23.3.11

டின்னர் வித் ஆவி!!!!!
அப்போது பத்தாவது படித்து கொண்டிருந்தேன். ஹாஸ்டல். எதையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. அப்போதுதான் ஆவியோடு பேசுவதைப் பற்றி கேள்வி பட்டோம்.

ஒரு நாள் இரவு, ஐந்து பேர் சேர்ந்துக்கொண்டு சாக்பீஸ் எடுத்து கட்டம் கிழித்து A B C D 1 2 3 YES NO எல்லாம் எழுதிக்கொண்டோம். கதவையெல்லாம் சாத்திக்கொண்டோம். விளக்கையும் அணைத்துவிட்டோம்.

இரவை எதற்கு தேர்ந்தெடுத்தோம் என்றால், வார்டன் மற்றும் அவருடைய வலக்கைகளிடம் மாட்டக் கூடாது இல்லையா? சீனியர், ஜீனியர்களின் பூஜைவேளை இடையூறுகளை தவிர்க்கவும் தான். ஏதாவது ஏடாகூடமாக ஆயிற்று என்றால் என்ன செய்வது? அதற்காக தான் ஐந்து பேர்!

டம்ளரை கவிழ்த்து வைத்து, இரண்டு பேர், அதன் மேல ஆளுக்கு ஒரு விரலை வைத்துக்கொண்டோம். டம்ளருக்குள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்த ஞாபகம் இல்லை.

எந்த ஆவியைக் கூப்பிடுவது என்று குழப்பம். அந்த நேரத்தில் எங்கள் வீட்டுப் பக்கம், இறந்து போன நெருங்கிய சொந்தம் யாரும் இல்ல, அதனால் தோழியின் அம்மாவைக் கூப்பிட்டோம்.

'வந்துட்டீங்களா?' என்று திரும்ப திரும்ப கேட்க டம்ளர் YESக்கு நகர்ந்தது. கண்டிப்பாய் என் தோழி ஒற்றை விரலை வைத்து அவ்வளவு வேகமாய் நகர்த்தியிருக்க முடியாது. பக் பக் பக். . . இருந்தாலும் அதைவிட ஆர்வம் அதிகமாய் இருந்தது.

கேள்விகளை முன்பே யோசித்து வைக்காததால் எங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு பத்தாவது ரிசட்டை கேட்டோம்.

கொஞ்சம் நேரம் கேட்டதற்கு ஒழுங்காய் பதில் வந்தது. சற்று நேரத்திற்கு பிறகு ஆவியின் பதிலைப் பெற ஒவ்வொரு கேள்வியையும் இரண்டு மூன்று முறை கேட்க வேண்டியதாய் இருந்தது. அதற்கும் பதில் சம்பந்தமில்லாமல் வந்தது. அதாவது மார்க்கை குறைவாக சொல்ல ஆரம்பித்தது அல்லது ஒருவர் மார்க்கை இரண்டு முறை கேட்க வேறு வேறு பதில்களைச் சொன்னது. (ஒரு வேளை அதை சந்தேகப்படுகிறோம் என்று கோபம் வந்திருக்குமோ!) ஆவிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய களைப்பு புரிந்தது.

சரியென்று அந்த ஆவிக்கு விடை கொடுத்து விட்டு யாரைக் கூப்பிடுவது என்று யோசித்தோம். கேன்சரில் இறந்து போன என் ஒன்றுவிட்ட பெரியம்மா அப்போது தான் ஞாபகத்திற்கு வந்தார். எனக்கு அவருடன் (உயிரோடு இருந்த போது)பேசிய ஞாபகம் இல்லை! இப்போது முயற்சி செய்தோம். எல்லோரிடமும் பேசினார்.

பிறகு காந்தி தாத்தா! நேரு மாமா . . . இறந்து போனதாய் தெரிந்த அனைவரையும் கூப்பிட்டோம்.
கூப்பிட்ட அனைவரும் வந்தார்கள். அல்லது வந்ததாக நினைத்துக் கொண்டோம்.
கேட்ட கேள்விகள் நினைவில்லாவிட்டாலும் விரலுக்கடியில் டம்ளர் நகர்ந்தது மட்டும் ஞாபகம் இருக்கிறது.

திடீரென்று வார்டன் வருவதாய் யாரோ புரளியைக் கிளப்ப, டம்ளரை சரக்கென்று இழுத்து, கட்டங்களை பரபரவென்று அழித்து விட்டு போர்வைக்குள் சுருண்டுக் கொண்டோம். கடைசி ஆவிக்கு சரியானபடி விடை கொடுக்காதது மனதை என்னவோ செய்தது. அது அங்கேயே சுற்றியதாக ரொம்ப நாளைக்கு நம்பினோம்.

அதே போல விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது பெரியவர்களுக்கு தெரியாமல், டம்ளருக்கு பதில் ஒரு ரூபாய் காயினை (இதில் ஒற்றை விரலை மட்டுமே வைக்க முடிந்தது. அதனால் மற்றவர்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே!) வைத்து முயற்சி செய்திருக்கிறேன். தங்கையை சேர்த்துக் கொண்டேனா என்பது நினைவில் இல்லை.

