28.11.10

இரண்டு கட்டெறும்புகள்ஒரு எறும்பிற்கு எங்கேயோ அடிபட்டிருக்க வேண்டும். அதன் கால்கள் துடித்துக் கொண்டிருந்தன.

மற்றொரு (ஹீரோ) எறும்பு அடிபட்ட எறும்பை மிக வேகமாய் இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

எறும்பால் கூட இவ்வளவு வேகமாய் நகர முடியுமோ என்று ஆச்சரியமாய் இருந்தது.
சுற்றிலும் இருந்த புல், குப்பை எதுவும் தடையாயில்லை அவற்றிற்கு.

சில நொடிகள் நீடித்த இந்த பயணம், சமதளத்தைத் தாண்டி பெரிய கற்கள் பதிக்கப் பட்ட தரையில் இறங்கியது. சற்று தூரம் போனதும் இரண்டு கற்களுக்கிடையே உள்ள இடைவெளி குறுக்கிட்டது.

ஹீரோ எறும்பின் உடல் பள்ளத்தினுள் இறங்க, அ.ப. எறும்பு பள்ளத்தில் விழாதபடிக்கு சமாளித்து, மேலே ஏறிக் கொண்டது. வேறு திசையில் நகரத் துவங்கியது. அந்த திசையிலும் இதே பிரச்சனை. இந்த முறை பள்ளத்தில் விழுந்தது அ.ப.எறும்பு. இதற்கும் சலிக்காத இந்த ஊர்வலம் வேறு பக்கம் நகர்ந்தது.

இப்படியே தொடர்ந்த பயணத்தின் இடையே வில்ல எறும்பின் பிரவேசம். எங்கிருந்தோ வந்த அது, அ.ப. எறும்பை இன்னொரு பக்கத்திலிருந்து இழுக்க, நம் ஹீரோ எறும்பு கொடாகண்டனாய் இந்தப் பக்கம் இழுத்தது. சில வினாடிகள் நடந்த இந்த போராட்டத்தில் ஹீரோவுக்கே வெற்றி.

மறுபடி அதன் எக்ஸ்பிரஸ் பயணம் தொடர்ந்தது. வழியில், தரையில் பலமாய் வேரூன்றி இருந்த ஒரு புல் குறுக்கிட அ.ப.எறும்பு அதை கெட்டியாய் பற்றிக் கொண்டது. ஹீரோ எறும்பு , ஹீரோ என்றா சொன்னேன், விடாமல் இழுத்தது. மற்றதும் அதே வேகத்தில் கெட்டியாய் பற்றிக் கொண்டிருந்தது.

கடைசியில் அ.ப. எறும்பு(?) தோற்றது. ஹீரோ(?) எறும்பு அருகிலிருந்த ஒரு ஓட்டைக்குள் அதை வெற்றிகரமாய் இழுத்துக் கொண்டு மறைந்தது. முன்பு குறுக்கிட்ட மூன்றாவது எறும்பு அந்த ஓட்டைக்குள் நுழைந்து, துரத்தப்பட்டது போல வெளியேறியது. இருந்தாலும் விடாமல் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தது.

25.11.10

இரவில் பெய்த மழை

வெளியே மழை.
அதன் காரணமாய் தரையில் சில்லிப்பு ஏறியிருந்தது.
அது பாயையும் தாண்டி உடலை எட்டியதில் அசௌகரியம் கூடியது. மின்விசிறி வேகமாய் சுழன்றுக்கொண்டிக்க, பிள்ளைகள் நிச்சலனமாய் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முழு வேகத்தில் சுழலும் அது தேவையாய் இருந்தது.

போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்தி, மூச்சுக் காற்றால் உடலைத் தழுவிய வெளியை சற்றே சூடாக்கினேன்.

முன்பை விட பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் தூக்கம் வரவில்லை.

இப்போது முகத்தை மட்டும் போர்வையினுள் இருந்து விலக்கிக் கொண்டேன். ஜன்னல் வழியாக நுழைந்த மஞ்சள் வெளிச்சம் சுவற்றில் கட்டம் போட்டிருந்தது. மேலே ஒட்டப்பட்டிருந்த செயற்கை நட்சத்திரங்களும், பிறை நிலாவும் பச்சை வண்ணத்தில் மினுமினுத்தன. வெளியே மழை மண்ணுடன் மோதும் பேரிரைச்சல் கேட்டபடி இருந்தது.

மூச்சுக் காற்றின் வெப்பம் குளிருக்கு ஈடாக இல்லை.
எழுந்து வெளியே வந்தேன். கதவைத் திறந்ததும் மழைக் காற்று லேசான சாரலுடன் கலந்து சில்லென்று முகத்தில் மோதி புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. செடி,கொடிகளின் ஈர வாடை நாசியில் ஏறியது.

