28.2.11

நாய்க்கு வேலையில்ல நிக்க நேரமும் இல்ல

வேலையென்று சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் இல்லை தான். ஆனாலும் எழுத முடியாதபடி குறுகிடுவதற்கு, அதிலும் முக்கியமாய் பெண்களுக்கு, நிறைய அனானி வேலைகள் இருக்கின்றன. பிள்ளைகளை சமாளிப்பது, கிளப்பி பள்ளிக்கு அனுப்புவது, படிப்பிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது (குறைந்த பட்சம் இரண்டு வேளைக்கு), கடையிலிருந்து தேவையானவற்றை வாங்கி வருவது, இப்படி எக்ஸெட்ராவுக்குள் அடக்க முடியாத வேலைகள் பல மனைவிகளுக்காக காத்துக் கொண்டே இருக்கின்றன.

‘வீட்டில வெட்டியாய் உட்கார்ந்துக் கொண்டு என்னத்த கிழிக்கிற?’ என்ற கணவனின் கேள்விக்கு பதிலாய் சொல்ல முடியாத வேலைகள் இவை. சில நாட்களில் ஏனென்று புரிந்துக் கொள்ளமுடியாதபடிக்கு, இவை வழக்கத்திற்கும் அதிகமாய் நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. அது போன்ற சில நாட்களில் இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறேன். அதையே மின்னல் வேகத்தில் பதிவிட்டுவிட்டு, அடுத்த வேலையை கவனிக்க சென்று கொண்டிருக்கிறேன்.

21.2.11

பிங்கு எழுதிய கவிதை

பிங்கு ( 6 + years)இப்போது கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறாள். என் கவிதை என்று அவள் சொல்லாவிட்டாலும் பேப்பரில் எழுதியது அவள் தான். இது இவள் சொந்த சரக்கு தானா என்பதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறது.

I really missed you (x 2)
I Just can't stand (x 2)
I really want bring my life to the cloud
I like my life
I love my family
I want the world to be clean
the world is for you to live
the world give you air (x 2)
the world important for every humun
Keep the world from danger
Make the world beautyful
it will be peeseful for humun to live
I really missed you to (x 3)

பிழைகளை திருத்தாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன்.
என் பெரிய பெண்ணை விசாரித்த வரை பள்ளியில் இது போல எதுவும் சொல்லித்தருவதில்லை என்று தெரிகிறது .
லாஜிக்கும் அங்கங்கே இடிப்பதால் இது பிங்குவிற்கு சொந்தமான கவிதையென்றே நம்புகிறேன்.

4.2.11

அப்படி என்ன தான் இருக்கிறது 'விஜய்'யிடம்!

வசந்தத்தில் இந்த குருவி படத்தை எத்தனை முறை தான் போடுவார்களோ தெரியவில்லை. எனக்கு தெரிந்து இது மூன்றாவது முறையோ, நான்காவது முறையோ. ஏதாவது ஒரு வசனம் மறந்து போனால் மறக்காமல் திரையிட்டு விடுகிறார்கள்.

தவறாமல் பார்க்கிறாள் என் குட்டிப் பெண். அதற்காக குட்டிக்கரணம் போடவும் தயாராய் இருக்கிறாள். அப்படி என்ன தான் இருக்கிறது படத்தில். அவளைக் கேட்டால் விஜய் என்கிறாள்.

ஒரு முறை தமிழ் கதை ஒன்றை சேர்ந்து படித்தோம். அந்த கதையில் அவளுக்கு பிடித்த கதாபாத்திரத்தின் பெயரை எழுதச் சொன்னேன். கதாபாத்திரம்ன்னா என்ன என்று அவள் கேட்க, ‘character’ என்று மொழி பெயர்த்தேன். என்ன புரிந்ததோ அவள் எழுதியது இதைத் தான்.

‘விஜெ’

நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.

அப்படி என்ன தான் இருக்கிறதோ 'விஜய்'யிடம்!

2.2.11

நானும் எனது நட்பும்நட்பிற்கான எனது இலக்கணம் மிகவும் எளிமையானது.

எதையும் எதிர்பாக்காதே என்பது தான் அது.

நான் இதை இம்மி பிசகாமல் கடைபிடிக்கிறேன். என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன். முடியாவிட்டால் அதை முகத்திற்கு நேரே சொல்லிவிடுகிறேன். எதிர்பார்த்து எதையும் செய்வதில்லை.

உதவி செய்கிறேனோ இல்லையோ உபத்திரவம் கொடுப்பதில்லை. நட்பின் நிமித்தம் உபத்திரப்படுத்திக் கொள்வதும் இல்லை. விருப்பு வெறுப்புகளை என்மீது சுமத்துபவர்களை தயங்காமல் வெட்டிவிடுகிறேன்.

என் தோழிகளை குறை நிறைகளோடு அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். என்ன! எனக்கு பிடிக்காத, ஒத்துவராத விஷயங்களிலிருந்து, அந்த நேரம் மட்டும், விலகியிருக்கிறேன்.

இது பிடிக்காமல் முறித்துக் கொண்டு செல்பவர்களை புரிந்துக் கொள்ள முடிகிறது. அதிலும் வெளிப்படையாக சொல்லிப் பிரிபவர்களை மதிக்கிறேன். அவர்களின் செயலுக்காக கோபமோ, கவலையோ படுவதில்லை. படுவதற்கு என்னிடம் இதைவிட முக்கியமான, தலைபோகக்கூடிய முகாந்திரங்கள் நிறைய இருக்கின்றன.

இத்தகு காரணாங்களால் எனது நட்பு வட்டத்தின் விட்டம் மிகவும் குறைவு. ‘Quality is important than Quantity’ இல்லையா?

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்


என்பதை உறுதியாய் நம்புகிறேன்.