5.1.11

பிங்கு பள்ளிக்கூடம் போகிறாள்

ஜனவரி 4, பள்ளிக்கூடம் திறந்து விட்டது. முதல் முறையாக முதல் வகுப்புக்கு செல்கிறாள் பிங்கு. பயந்தது என்னவோ நான் தான். பரீட்சைக்கு கிளம்புவது போல, புத்தகம் அடுக்கி, காலணிகள் தயார் செய்து , இரவெல்லாம் தூக்கமே இல்லை!

சீருடையில் பெரிய பெண்ணாக தோற்றமளித்தாள், பிங்கு . அக்காவுடன் சந்தோஷமாய் , என்னைகூட மறந்துவிட்டு, கிளம்பினாள். முதல் நாள் பள்ளியின் உள்ளே, சட்டையில் ஸ்டிக்கர் ஒட்டி, எங்களை அனுமதித்தார்கள்.

பெயரைக் கேட்டு பிங்குவை அவளுக்கான இடத்தில் உட்கார வைத்தார்கள். ஏற்கனவே அக்கா படித்த பள்ளி என்பதால் ஆசிரியர்களை இவளுக்கும், இவளை ஆசிரியர்களுக்கும் தெரிந்திருந்தது. முக்கால்வாசி பிள்ளைகள் அம்மா, அப்பாவையோ, பள்ளியையோ பேந்தப் பேந்த பார்த்துக் கொண்டிருக்க, பக்கத்திலிருந்த சீனப் பெண்ணிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்திருந்தாள் இவள். மனதின்றி பிரிந்தேன்.

மறுபடி உணவு நேரத்தில், பள்ளியில் பிள்ளைகள் எப்படி ஒன்றியிருக்கிறார்கள் என்று பார்வையிட, பெற்றோரை உள்ளே அனுமதித்தார்கள். ஒவ்வொரு புது மாணவ / மாணவியருக்கும் ஒரு primary 5 மாணவ / மாணவியை துணையாக்கியிருந்தார்கள் (இடைவேளை நேரங்களுக்கு). ஒரு மாதத்திற்கு இவர்களின் துணையில் பள்ளியை நன்றாய் பழக்கிக் கொள்வார்கள் புதியவர்கள்.

முதல் நாள் என்பதால் கேண்டீனில் உணவு சாப்பிட காசு கொடுத்திருந்தேன். பெற்றோருக்கு ஓரம் நின்று பார்க்க மட்டுமே அனுமதி. பிரசவ அறைக்கு வெளியே நிற்பதைப் போல நின்றிருந்தோம். மீயும், பொரித்த சிக்கனும் வாங்கி வந்த பிங்கு, கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த என்னைக் கண்டுக்கொள்ளாமல் தன் தோழியுடன் கதைத்த படி சாப்பிட்டாள்.

சிறிது நேரத்தில் ஆளைக் காணவில்லை. தேடிக் கண்டுபிடித்ததில், வாலட்டைத் தொலைத்ததாகச் சொன்னாள். உள்ளே அதிகம் காசு இல்லாததால் நான் கவலைப் படவில்லை.

சற்று நேரத்தில் மறுபடி அவளைக் காணவில்லை. சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப மனம் இல்லை. அதனால் சுற்றும் முற்றும் தேட, கடைசியில் நோட்டிஸ் போர்டிடம் நின்று ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள். நான் விடை பெற்றதைப் பற்றி அவ்வளவாக கவலைப் படவில்லை.

தோழியின் உதவியோடு விசாரித்து வாலட்டைக் கண்டுபிடித்து மதியம் வீட்டிற்கு கொண்டு வந்தாள். எப்படி பள்ளியில் சமாளிப்பாள் என்ற கவலை போய், நான் இல்லாமல் சமாளிக்கிறாள் என்ற உண்மை சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், கொஞ்சம் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

மகள் வளர்கிறாள் என்று மகிழ்ச்சியாகவும், சற்று வருத்தமாகவும் இருக்கிறது. இன்னமும் மருத்துவமனையின் குழந்தையாய் அவளின் தோற்றம் கண்ணுக்குள் நிற்கிறது.

வாழ்கையின் முதல் படியில் கால் வைத்திருக்கும் மகளுக்கு, இந்தத் தாயின் வாழ்த்துகள்.

6 comments:

Chitra said...

Thats a lovely post. May God bless your little one. :-)

HVL said...

Thanks, chitra.

ஸ்ரீராம். said...

பிங்குவுக்கு வாழ்த்துக்கள்.

விசரன் said...

பெற்றோருக்குத்தான் இந்த தேவையில்லாத பயங்கள். குழந்தைகள் இதைப் பற்றியெல்லாம் கவனிப்பதில்லை. அவர்கள் தங்கள் உலகத்தில் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். கவலையை விடுங்கள். நானும் இப்படித்தான் பயந்து திரிந்திரிந்தேன். இப்ப தூரத்தில் இருந்தே ரசிக்கப் பழகிக்கொண்டிருக்கிறேன்.

HVL said...

நன்றி விசரன்.
இதை நானும் இப்போது தெரிந்துக் கொண்டேன்.

மிக்க நன்றி ஸ்ரீராம்.

எல் கே said...

அவர்கள் உலகம் தனி.