26.1.11

நிகழ்வுகள்

இன்று காலை என் பெண் பள்ளிக்குச் சென்ற பின் எடுத்த படங்கள். நேரம் காலை 6:50.
பள்ளி 7.30க்கு தொடங்குகிறது. சீக்கிரம் கிளம்பினாலும், துணைப்பாட வகுப்புகள் ஏதுமில்லா விட்டால் மதியம் 1.30க்கு திரும்பிவிடுகிறார்கள்.


*******************************************************************
எங்கள் பள்ளி ஆசிரியை (ஒன்பதாம் வகுப்பு படித்த போது) எங்களைப் பார்த்து கூறிய ஒரு ரைம்


கம்மிங் மார்னிங்
கோயிங் ஈவினிங்
சிம்ப்ளி டாக்கிங்
நத்திங் டூயிங்


Coming Morning
Going Evening
Simply Talking
Nothing Doing
*********************************************************************

22.1.11

நிகழ்வுநிகழ்ந்தாக வேண்டிய

சம்பவம் ஒன்று


அரங்கேறாது நாள் கடத்தி

சம்பவிக்கும் நேரத்தை

மறைபொருளாய் ஒளித்து

அந்தரங்கம் காக்கும் மர்மியாய்

அற்பமானதை பருப்பித்து

அறியவியலா இரகசியத்தை

உள்ளங்கையில் மறைத்து

விரலிடுக்கில் கசியவிடும்

சிறுமியாய் பிகுசெய்து


பின்

மர்மப்படத்தின்

இறுதிக் கட்டம் போல்

மெல்ல முடிச்சவிழ்ந்து

நிகழ்ந்து முடிகிறது.

17.1.11

பிங்குவின் ஸ்கூல் பிட்ஸ்

பிங்கு பள்ளி செல்ல ஆரம்பித்ததிலிருந்து வீடே மாறிவிட்டது! காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளி பொதுவாய் 1.30க்கு முடிகிறது.

சீக்கிரம் எழ முடியாமல் புரண்டு புரண்டு அவள் தூங்கும் போதும், இரண்டு குடுமி போடப்பட்டு, இடுப்பில் நிற்காத ஸ்கர்ட் அணிந்து, பெரிய பையை முதுகில் சுமந்து நிற்கும் அவளைப் பார்க்கும் போதும் வருத்தமாய் இருக்கிறது.

ஸ்கூல் பிட்ஸ்:


“அம்மா, நான் தான் தமிழ்ல மானிட்டர்”

http://rithikadarshini.blogspot.com/2010/06/blog-post_22.html ஞாபகம் வர அவளை கிண்டலாய்ப் பார்த்தேன்.

“இல்லம்மா! நான் P1ல பொய் பேச மாட்டேன். டீச்சர் என்ன மானிட்டர்ன்னு சொன்னாங்களா! அப்போ ஒரு பையன் ,
இல்லை, நாந்தான் மானிட்டர்ன்னு
சொன்னான்ம்மா. டீச்சர், ‘நீ முதல்ல வகுப்புல பேசாம இரு. உன்ன மானிட்டராப் போடறேன்’னு
சொன்னாங்க”

***********************************************************************
“அம்மா! இன்னிக்கி நல்லா படிச்சேன்னு டீச்சர் என் புக்குல ஸ்டார் ஒட்டினாங்க. இதோ பாருங்க! ஸ்வீட் (மிட்டாய்) கொடுத்தாங்க!”

“உனக்கு மட்டுமா கொடுத்தாங்க?”

“இல்ல எல்லோருக்கும் தான்.”

************************************************************************

“அம்மா! இன்னிக்கு ‘சிட்டு’ன்னு படிக்கறதுக்கு ‘சுட்டி’ன்னு படிச்சுட்டேன். டீச்சர் எனக்கு ஸ்டார் ஒட்டல. பரவாயில்லம்மா! என் ப்ரெண்ஸ் கிட்ட ஸ்டார் முக்கியமா? இல்ல எக்ஸாம்ல மார்க் முக்கியமா?ன்னு கேட்டேன். மார்க் தான்னு சொன்னாங்க! க்ரெக்ட் தானம்மா? நாம எக்ஸாம்ல பார்த்துக்கலாம்”.

*************************************************************************

“அம்மா, இன்னிக்கு தமிழ் டீச்சர் என்னோட கையெழுத்து தான் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க!”

*************************************************************************

“அம்மா, இன்னிக்கு என்னோட ‘ர’ சரியில்லன்னு டீச்சர் சொன்னாங்க.
ஆனா இன்னிக்கு பிஸ்கட் தான் கொடுத்தாங்க!
அந்த பிஸ்கட் நல்லாவே இருக்காதும்மா! சாப்பிட்டா பல்லுல ஒட்டிக்கும். அது வேஸ்ட்ம்மா”


'ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்' கதையாக சென்று கொண்டிருக்கிறது பள்ளி வாழ்க்கை.
இவள் அக்காவை பள்ளிக்கு அனுப்பிய போது ‘என்ன இது! பள்ளியிலிருந்து ஒரு செய்தியும் இல்லையே!’ என்று வருத்தப் பட்டிருக்கிறேன்! வகுப்பிலே அவள் முதல் ரேங்க் என்பது கூட எனக்கு வருடக் கடைசியில் தான் தெரியும்!

13.1.11

பொய் சொல்வதற்கு ஏழு விதிகள் - சுஜாதா

பொய் சொல்வதற்கு ஏழு விதிகள்

• சின்ன விஷயங்களுக்குப் பொய் சொல்லாதே.

• குறிகோள் மிக முக்கியமானதாய் இருந்தால் தான் பொய் சொல்ல வேண்டும்.

• எவரும் எதிர்பாராத சமயத்தில் பொய் சொல்.

• பொய் சொல்வதற்கு முன் வெற்றிக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து பார்.

• கவனமாக பொய் சொல்.

• அண்டப் புளுகு புளுகாதே. நம்பும்படியாக இருக்க வேண்டும் உன் பொய்.

• கேட்பவனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் திருப்தி தர வேண்டும்.

பி.கு:உன் பொய் கண்டுபிடிக்கப் படாவிட்டால் மற. கண்டுபிடித்து அதனால் உனக்கு அபாயம் என்றால் அந்தப் பொய்யை மெய்யாக்கு.

(சிவந்த கைகள் நாவலில் சுஜாதாவின் வரிகள்)

5.1.11

பிங்கு பள்ளிக்கூடம் போகிறாள்

ஜனவரி 4, பள்ளிக்கூடம் திறந்து விட்டது. முதல் முறையாக முதல் வகுப்புக்கு செல்கிறாள் பிங்கு. பயந்தது என்னவோ நான் தான். பரீட்சைக்கு கிளம்புவது போல, புத்தகம் அடுக்கி, காலணிகள் தயார் செய்து , இரவெல்லாம் தூக்கமே இல்லை!

சீருடையில் பெரிய பெண்ணாக தோற்றமளித்தாள், பிங்கு . அக்காவுடன் சந்தோஷமாய் , என்னைகூட மறந்துவிட்டு, கிளம்பினாள். முதல் நாள் பள்ளியின் உள்ளே, சட்டையில் ஸ்டிக்கர் ஒட்டி, எங்களை அனுமதித்தார்கள்.

பெயரைக் கேட்டு பிங்குவை அவளுக்கான இடத்தில் உட்கார வைத்தார்கள். ஏற்கனவே அக்கா படித்த பள்ளி என்பதால் ஆசிரியர்களை இவளுக்கும், இவளை ஆசிரியர்களுக்கும் தெரிந்திருந்தது. முக்கால்வாசி பிள்ளைகள் அம்மா, அப்பாவையோ, பள்ளியையோ பேந்தப் பேந்த பார்த்துக் கொண்டிருக்க, பக்கத்திலிருந்த சீனப் பெண்ணிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்திருந்தாள் இவள். மனதின்றி பிரிந்தேன்.

மறுபடி உணவு நேரத்தில், பள்ளியில் பிள்ளைகள் எப்படி ஒன்றியிருக்கிறார்கள் என்று பார்வையிட, பெற்றோரை உள்ளே அனுமதித்தார்கள். ஒவ்வொரு புது மாணவ / மாணவியருக்கும் ஒரு primary 5 மாணவ / மாணவியை துணையாக்கியிருந்தார்கள் (இடைவேளை நேரங்களுக்கு). ஒரு மாதத்திற்கு இவர்களின் துணையில் பள்ளியை நன்றாய் பழக்கிக் கொள்வார்கள் புதியவர்கள்.

