14.5.11

தேர்தலும் தலைகீழ் பூனையும்சுஜாதா தனது புதிய நீதிக்கதைகள் என்ற புத்தகத்தில் இப்படி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஒரு வயசான பூனை, சாப்பிட ஒன்றும் கிடைக்காமல் வருத்ததுடன் இருக்கிறது.
திடீரென்று அதற்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

தன் பின்னங்கால்களை சேர்த்து கட்டிக் கொண்டு ஆணியிலிருந்து தலை கீழே தொங்கினால், பூனைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பரிதாபப்பட்டு, எலிகள் கிட்டே வரும்.
அதை பிடித்து தின்றுவிட்டு மறுபடி தலைகீழே தொங்கலாம் என்று திட்டம் போடுகிறது.

திட்டப்படி கிழிந்த பனியனால் காலைக் கட்டிக் கொண்டு ஆணியிலிருந்து தொங்குகிறது.
அது பார்க்க ஒரு பை போல தோற்றமளிக்கிறது.
அதைப் பார்த்து அதிசயித்து போன ஒரு எலி தன் தலைவனிடம் ஓடிப் போய் சொல்கிறது.

எலியின் தலைவன் வந்து பார்த்துவிட்டு
" எலிகளா! நாம் எத்தனையோ பைகள் சுவற்றிலே தொங்குவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அடிப்பாகத்தில் பூனைத் தலை வைத்த பையைப் பார்த்திருக்கிறோமா?" என்ற கேள்வியை எழுப்பி அனைவரையும் எச்சரிக்கிறது.

இதற்கு அவர் சொன்ன நீதி"ஒரு முறை ஏமாந்தவர்கள் மறுமுறை ஏமாற நடுவில் இரண்டு தேர்தல்கள் கடந்திருக்க வேண்டும்"

9.5.11

பரீட்சையும் அம்மாக்களும்

இந்த பிள்ளைகளுக்கு பரீட்சை வந்தால் ய்யேயப்பா. . .
என் பரீட்சைக்குக் கூட நான் இப்படி படித்ததில்லை.
என் வாத்தியார் கத்தி கத்தி சொல்லிக் கொடுத்த போதெல்லாம்
படம் வரைந்துக் கொண்டோ, பகல்கனவு
கண்டுகொண்டோ இருந்திருக்கிறேன்.

எந்த ஆசிரியை விட்ட சாபமோ, இல்லை
அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அவமதித்த பாவமோ,
இப்போது உட்கார்ந்து ஆங்கில இலக்கணத்தையும்,
கணக்கையும் ஒழுங்காய் படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்கவில்லையென்றால் பிள்ளைகள் ஏமாற்றி விடுகிறார்கள்.

கொஞ்சம் சந்தேகமாய் பதிலைச் சொன்னாலும்
'உனக்கு ஒன்னுமே தெரியல!
என் டீச்சர் இப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க'
என்கிறார்கள்.

அதனால்அவர்கள் டீச்சர்கள் செய்யும் தவறை கண்டுபிடிக்கும் அளவுக்கு தெளிவாய் படிக்க வேண்டியிருக்கிறது.


படிக்கும் நேரமே கழிவறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்
அல்லது பசிப்பதாய், வயிறோ, தலையோ வலிப்பதாய் சொல்கிறார்கள்.
எத்தனை முறை இந்த டெக்னிக்குகளை நான் பயன்படுத்தியிருக்கிறேன்!


இப்போது படிப்பது போல அப்போது படித்திருந்தால் ஒரு ஆராய்ச்சியாளராகவோ, விஞ்ஞானியாகவோ இருந்திருப்பேன்!
(இனி தைரியமாய் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்!)
எதற்கெல்லாமோ பயிற்சி கொடுக்கிறார்கள்!
முன்பே இது போல சிறு பிள்ளைகளை வைத்து, படிப்பதற்காக செயல்முறை பயிற்சி கொடுத்திருந்தால்
இந்தியா ஒரு விஞ்ஞானியை இழந்திருக்காதோ!

நான் மட்டும் தான் இப்படி என்று நினைத்தால்
எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள்
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை உறுதி செய்கின்றன.

பிள்ளைகளுக்கு பரீட்சை நேரம் அது தான் இப்படி . . .