிக்கு இதெல்லாம் உறைக்கவில்லை. பார்வையை வெளியே பதித்திருந்தாள். கையில் அடிபட்ட இடம் வலித்தது. அந்த தண்ணீர் லாரி மோதியதில் உயிரே போயிருக்க வேண்டியது.

‘அம்மாவின் கடவுள் நம்பிக்கை தான் தன்னை காப்பாற்றியிருக்க வேண்டும், அதே போல சிவாவையும் காப்பாற்ற வேண்டும்’ என எண்ணிக் கொண்டாள்.

அரை மணிக்கு சற்று குறைவான நேரத்தில் அவள் இறங்குமிடம் வந்தது. சாலையை ஒட்டிய மூன்றாம் குறுக்குத் தெருவில் திரும்பினாள். பட்டப் பகலில் வெறிச்சோடியிருந்த அதில் மொத்தம் ஐந்தே வீடுகள். இவ்வளவு தனிமையான இடத்தை கணவன் தேர்ந்தெடுத்ததில் அவளுக்கு சற்று குறை தான்.

‘அவசரத்திற்கு கூப்பிட கூட ஆள் இல்லாமல் என்ன இடம் இது!’ என்று நினைத்துக் கொள்வாள். இந்த வீட்டை வாங்கும்படி சிபாரிசு செய்த அவன் சித்தப்பாவை மனதிற்குள் இப்போதும் திட்டிக் கொண்டாள்.

வீட்டை நெருங்கும் போது பயம் ஏற்பட்டது. வீடு நிசப்தமாய் இருந்தது. ‘கேட்’டை திறக்கும் போது ‘க்ரீச்’ சென்ற சப்தம் பெரிதாய் கேட்டது. நேரம் கிடைக்கும் போது மறக்காமல் எண்ணை போடவேண்டும் என்று எப்போதும் போல நினைத்துக் கொண்டாள். நேரம் கிடைக்குமா என்று சந்தேகமாய் இருந்தது.

கதவு திறந்தே இருந்தது. சிவா ஈசி சேரில் சாய்ந்தபடி மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தான். டி.வி கவனிப்பாரின்றி ஓடிக் கொண்டிருந்தது. இவளைப் பார்த்ததும் ரிமோட்டால் அதை அடக்கினான். இவளை முறைத்தான்.
கண்கள் சிகப்பாய் இருந்தன.
குடித்திருக்கிறான்!

தொண்டையை செருமிக் கொண்டான்.

“ரெண்டு நாளா எங்க போயிருந்த?”

காமினி கைப்பையை மேஜையில் வைத்தாள்.

சிவா இப்போதெல்லாம் முன் போல இல்லை. சித்தப்பாவின் பேச்சை அதிகம் கேட்கிறான். ‘விளக்கி சொன்னால் இவனுக்கு புரியுமா?’ என்று யோசித்தாள். ‘வேண்டாம், சந்தேகப்படுவான்’.

“எங்கடி போயிருந்த?” அவன் கண்களில் ஆவேசம் இருந்தது..
அடுத்தமுறை கேள்வி எழாது.

“இல்ல சிவா! நேற்று ஒரு சின்ன ஆக்சிடெண்ட். அதனால ஆஸ்பிடல்ல. . .”

“எந்த ஆஸ்பிடல்?. . . அதுவும் ஒரு நைட்டு முழுக்க தங்கற அளவுக்கு! எனக்கே காது குத்தறியா?” கேள்வி எழுப்பியபடி வேகமாய் எழுந்து ஜன்னலோரம் இருந்த மேஜையைத் திறந்தான். துப்பாக்கியை எடுத்தான். அது கருப்பு பிசாசாய் இவளை முறைத்தது.

“எத்தனை முறை சொல்லியிருக்கேன் !உனக்குப் புரியலையா?”

“இல்ல சிவா, கொஞ்சம் பொறுமையா இரு”

“இன்னும் என்ன சமாதானம் சொல்லப் போற?”

