28.11.10

இரண்டு கட்டெறும்புகள்ஒரு எறும்பிற்கு எங்கேயோ அடிபட்டிருக்க வேண்டும். அதன் கால்கள் துடித்துக் கொண்டிருந்தன.

மற்றொரு (ஹீரோ) எறும்பு அடிபட்ட எறும்பை மிக வேகமாய் இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

எறும்பால் கூட இவ்வளவு வேகமாய் நகர முடியுமோ என்று ஆச்சரியமாய் இருந்தது.
சுற்றிலும் இருந்த புல், குப்பை எதுவும் தடையாயில்லை அவற்றிற்கு.

சில நொடிகள் நீடித்த இந்த பயணம், சமதளத்தைத் தாண்டி பெரிய கற்கள் பதிக்கப் பட்ட தரையில் இறங்கியது. சற்று தூரம் போனதும் இரண்டு கற்களுக்கிடையே உள்ள இடைவெளி குறுக்கிட்டது.

ஹீரோ எறும்பின் உடல் பள்ளத்தினுள் இறங்க, அ.ப. எறும்பு பள்ளத்தில் விழாதபடிக்கு சமாளித்து, மேலே ஏறிக் கொண்டது. வேறு திசையில் நகரத் துவங்கியது. அந்த திசையிலும் இதே பிரச்சனை. இந்த முறை பள்ளத்தில் விழுந்தது அ.ப.எறும்பு. இதற்கும் சலிக்காத இந்த ஊர்வலம் வேறு பக்கம் நகர்ந்தது.

இப்படியே தொடர்ந்த பயணத்தின் இடையே வில்ல எறும்பின் பிரவேசம். எங்கிருந்தோ வந்த அது, அ.ப. எறும்பை இன்னொரு பக்கத்திலிருந்து இழுக்க, நம் ஹீரோ எறும்பு கொடாகண்டனாய் இந்தப் பக்கம் இழுத்தது. சில வினாடிகள் நடந்த இந்த போராட்டத்தில் ஹீரோவுக்கே வெற்றி.

மறுபடி அதன் எக்ஸ்பிரஸ் பயணம் தொடர்ந்தது. வழியில், தரையில் பலமாய் வேரூன்றி இருந்த ஒரு புல் குறுக்கிட அ.ப.எறும்பு அதை கெட்டியாய் பற்றிக் கொண்டது. ஹீரோ எறும்பு , ஹீரோ என்றா சொன்னேன், விடாமல் இழுத்தது. மற்றதும் அதே வேகத்தில் கெட்டியாய் பற்றிக் கொண்டிருந்தது.

கடைசியில் அ.ப. எறும்பு(?) தோற்றது. ஹீரோ(?) எறும்பு அருகிலிருந்த ஒரு ஓட்டைக்குள் அதை வெற்றிகரமாய் இழுத்துக் கொண்டு மறைந்தது. முன்பு குறுக்கிட்ட மூன்றாவது எறும்பு அந்த ஓட்டைக்குள் நுழைந்து, துரத்தப்பட்டது போல வெளியேறியது. இருந்தாலும் விடாமல் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தது.

1 comment:

goma said...

எறும்பைக்கூட அழகாக ஃபாலோ பண்ணி ரசித்து எழுதியிருக்கிறீர்கள்....
ஒரு கடி சொல்லட்டுமா...
எறும்பு இல்லையென்றால், யானை இல்லை எப்படி?????