25.11.10

இரவில் பெய்த மழை

வெளியே மழை.
அதன் காரணமாய் தரையில் சில்லிப்பு ஏறியிருந்தது.
அது பாயையும் தாண்டி உடலை எட்டியதில் அசௌகரியம் கூடியது. மின்விசிறி வேகமாய் சுழன்றுக்கொண்டிக்க, பிள்ளைகள் நிச்சலனமாய் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முழு வேகத்தில் சுழலும் அது தேவையாய் இருந்தது.

போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்தி, மூச்சுக் காற்றால் உடலைத் தழுவிய வெளியை சற்றே சூடாக்கினேன்.

முன்பை விட பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் தூக்கம் வரவில்லை.

இப்போது முகத்தை மட்டும் போர்வையினுள் இருந்து விலக்கிக் கொண்டேன். ஜன்னல் வழியாக நுழைந்த மஞ்சள் வெளிச்சம் சுவற்றில் கட்டம் போட்டிருந்தது. மேலே ஒட்டப்பட்டிருந்த செயற்கை நட்சத்திரங்களும், பிறை நிலாவும் பச்சை வண்ணத்தில் மினுமினுத்தன. வெளியே மழை மண்ணுடன் மோதும் பேரிரைச்சல் கேட்டபடி இருந்தது.

மூச்சுக் காற்றின் வெப்பம் குளிருக்கு ஈடாக இல்லை.
எழுந்து வெளியே வந்தேன். கதவைத் திறந்ததும் மழைக் காற்று லேசான சாரலுடன் கலந்து சில்லென்று முகத்தில் மோதி புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. செடி,கொடிகளின் ஈர வாடை நாசியில் ஏறியது.

மழையின் மூலம் தெரியாதபடிக்கு வானம் இருட்டாய் இருந்தது. தெரு, விளக்கின் ஒளியில் தங்க நிறத்திற்கு மாறியிருந்தது. மழையும் கூட தங்க நீர் ஊசிகளை அவசரமாய் இறங்கி , தெருவை தைத்துக் கொண்டிருந்தது. தவளைக் குரல் பின்னணி இசைக்க, அதைத் தன் சத்தத்தால் பின்னுக்குத் தள்ளிய வெள்ளைக் கார் ஒன்று தண்ணீரை வாரி இறைத்தபடி வேகமாய் சென்றது. சூழல் சற்றே ஸ்தம்பித்து இயல்பானது.

மழைபெய்யும் நடுநிசியைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. மறுநாள் காத்திருந்த வேலைகளை மறந்து, அதை முழுதுமாய் அனுபவித்துவிடும் ஆர்வத்தோடு,பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் கடந்துக் கொண்டிருந்தது.

No comments: