23.8.11

ஃபேஸ் புக்கும் சில சந்தேக பிராணிகளும் . . .

ஃபேஸ் புக்கில் ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன்.

அவர் ரொம்ப நெருக்கமில்லாதவராக இருந்தாலும்,

தெரிந்தவராக இருப்பார்.

சரி இவரை நண்பராக்கிக் கொள்வோம் என்று முயன்றால்

அவரது பக்கத்தில் 'add friend' பட்டன் மட்டுமே ஆக்டிவ்வாக இருக்கும்!

தன்னிலை விளக்கம் கொடுக்க,

அதாவது எங்கே பார்த்தோம், எங்கே பேசினோம்

போன்ற மேலதிக தகவல்களைக் கொடுக்க

வழியே இருக்காது!

பொதுவாய் முன்பின் தெரியாதவர்களை

நானே கூட தோழராய் ஏற்றுக் கொள்ளமாட்டேன்!

அவரது ஈமெயிலோ, தொலைபேசி எண்ணோ நமக்கு தெரிந்திருக்காது!

அவரோ ஒரு தகவல் கூட அனுப்ப முடியாத அளவிற்கு

தன் பக்கத்தை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருப்பார்.

(மனித குலத்தின் மீது அவ்வளவு
நம்பிக்கை!? )

சரி அவருடைய நண்பராக இருக்க விருப்பம் தெரிவித்தால்,

நான் யாரென்றாவது விசாரிக்க முன்வருவார்

என்று நினைத்தால், நம்முடைய வேண்டுகோள்

கிணற்றில் போட்ட கல் போல அப்படியே இருக்கும்.

ஒரு சில பிரபலங்களின் பக்கங்களை பார்த்திருக்கிறேன்.

அதில் கூட இப்பேர்பட்ட தடைகள் இல்லை! நிறைகுடம்!?

இவ்வளவு பாதுகாப்பை விரும்புபவர்கள்

ஏன் ஃபேஸ் புக்கில் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சும்மா கிடைக்கிறது என்று துண்டு போட்டு பிடித்திருப்பார்களோ!

இப்பேர்பட்ட சந்தேகப் பிராணிகளின் நட்பே தேவையில்லை என்று

இப்போதெல்லாம் அதைப் போன்றவைகளுக்கு

ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்புவதே இல்லை.


15.8.11

என் தோழியே!

எனக்கென்று சில கொள்கைகள் உண்டு
அவற்றை பற்றி கவலைப் படாதே,
உன்னை பாதிக்காத வரை!

என்னால் முடிந்ததை செய்கிறேன்,
முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்!
முடியாததை, ‘முடியாது’ என்று
தானே சொல்ல முடியும்!

இதை உன்னால் புரிந்துக்கொள்ள முடிந்தால்
‘You are Great!’
திமிரென்று எண்ணினால்
‘I am Sorry’,
உன்னுடைய கருத்துகளையும்
நான் மதிக்கிறேன்!

_________________________________________________

முடிந்தால் உதவுங்கள்!

நான் e-kalappaiயில் உள்ள யூனிக்கோடு என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தட்டச்சுகிறேன்!
ஆனால் சில கணினிகளில் என் எழுத்துகள் வட்டமும் சதுரமுமாய் தெரிகின்றன!

என்னுடைய எழுத்துகள் யூனிக்கோடில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை!
இதை எப்படி கண்டுபிடிப்பது?

யூனிக் கோடில் எப்படி தட்டச்சுவது?

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள்
!

6.8.11

55 வார்த்தை கதை

இவற்றைப் பற்றிய அறிமுகம் சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து கிடைத்தது. மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!

மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் (பஞ்சுவேஷன்ஸ்)வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.


சுஜாதாவின் வரிகள் மீண்டும் இங்கே -

‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’

என்னுடைய 55-கதை முயற்சி ஒன்று மீள் பதிவாய் இங்கே . . .

வேலைச் சுமை

சுந்தரேஸ்வரன் தன் ‘டை'யைத் தளர்த்திக் கொண்டார். இவருக்காக வெளியே பலர் காத்திருந்தனர்.

இவர் புகழ் பாடவும், குறைகளை முறையிடவும் வந்திருந்தவர்களைப் பார்க்க சலிப்பாய் இருந்தது.

தனக்கிருக்கும் வேலைச் சுமைக்கு, இரண்டு யுகங்களாவது விடுமுறை தேவையென அவருக்குப் பட்டது.

இப்போது நேரமாகிவிட்டது. வாசலில் இருந்தவர்களை விலக்கி, அவசரமாய் வெளியேறினார்.

மதுரையின் குறுகிய தெருக்களை அதிவேகமாய் தன் வாகனத்தில் கடந்து கோயிலின் உள்ளே சென்றார். தீபாராதனை காட்டப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்த சுந்தரேஸ்வரனின் கழுத்திலிருந்த ‘டை’ நெளிந்தது.