மழையின் மூலம் தெரியாதபடிக்கு வானம் இருட்டாய் இருந்தது. தெரு, விளக்கின் ஒளியில் தங்க நிறத்திற்கு மாறியிருந்தது. மழையும் கூட தங்க நீர் ஊசிகளை அவசரமாய் இறங்கி , தெருவை தைத்துக் கொண்டிருந்தது. தவளைக் குரல் பின்னணி இசைக்க, அதைத் தன் சத்தத்தால் பின்னுக்குத் தள்ளிய வெள்ளைக் கார் ஒன்று தண்ணீரை வாரி இறைத்தபடி வேகமாய் சென்றது. சூழல் சற்றே ஸ்தம்பித்து இயல்பானது.

மழைபெய்யும் நடுநிசியைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. மறுநாள் காத்திருந்த வேலைகளை மறந்து, அதை முழுதுமாய் அனுபவித்துவிடும் ஆர்வத்தோடு,பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் கடந்துக் கொண்டிருந்தது.

தூக்கம் தொலைந்த இரவுஅமைதியைக் கிழித்து
அலறிய போது
நள்ளிரவு . . .

தொலைந்து போன
கனவின் விளிம்பில்
தூக்கம் கலைத்து

வினாடிக்கும் குறைவாய்
திடுக்கிட வைத்து

வயதான அம்மா
பக்கவாத அப்பா
வேகமாய்
வாகனமோட்டும் தம்பி
யு.எஸ் அக்கா

இவர்களை அரைநொடியில்
கண்முன் நிறுத்தி
ஓய்ந்தது . . .

மர்ம முடிச்சை அவிழ்ப்பதில்
கடந்தது பின்னிரவு

இதெல்லாம் உண்மையா நடந்தது . . .

சில நேரத்தில சில பேர் செய்யறதெல்லாம் காமெடியா இருக்கும்.

இப்படித்தான் கணேஷ ‘கடைக்கு போய் அவில் மாத்திரை வாங்கிட்டு வா’ன்னு (ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால) சொல்லி அனுப்பினேன்.

‘மாத்திரை இல்லை’ன்னு சொல்லி திரும்பி வந்தவன்

‘ஏங்க்கா மாத்திரையோட பேர் என்னன்னு சொன்னீங்க’ ன்னு கேட்டான்

‘அவில், நீ என்னன்னு போயி கேட்ட?'ன்னு கேட்டதுக்கு

‘அவியல்ன்னு கேட்டேன். அது தான் கடைகாரன் அப்பிடி பார்த்தானா?’ன்னு என்னையே திருப்பி கேட்டான்.

________________________________________________________

ஒரு முறை கணேஷ அழச்சுகிட்டு காசிக்கு டூர் போயிருந்தோம்.

ஒருத்தன், வாழைப் பழத்த ‘பாஞ்ச் ருப்யே, பாஞ்ச் ருப்யே ’ன்னு வித்துகிட்டு இருந்தான், ரெயில்வே ஸ்டேஷன்ல.

இவன் போயி ‘தஸ் ருப்யே’ன்னு பேரம் பேசிகிட்டு நின்னான். இவன தனியா கூப்பிட்டு கேட்டதுல

‘பான்ச் ருப்யேன்னா பாஞ்சு ரூபான்னு நெனச்சுகிட்டேன்க்கா’ ன்னு சொல்றான்.

இப்ப மாறி இருப்பான்னு நெனக்கிறேன்.

________________________________________________________

போன வாரம், என் தோழி வித்யாவப் பார்த்து பேசிகிட்டு இருந்தப்ப

‘ஏன் டயர்டா இருக்கீங்க?’ன்னு கேட்டேன்.

‘நைட்டெல்லாம் தூக்கமே இல்லை’ன்னு சொன்னாங்க.

‘ஏதாவது பிரச்சனையா?’ன்னு அக்கறையோட விசாரிச்சேன்.

‘எங்க கூட ரூம்ல ஒரு ‘பேர்(bear)’ தூங்குது, அதான்!’

அவங்க பொண்ணு டெட்டி பேர கட்டி புடிச்சுகிட்டு தூங்கும் போலன்னு நெனச்சுகிட்டு, ‘பேரா?’ ன்னு கேட்டேன்.

‘ஆமா , என் வீட்டுக்காரர் தான், இப்பல்லாம் கொரட்ட சத்தம் தாங்க முடியல’ன்னு சொன்னாங்களே பாக்கணும்.

இன்னமும் நெனச்சு சிரிச்சிகிட்டு இருக்கேன்.

23.11.10

ஒரு குட்டி கதை

எனக்கு எழுத மேட்டர் கிடைக்கவில்லை என்றாலும், என் ஆறு வயசு பெண்ணிற்கு ஏதாவது கிடைத்து விடுகிறது. இது அவள் எழுதிய கதை.

