7.4.11

தொலை(யாத)பேசி எண்கள்

அன்று விரைவு ரயிலில் சென்றுக் கொண்டிருந்தேன். ரயிலினுள் நின்றுக்கொண்டிருந்த நேரத்தில் எதையாவது செய்ய மனம் பரபரத்தது.

கூட்ட நெரிசல். இந்தக் கூட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு என்னவோ போல இருந்தது. செல்போனில் கேம் விளையாடி பழக்கமில்லை. அதனால் அதனுள் இருக்கும் விஷயங்களை ஆராயலாம் என்று கொஞ்சம் தோண்டினேன். ‘contacts’ பகுதி சிக்கியது.

சற்று நேரம் கிளறிப் பார்த்ததில், தொடர்பிலிருக்கும் எண்களை விட தேவைற்ற எண்களையே அதிகம் பாதுகாத்து வைத்திருக்கிறேன் என்று தெரிந்தது.

என்னிடமிருந்த எண்களை கீழ்கண்ட வகைகளாக என்னால் பகுக்க முடிந்தது.

1.என் தோழிகள் மற்றும் உறவினர்களின் எண்கள்

2.என் வேலை தொடர்பிலான எண்கள்

3.நான் வேலைக்கு விண்ணப்பித்த போது அது சம்பந்தமாய் சேகரித்து வைத்த எண்கள். எப்போதாவது தேவைப்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் இன்னமும் போனிலேயே இருக்கிறது.

4.அத்தியாவசியத் தேவைகளுக்காக பதிவு செய்யப்பட்ட எண்கள். அதாவது போலீஸ், Gas, ஸ்டார் ஹப் போன்றவற்றின் எண்கள்.

5.தொடர்பிலில்லாத மற்றும் தொடர்பை வெட்டிக் கொண்டவர்களின் எண்கள். இவற்றை ஏன் இன்னமும் வைத்திருக்கிறேன் என்று புரியாமல் வைத்திருக்கிறேன்.

இவற்றுடன்

அ. நான்கு மாதங்களுக்கு முன் இண்டர்வ்யூவிற்கு பலமுறை என்னை அழைத்து வரசொல்லிவிட்டு, தானும் வராமல் இன்று வரை அதற்கான காரணத்தையும் சொல்லாமல் விட்ட ஜேனட்டின் நம்பரையும்

ஆ. வாடகைக்கு அறை பார்க்க வருவதாய் சத்தியம் பண்ணிவிட்டு, வராமல் ஏமாற்றி, போன் செய்த பிறகு வரமுடியாது என்று கூறிய ஐஸ்வரியாவின் நம்பரையும், போன் செய்ததற்கு பதிலே அளிக்காத ராஜீவ் பிரசாத்தின் நம்பரையும் வைத்திருக்கிறேன்,
என்றாவது ஒரு நாள் வசமாய் மாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன்.

என் அனுபவத்தில் இது போன்ற நம்பிக்கைகள் வீண் போனதில்லை.

இவற்றில் இல்லாதது, பழைய போன் பழுதடைந்ததால் கைவிட்டு போன தோழியின் தொலைபேசி எண். அவர் என்னை அழைப்பதற்காக இன்னமும் காத்திருக்கிறேன். இந்த முறை எல்லா எண்களையும் முன்பே பத்திரப்படுத்தி விட்டேன்.