தோழியின் அண்ணனிடம் ரகசியமாய் சொல்ல, பேப்பரை சிறிய உருண்டையாய் உருட்டி காசைத் தொடும்படி வைத்தாலும், காசு நகரும் என்றான். ஆனால் அதை அவனால் நிரூபிக்க முடியவில்லை.

இப்போது போல இருந்தால், அந்த நிகழ்வை மேலும் ஆராய்ந்திருப்பேன். சைக்கோ சொமாட்டிக் என்று ஏதாவது காரணம் கண்டுபிடித்திருப்பேன். அப்போது ஆவிகளின் மேல் நம்பிக்கை இருந்தது.

ஆனால் பத்தாவதில் ஆவி சொன்ன மார்க்கை விட ஐந்து மார்க் அதிகம் பெற்றேன். ஹாஸ்டல் வாழ்கை அந்த வருடத்தோடு முடிந்ததால் தோழிகளுடையதைப் பற்றி தெரியவில்லை.

இப்போது ஆவிகளின் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், இதை முயன்று பார்க்க தயக்கமோ, பயமோ ஏதோவொன்று தடுக்கிறது.

17.3.11

நிறைய பின்னூட்டங்கள் பெறுவதற்கு சில யோசனைகள்

நம் பதிவுகளை யாரோ படிக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தி. படித்தவர்கள் பின்னூட்டம் இட்டால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் பின்னூட்டமே இடாதவர்களை காலரைப் பிடித்து இழுத்தா போட வைக்க முடியும்? சிலருக்கு என்னதான் கஷ்டப்பட்டு எழுதினாலும் spam கமெண்ட் கூட கிடைப்பதில்லை. என்ன செய்வது?

இப்படி சில முயற்சிகளை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்

1.சுண்டி இழுப்பது போன்ற தலைப்புகள் கொடுக்கலாம்.
எ.கா : ‘2011ல் விஜய் முதலமைச்சர்’ என்று கிக்காக ஆரம்பித்து ‘ஆவாரா?’ என்று தினத்தந்தி பானியில் முடிக்கலாம். (அதென்னவோ விஜய்ன்னு தலைப்புல போட்டா அன்னைக்கு கவுண்ட் எகிறுது.)

2. பிரபல பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமிட்டு சந்தடி சாக்கில் நமது ப்ளாக்கையும் பிரபலப் படுத்திக் கொள்ளலாம்.

3. பின்னூட்டம் குறைவாய் இருக்கும், பிரபலமில்லாத பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்கள் நன்றியுடன் இடும் பின்னூட்டங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

4.முடிந்தால் நண்பர்களை ப்ளாக் தொடங்கச் சொல்லி ஊக்கப்படுத்தி, அவர்களின் மூலம் பின்னூட்டங்களைப் பெருக்கலாம்.

5.சும்மா இருக்கும் நேரமெல்லாம், பலன் கருதாமல், அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் இடலாம். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

6. இது போல உங்களுக்கு தெரிந்த வழிவகைகளை பின்னூட்டங்களில் சொல்லலாம்
- போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தலாம்.

7. இது எதுவுமே வர்க் அவுட் ஆகவில்லையா! நோ ப்ராப்ளம்! பிற்காலத்தில் நாம் சுஜாதா ரேஞ்சுக்கு பிரபலமாகும் போது, ‘இவரை எனக்கு முதலிலிருந்தே தெரியும்’ என்று சொல்லும் மிகப் பெரிய வாய்ப்பை அவர் (பின்னூட்டமிடாமல் செல்பவர்) இழக்கிறார். கண்டிப்பாய் பின்னால் வருந்துவார். அதை நினைத்து அவருக்காக அவரை மன்னித்து விடுவோம்.

நன்றி.

13.3.11

இனிய குழந்தைக்கு . . .சம்பவங்கள் கைமீறிப் போகும்
சிலசமயம் உன்னை
திட்டி தான் விடுகிறேன்!

அறிவுக்கு எட்டுவதை
மனத்திற்குள் போகவிடாமல்
செய்கிறது கோபம்.
அதன் தாக்கத்தால் விளையும்
மன அழுத்தத்தை
உன்மேல் சுமத்தி
கடுமையாய் தான்
பேசி விடுகிறேன்!

பிறகு தான் உணர்கிறேன்
தவறு
என்னுடையது என்பதையும்,
அது தெரிந்தும்
உன்னால் என்னை
எதிர்க்க முடியவில்லை
என்பதையும்,
இந்த உன் பலவீனத்தை
தவறாமல்
பயன்படுத்திக் கொள்கிறேன்
என்பதையும். . .


இனி இப்படி செய்வதில்லை
என்ற வைராக்கியம்
அந்த நொடி பிறக்கிறது!
இந்த முறையேனும் அதை
கண்டிப்பாய் நினைவில்
இருத்திக் கொள்வேன்!