1.11.10

‘தி வே ஹோம்’மும் ஆறு வயது பெண்ணும்

நேற்று இரவு எங்கள் பெண்ணுடன் ‘THE WAY HOME’ என்ற கொரிய படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மனதை உருக்கும் கதை!

என் பெண் முதலிலிருந்தே

‘அந்தப் பாட்டியால ஏன் பேச முடியல?’

‘அந்தப் பையன் பேட் பாய் தானேம்மா?’

‘அந்தப் பையன் திட்டினாலும், அந்தப் பாட்டி ஏன் திருப்பி திட்ட மாட்டெங்கறாங்க?’

‘அடுத்து என்னப்பா ஆகும், அவன் தொலஞ்சி போயிடுவானா ? பாட்டிய அவங்கம்மா வந்து திட்டுவாங்களா?’

‘பாட்டி செஞ்ச கோழிய சாப்பிடாம, K.F.C தான் வேணும்னு அடம் புடிக்கிறானே, அந்தப் பாட்டிகிட்ட காசு இல்லல்ல! எப்பிடி வாங்குவாங்க? அவன் ரொம்ப செல்பிஷ்ப்பா!’

‘இப்ப பாட்டிக்கு ஹெல்ப் பண்றான்! குட் பாய் ஆயிட்டான்’

‘அவங்க அம்மா வந்து ஏம்மா திருப்பி கூட்டிட்டு போறாங்க? அந்த பாட்டி இனிமே வீட்டுக்குப் போய் என்ன செய்வாங்க, அவங்களையும் கூட்டிட்டு போகலாம்ல?’

போன்ற கேள்விகளையும், விமர்சனங்களையும் வைத்துக் கொண்டே இருந்தாள்.


இடையிடையே,
‘அம்மா, பாட்டிய பாக்க பாவமா இருக்கும்மா! ஆப் பண்ணிடலாம்மா!’
என்றும், உடனே மனசு மாறி ,

‘இத மட்டும் பார்த்துட்டு ஆப் பண்ணிடலாம்!’ என்றும் கூறுமளவு, படம் அந்த ஆறு வயது பெண்ணை பாதித்தது.

படம் முடிந்ததும்
‘அம்மாவுக்கு இந்த மாதிரி வயசாயிட்டா, நீ கூடவே இருப்பியாம்மா?’
என்று கேட்டதற்கு, சற்று யோசித்தாள்

‘நீங்க மட்டும் ஏம்மா உங்க அம்மா கூட இல்ல?’ என்றாள்.
இன்னும் கொஞ்சம் யோசித்து

‘யாருமே அவங்க அம்மா கூட இல்லயே! சரி, படுங்கம்மா! இதையெல்லாம் அப்ப பார்த்துக்கலாம்’என்றபடி படுத்துக் கொண்டாள்.

தூக்கம் கண்ணை இழுக்கும் நேரத்தில்,

‘ஆனா, என் பேபிய உங்க கிட்ட விட்டுடறேன்ம்மா!’
என்றாள் சமாதானமாய்!

1 comment:

Charu said...

She is playing safe :-)