The ugly monster

There was a ugly monster. He was so ugly.
He don’t have friends.
He was sad.
One day is his birthday.
He give everybody a bag.
The next day everybody friend him.
Now he got many friends.

The end

5.11.10

யார் புத்திசாலி ?

எனக்கு மெயிலில் வந்த ஒரு ஜோக், தமிழில் இங்கே,

ஒரு பெண் மலையேறிக் கொண்டிருக்கும் போது ஒரு கல் தடுக்கி விழுந்தாள். உஷ்ஷ்ஷ்ஷ்ஷ். . . . கல் ஒரு தவளையாக மாறியது.

தவளை: மிக்க நன்றி பெண்ணே! உன் தயவால் நான் சாப விமோசனம் பெற்றேன். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். என்ன வேண்டுமோ கேள்!

பெண் சற்று யோசித்தாள்.

தவளை: ஆனால் ஒரு நிபந்தனை, உனக்கு என்ன வரம் கிடைக்கிறதோ, அதே போல பத்து மடங்கு உன் கணவனுக்கு கிடைக்கும்.

பெண்: சரி, நான் உலகிலுள்ள எல்லா பெண்களையும் விட மிக அழகாய் மாற வேண்டும்.

தவளை: பெண்ணே நன்றாய் யோசித்து கேள்! உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு அழகனாகி விடுவான்.

பெண்: இருந்தாலும் உலகிலேயே அழகான பெண் நான் தானே! அவனுக்கு என்னைத் தவிர வேறு விதி இல்லை.

தவளை: அப்படியே ஆகட்டும்!

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ். . . அவள் உலகத்திலேயே மிகச் சிறந்த அழகியாக மாறினாள்.


தவளை: சரி, இரண்டாவது வரம்!

பெண்: நான் உலகின் மிகப் பெரிய கோட்டீஸ்வரனா(ரியா)க வேண்டும்.

தவளை: பெண்ணே நினைவிருக்கட்டும்! உன் கணவனிடம் உன்னை விட பத்து மடங்கு செல்வம் அதிகம் இருக்கும்.

பெண்: பரவாயில்லை, மொத்தப் பணமும் என்னுடையது தானே!

தவளை: அப்படியே ஆகட்டும்.

ஷ்ஷ்ஷ்ஷ். . . .

தவளை: சரி, அடுத்தது!

பெண்: எனக்கு ‘மைல்ட் ஹார்ட் அட்டாக்’ வர வேண்டும்!

நீதி: பெண்கள் புத்திசாலிகள். அவர்களிடம் மோதினால் ‘பகிளு பிகிலூதி செவுலு அவலாயிடும்’.

நீங்கள் பெண்ணாயிருந்தால் உங்களுக்கு BYE! BYE! நீங்கள் இதற்கு மேலே படிக்க வேண்டாம்.

இனி ஆண்களுக்கு:

அந்தப் பெண்ணின் கணவனுக்கு, அவளை விட பத்து மடங்கு மைல்டா’ன (குறைவான) ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது!

நீதி: பெண்கள் தங்களை புத்திசாலி என்று நினைத்தாலும் உண்மை அதுவல்ல! அவர்களை அப்படியே நினைக்கவிட்டு, நீங்க எஞ்ஜாய் பண்ணுங்க!

பி.கு: நீங்கள் ஒரு பெண்ணாயிருந்தால், 'பெண் சொன்ன பேச்சைக் கேட்பதில்லை' என்பது நிரூபணமாகிறது. அதனால் தான், நான் படிக்க வேண்டாம் என்று சொன்ன பிறகும் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.


4.11.10

__________ பொங்கல் (இது சமையற் குறிப்பு அல்ல)

இரண்டரை மாதங்களுக்கு பிறகு எழுத வேண்டிய தலைப்பு தவறிப்போய் இப்போது வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் என் பக்கம் வந்தவர்களுக்கும், சாதாரணமாய் வந்தவர்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்.

தலைப்பின் முதல்பாதி இது தான்


தீபாவளி vs

பால்ய பருவத்தில் பொதுவாய் தீபாவளியின் மீது இருந்த ஆர்வம் எனக்கு பொங்கலில் எப்போதும் இருந்ததில்லை. அதற்கான காரணிகள்

1. பொங்கலின் போது சூரியன் சுட்டெரிக்க, தீபாவளியின் போது ஜிலு ஜிலுவென மழை பெய்ததாலோ, அல்லது

2. பொங்கலை உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரத்தில் கொண்டாட, தீபாவளியை காலை மற்றும் இரவு நேரங்களில் வண்ணமயமாய் கொண்டாடியதாலோ, அல்லது

3. பொங்கலில் அம்மாக்களின் வேலைகளே அதிகம் இருக்க, தீபாவளியில் சிறுவர்கள் பங்கு கொள்ள அதிக வாய்ப்புகள் (பட்டாசு) இருந்ததாலோ, அல்லது

