26.6.11

சென்னை 2011

ஒன்றரை வருடங்களுக்குப் பின் ஊருக்குச் சென்றேன்.

கண்கூசும் வெயிலில் சென்னை ஜகஜோதியாய் இருந்தது.
இடையிடையே இடியுடன் கூடிய மழையும்,
அவ்வப்போது கரண்ட் கட்டும்
பால்ய காலத்து நினைவுகளை இழுத்து வந்தன.


'ஏம்ப்பா நாம இன்னமும் சோலார் பேனல் வாங்கல?
அது இருந்தா கரண்ட் பிரச்சனை இருக்காதில்லையா?'

என்று கேட்ட பிங்கு,

'பாருங்க! பக்கத்து வீட்டுல கூட போட்டிருக்காங்க!'

என்று எங்களை இழுத்துப் போய்
டிஷ் ஆண்டனாவைக் காட்டினாள்.


பின்னாட்களில் மழை பெய்தால்
மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்து வைக்குமளவிற்கு
சென்னையுடன் ஐக்கியமாகிவிட்டாள்.

தெருவில் சாணி போடும் மாடுகளைப் பார்த்து
'இதுக்கு தான் மாட்டையெல்லாம் ஃபார்மில் வைக்கணும்' என்றாள்.


திடீரென்று 'அப்பா ரெக்ஸோனா இருக்குப்பா, ஓடிவாங்க!' என்ற கத்தலில் ஓடிச் சென்று பார்த்தால் வெறும் ஓணான்.

குழந்தைகளுக்கான சேனல்களில்


'எங்கம்மா சொல்லியிருக்காங்க பாய்ஸ்ன்னாலே ஜொள்ளு விடுவாங்கன்னு'


'எனக்கு ஒரு பாய் ஃபெரெண்ட் இல்லைன்னு கவலையாயிருக்கு'


போன்ற அறிவுப்பூர்வமான வசனங்களைக் கேட்க முடிந்தது.

பொதுவாய் பர்கரும், கேக்கும், பிட்ஸாவுமே நிகழ்ச்சிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன- இங்கேயும் சாப்பாடுக் கடையை விரித்து விட்டார்கள்.

இவற்றில் தமிழகப் பிள்ளைகள் பசை போட்டார்ப் போல ஒட்டிக் கிடக்கிறார்கள்.


ஒரு வாரம் கேபிள் டிவி. பார்த்ததில்

'நான் நினைக்கிறேன் அம்மா சமைக்கிறாங்கன்னு'

'அவ சொல்றா எங்கூட விளையாடாதேன்னு'

'நீ நினைக்கிற உனக்கு எல்லம் தெரியும்ன்னு'

என்று பிள்ளைகள் பேச ஆரம்பித்தார்கள்.

அநாவசிய நிகழ்ச்சிகளுக்குத் தடா போட்டு விட்டோம்.


சமச்ச்சீர் கல்வி படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆறாம் வகுப்புப் பிள்ளைகள், புத்தகங்களில் ஒட்டப்பட்டிருக்கும் வண்ணத்தாளுக்குப் பின்னே என்ன இருக்கிறது என்று,
வெளிச்சத்தில் அந்தத் தாளை மட்டும் வைத்து கவனமாய் படிக்கிறார்கள் .


வீட்டுக்கு வீடு கலைஞர் கொடுத்த டீ.வி. அடக்கமாய் அமர்ந்திருக்கிறது.

மிக்ஸியும், கிரைண்டரும் வரப்போகிறதாம்.

அடுத்த தேர்தலில் வி.காந்த் ஜெயித்தால்
ஃப்ரிட்ஜீம், வாஷிங் மெஷினும் கொடுப்பார்
என்று நம்புகிறேன்.

முல்லைக்கும் மயிலுக்கும் கொடுத்தவர்களை மட்டும்
வள்ளல்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த ஓரவஞ்சனையை கடுமையாய் ஆட்சேபிக்கிறேன்
.

1 comment:

ஸ்ரீராம். said...

ப்ரிட்ஜும் வாஷிங் மெஷினும் கொடுப்பவர்கள் இருக்கட்டும்...மின்சாரம் யார் தருவது என்பதுதான் தற்போதய கேள்வி...!!