முதல் நாள் என்பதால் கேண்டீனில் உணவு சாப்பிட காசு கொடுத்திருந்தேன். பெற்றோருக்கு ஓரம் நின்று பார்க்க மட்டுமே அனுமதி. பிரசவ அறைக்கு வெளியே நிற்பதைப் போல நின்றிருந்தோம். மீயும், பொரித்த சிக்கனும் வாங்கி வந்த பிங்கு, கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த என்னைக் கண்டுக்கொள்ளாமல் தன் தோழியுடன் கதைத்த படி சாப்பிட்டாள்.

சிறிது நேரத்தில் ஆளைக் காணவில்லை. தேடிக் கண்டுபிடித்ததில், வாலட்டைத் தொலைத்ததாகச் சொன்னாள். உள்ளே அதிகம் காசு இல்லாததால் நான் கவலைப் படவில்லை.

சற்று நேரத்தில் மறுபடி அவளைக் காணவில்லை. சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப மனம் இல்லை. அதனால் சுற்றும் முற்றும் தேட, கடைசியில் நோட்டிஸ் போர்டிடம் நின்று ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள். நான் விடை பெற்றதைப் பற்றி அவ்வளவாக கவலைப் படவில்லை.

தோழியின் உதவியோடு விசாரித்து வாலட்டைக் கண்டுபிடித்து மதியம் வீட்டிற்கு கொண்டு வந்தாள். எப்படி பள்ளியில் சமாளிப்பாள் என்ற கவலை போய், நான் இல்லாமல் சமாளிக்கிறாள் என்ற உண்மை சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், கொஞ்சம் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

மகள் வளர்கிறாள் என்று மகிழ்ச்சியாகவும், சற்று வருத்தமாகவும் இருக்கிறது. இன்னமும் மருத்துவமனையின் குழந்தையாய் அவளின் தோற்றம் கண்ணுக்குள் நிற்கிறது.

வாழ்கையின் முதல் படியில் கால் வைத்திருக்கும் மகளுக்கு, இந்தத் தாயின் வாழ்த்துகள்.

1.1.11

மீண்டும் ஒரு புதிய ஆண்டு


புத்தாண்டு பிறந்துவிட்டது. வசந்தமும், ஆஸ்ட்ரோவும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சியைப் பார்த்தோம். நள்ளிரவு மணி பன்னிரெண்டை நெருங்க நெருங்க கொண்டாட்டங்கள் உச்சத்தை அடைந்தன. இன்னும் இருபது நிமிடத்தில் வருகிறது, இன்னும் பத்து நிமிடத்தில் வருகிறது என்று கட்டியம் கூறிக் கொண்டே பாட்டுப் பாடி நடனம் ஆடினார்கள், கலைஞர்கள்.

சரியாய் 12 மணிக்கு கலர் பேப்பர்கள் பறக்க சத்தமாய் கத்தியபடி, புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள். பிறகு அலைபாயுதே படத்தை போட்டுவிட்டு அனைவரும் பார்ட்டிக்கோ, இல்லை எங்களைப் போல தூங்குவதற்கோ சென்று விட்டார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி அந்த ஆண்டிற்கான சபதங்களை மறக்காமல் எடுத்துக் கொண்டு, இரண்டு நாட்களில் மறந்து போகிறேன்.

ஏறக்குறைய இப்படித் தான் ஒவ்வொரு புத்தாண்டும் வந்து போகிறது.

இந்த ஆண்டு, குழந்தை கிறுக்கித் தள்ளிய பேப்பரைப் போல வாழ்கையில் பல திருப்பங்கள். 2010 எனக்கு பல சோதனைகளை ஏற்படுத்தியிருந்தாலும், தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது.

எனக்கு வந்த ஒரு வாழ்த்து:


ஜனவரி 1 2011ல நாங்க


உங்க வீட்டுக்கு வருவோம்.

வந்து பர்மனென்ட்டா

உங்க வீட்டுலேயே

தங்கப் போறோம்.

எங்களோட பேர்:

சந்தோஷம்,

நிம்மதி,

வெற்றி.

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.