4. பொங்கலின் போது தொடர்ந்து நான்கைந்து நாட்கள் சர்க்கரைப் பொங்கலையும், வடை, பாயாசத்தையும் சாப்பிட வேண்டியிருக்க, தீபாவளியின் போது அதிரசம், முறுக்கு, லட்டு, மிக்சர் என்று வெரைட்டியாய் கிடைத்ததாலோ இருக்கலாம். அதுவும் பட்டினத்துப் பொங்கலைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

விவரம் தெரிந்த பின், பொங்கலின் மகத்துவம் புரிய, அது தமிழர்களின் திருநாள் என தெளிந்து பொங்கலை நேசிக்கத் துவங்கினேன்.

இப்போது எந்த பண்டிகையாய் இருந்தால் என்ன! இருக்கவே இருக்கின்றன தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள். தொ.கா.சி.நி வந்ததிலிருந்து அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவதில் ஒரு சமத்துவம் வந்துவிட்டதாய் தோன்றுகிறது.

விடியற்காலை தொ.காவை உயிர்பித்து, இரவு வரை அதிலிருந்து கண்களை எடுக்காமல், விளம்பர இடைவேளைகளில் பண்டிகைகளைக் கொண்டாடி, நண்பர்களுக்கு ரெடிமேட் எஸ்.எம்.எஸ் களை அனுப்பி மகிழ்கிறோம்.
உறவினர்களில் யாரையேனும் அன்று பார்க்க விரும்பினால் கூட , தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினாலேயன்றி, அவரது கடைக் கண் பார்வை கிட்டாது.

முடிந்தவரை என் வீட்டில் தொ.காவை உயிர்பிக்காமல் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பது என் ஆசை! பார்ப்போம்!1.11.10

‘தி வே ஹோம்’மும் ஆறு வயது பெண்ணும்

நேற்று இரவு எங்கள் பெண்ணுடன் ‘THE WAY HOME’ என்ற கொரிய படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மனதை உருக்கும் கதை!

என் பெண் முதலிலிருந்தே

‘அந்தப் பாட்டியால ஏன் பேச முடியல?’

‘அந்தப் பையன் பேட் பாய் தானேம்மா?’

‘அந்தப் பையன் திட்டினாலும், அந்தப் பாட்டி ஏன் திருப்பி திட்ட மாட்டெங்கறாங்க?’

‘அடுத்து என்னப்பா ஆகும், அவன் தொலஞ்சி போயிடுவானா ? பாட்டிய அவங்கம்மா வந்து திட்டுவாங்களா?’

‘பாட்டி செஞ்ச கோழிய சாப்பிடாம, K.F.C தான் வேணும்னு அடம் புடிக்கிறானே, அந்தப் பாட்டிகிட்ட காசு இல்லல்ல! எப்பிடி வாங்குவாங்க? அவன் ரொம்ப செல்பிஷ்ப்பா!’

‘இப்ப பாட்டிக்கு ஹெல்ப் பண்றான்! குட் பாய் ஆயிட்டான்’

‘அவங்க அம்மா வந்து ஏம்மா திருப்பி கூட்டிட்டு போறாங்க? அந்த பாட்டி இனிமே வீட்டுக்குப் போய் என்ன செய்வாங்க, அவங்களையும் கூட்டிட்டு போகலாம்ல?’

போன்ற கேள்விகளையும், விமர்சனங்களையும் வைத்துக் கொண்டே இருந்தாள்.


இடையிடையே,
‘அம்மா, பாட்டிய பாக்க பாவமா இருக்கும்மா! ஆப் பண்ணிடலாம்மா!’
என்றும், உடனே மனசு மாறி ,

‘இத மட்டும் பார்த்துட்டு ஆப் பண்ணிடலாம்!’ என்றும் கூறுமளவு, படம் அந்த ஆறு வயது பெண்ணை பாதித்தது.

படம் முடிந்ததும்
‘அம்மாவுக்கு இந்த மாதிரி வயசாயிட்டா, நீ கூடவே இருப்பியாம்மா?’
என்று கேட்டதற்கு, சற்று யோசித்தாள்

‘நீங்க மட்டும் ஏம்மா உங்க அம்மா கூட இல்ல?’ என்றாள்.
இன்னும் கொஞ்சம் யோசித்து

‘யாருமே அவங்க அம்மா கூட இல்லயே! சரி, படுங்கம்மா! இதையெல்லாம் அப்ப பார்த்துக்கலாம்’என்றபடி படுத்துக் கொண்டாள்.

தூக்கம் கண்ணை இழுக்கும் நேரத்தில்,

‘ஆனா, என் பேபிய உங்க கிட்ட விட்டுடறேன்ம்மா!’
என்றாள் சமாதானமாய்!