4.11.10

__________ பொங்கல் (இது சமையற் குறிப்பு அல்ல)

இரண்டரை மாதங்களுக்கு பிறகு எழுத வேண்டிய தலைப்பு தவறிப்போய் இப்போது வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் என் பக்கம் வந்தவர்களுக்கும், சாதாரணமாய் வந்தவர்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்.

தலைப்பின் முதல்பாதி இது தான்


தீபாவளி vs

பால்ய பருவத்தில் பொதுவாய் தீபாவளியின் மீது இருந்த ஆர்வம் எனக்கு பொங்கலில் எப்போதும் இருந்ததில்லை. அதற்கான காரணிகள்

1. பொங்கலின் போது சூரியன் சுட்டெரிக்க, தீபாவளியின் போது ஜிலு ஜிலுவென மழை பெய்ததாலோ, அல்லது

2. பொங்கலை உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரத்தில் கொண்டாட, தீபாவளியை காலை மற்றும் இரவு நேரங்களில் வண்ணமயமாய் கொண்டாடியதாலோ, அல்லது

3. பொங்கலில் அம்மாக்களின் வேலைகளே அதிகம் இருக்க, தீபாவளியில் சிறுவர்கள் பங்கு கொள்ள அதிக வாய்ப்புகள் (பட்டாசு) இருந்ததாலோ, அல்லது

4. பொங்கலின் போது தொடர்ந்து நான்கைந்து நாட்கள் சர்க்கரைப் பொங்கலையும், வடை, பாயாசத்தையும் சாப்பிட வேண்டியிருக்க, தீபாவளியின் போது அதிரசம், முறுக்கு, லட்டு, மிக்சர் என்று வெரைட்டியாய் கிடைத்ததாலோ இருக்கலாம். அதுவும் பட்டினத்துப் பொங்கலைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

விவரம் தெரிந்த பின், பொங்கலின் மகத்துவம் புரிய, அது தமிழர்களின் திருநாள் என தெளிந்து பொங்கலை நேசிக்கத் துவங்கினேன்.

இப்போது எந்த பண்டிகையாய் இருந்தால் என்ன! இருக்கவே இருக்கின்றன தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள். தொ.கா.சி.நி வந்ததிலிருந்து அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவதில் ஒரு சமத்துவம் வந்துவிட்டதாய் தோன்றுகிறது.

விடியற்காலை தொ.காவை உயிர்பித்து, இரவு வரை அதிலிருந்து கண்களை எடுக்காமல், விளம்பர இடைவேளைகளில் பண்டிகைகளைக் கொண்டாடி, நண்பர்களுக்கு ரெடிமேட் எஸ்.எம்.எஸ் களை அனுப்பி மகிழ்கிறோம்.
உறவினர்களில் யாரையேனும் அன்று பார்க்க விரும்பினால் கூட , தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினாலேயன்றி, அவரது கடைக் கண் பார்வை கிட்டாது.

முடிந்தவரை என் வீட்டில் தொ.காவை உயிர்பிக்காமல் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பது என் ஆசை! பார்ப்போம்!3 comments:

Charu said...

How it went?

HVL said...

enjoyed with the kids

Jeyakumar said...

மகிழ்சியான தருணங்க​ளை நி​னைவுபடுத்தியது