“பரந்து சித்தப்பா தான். . .”

“வாய மூடு! நீ செய்யற வேலைக்கு அவர் மேல பழி போடறியா. . .?”

‘இவனுக்கு எதைச் சொல்லி புரிய வைப்பது?’

“உண்மையா சிவா. . . என்ன நம்பு சிவா”

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

டப்பென்ற சத்ததுடன் அவன் கைகளில் பாய்ந்த தோட்டா அவனை நிலைகுலைய செய்தது.
"ஷிவ்வ்வாஆஆஆ"
தொண்டையிலிருந்து வினோதமாய் சப்தமெழும்ப காமினி அவனை அணைத்துக் கொண்டாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பின்னால் துப்பாக்கியுடன் நின்றிருந்த பரந்தாமன். அவர் அருகிலிருந்த காமினியின் கைப்பையினுடைய வாய் திறந்திருந்தது.

“அதான் நீ கேட்டபடி கொண்டு வந்துட்டேன்ல்ல , சிவாவை ஒன்னும் செஞ்சிடாதே” என்ற காமினிக்கு தொண்டை அடைத்தது.

சிவா வழியும் ரத்தத்தைக் கைகளால் அடக்கியபடி இருவரையும் ஆவேசமாய் பார்த்தான்.

“ஸாரி சிவா! கொஞ்ச நாளா நீ சந்தேகப் படறன்னு தெரிஞ்சும் என்னால உண்மைய சொல்ல முடியல! உன் சித்தப்பாவுக்கு நீ நெறைய எடம் கொடுத்திட்ட. கடைசியில, அவரோட வேலைக்கு என்னை . . என்னை . . .” வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டன.

பரந்தாமன் வெற்றிப் புன்னகையுடன் அவளைப் பார்த்தார்.

சிவா தன் கையை அழுத்தியபடி

“எனக்கு தெரியும் காமினி” என்றான்.

பரந்தாமன் முகம் சட்டென்று சுருங்கியது.

“வேண்டாம் சிவா...”

சிவா அவரை முறைத்தான்.

‘என்னைய ஏன்யா சுட்ட?’ என்ற கோபமான கேள்வி அவன் கண்களில் இருந்தது

“முன்பே எனக்கு சந்தேகம் இருந்தது, காமினி! அவர் வழியில போய் பிடிக்கணும்னு தான் உன்னை மிரட்டினேன். துப்பாக்கியை எடுத்தது கூட அவரைக் கையும் களவுமாய் பிடிக்க தான். . .” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம்.ஜி.ஆர் பட க்ளைமேக்ஸில் வருவது போல, இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளே நுழைந்தார்.

“ஸாரி ! கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றார். உடன் வந்த கான்ஸ்டபிள் விலங்கை பரந்தாமன் கைகளில் மாட்டிவிட்டு, சிவாவை நெருங்கினார்.

“ஷிவா, உங்களையும் கைது செய்ய வேண்டிய அவசியத்துல இருக்கறோம். நீங்களும், உங்க சித்தப்பாவும் சேர்ந்து உங்க மனைவி காமினியை ஏமாத்தி, உங்க பிஸினஸ்க்கு அவங்களைப் பயன் படுத்தியிருக்கீங்க.”

“உங்க மனைவி மிஸ்டர் பரந்தாமன் மேல சந்தேகப்பட்டு தான் தகவல் கொடுத்தாங்க. நாங்க கொஞ்சம் துருவிப் பார்த்ததுல உங்க சுயரூபம் தெரிஞ்சுது. நாங்க தான் அந்த டைமண்ட அவங்க கிட்ட கொடுத்துவிட்டோம்.”

காமினி அதிர்ந்து போயிருந்தாள்.

“எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியல! உங்களை ஏன் பரந்தாமன் சுட்டார்? சரி!சரி! வாங்க இதெல்லாம் இப்ப கேட்டா நெடுந்தொடர் ரேஞ்சிக்குப் போயிடும். ஸ்டேஷன்ல போயி பேசிக்கலாம்” என்ற படி அவர் வாசலுக்கு விரைய, கான்ஸ்டபிள் இவர்களை நெட்டித் தள்ளிய படி பின்தொடர்ந்தார்.

12.10.10

இடுக்கண் வருங்கால் நகுவது எப்படி???


இடுக்கண் வருங்கால் நகுக, இதை வள்ளுவர் எந்த நிலையிலிருந்து சொன்னாரோ தெரியாது. வாழ்வு சீராய் செல்லும் வரை, அவர் சொன்ன இந்த குறட்பா ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தது.

முதன்முதலில் என் வாழ்கை எதிர்பாரா திருப்பத்தை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில், நிலைகுலைந்து போனேன்.மேற்சொன்ன குறட்பா பொய்யெனப் பட்டது.

இதென்ன! துன்பம் வரும் போது கூட சிரிக்க முடியுமோ? இந்த ஆளுக்கென்ன ஜாலியா தாடியை நீவிக் கொண்டே எழுதிட்டு போயிட்டார். இது போன்ற நிலமை அவருக்கு வந்திருந்தால் தெரியும். இப்படி தான் எண்ணினேன்.

உலகில் எனக்கு மட்டுமே ஒரு அநியாயம் நடந்ததாய் தோன்றியது. என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாய் சிரித்துக் கொண்டிருப்பதாய் பட்டது.

அந்த திருப்பம் கடந்து போனது. கொஞ்சம் நாட்கள் கழித்து மற்றொரு பிரச்சனை. ஆண்டவன் ஏன் என்னை மட்டும் சோதிக்கிறான் என்ற கேள்வி எழுந்தது. ‘தனக்கு பிடித்தவர்களை ஆண்டவன் அதிகமாய் சோதிப்பான்’ என்ற ஏட்டுச் சுரைக்காய் பதிலாய் கிடைத்தது. அதுவும் சில நாட்களில் கடக்க, மற்றொரு பிரச்சனை பின்தொடர்ந்தது.

ஏதோவொன்று புரிவது போல் இருந்தது. ஒவ்வொரு பிரச்சனையின் பின்னும் வாழ்கைப் பாதை மாறினாலும், ஏதோ ஒரு விதத்தில் அது நன்மை பயப்பதாகவே இருந்திருந்தது. சாதாரணமாய் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருந்ததில்லை.
ஆனால் இந்த சிக்கல்களின் மூலம் மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
என்னைச் சுற்றி காய்கள் என் அனுமதியில்லாமலேயே அதிவேகமாய் நகர்த்தப்பட்டிருந்தன.

ஆனால் அந்த மாற்றத்திற்கு பின் வாழ்கை ஒரு படி மேலே போயிருந்தது. இப்போது இடுக்கண் வரும்போது வள்ளுவர் சிரித்ததன் மர்மம் புரிந்தது. ஆண்டவன் பிடித்தவர்களை அதிகமாய் சோதித்ததன் காரணமும் கூட.

இப்போதெல்லாம் பிரச்சனை வரும் போது சோர்ந்து போவதில்லை. மாறாக என் கொள்கைகள் சிலதை விட்டுக் கொடுக்கிறேன். என் வாழ்க்கையின் வேல்யூ சிஸ்டத்தை கொஞ்சமாய் மாற்றிக் கொள்வதன் மூலம் எந்த சிக்கலையும் எளிதாய் தீர்க்க முடிகிறது.

இந்த சின்ன சின்ன சமரசங்களினால்,என்னால் செய்ய முடியாது என்று நம்பிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை, சுலபமாய் சாதிக்க முடிகிறது. வரும் சிக்கலுள் ஒளிந்திருக்கும் நன்மையை தேடிப்பிடிக்கும் அளவுக்கு பக்குவப் பட்டு விட்டேன். ஒருவழியாய் ஏட்டுச் சுரைக்காயில் கறி சமைக்க கற்றுக் கொண்டுவிட்டேன்.