24.9.11

பேராசைசிறுவயதில் கைபிடித்து
நடந்து வந்த அப்பா வேண்டும்
அந்த நேரம் தெருவோரம்
நிறைந்திருந்த மரங்கள் வேண்டும்


மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து
ஏ பி சி டி படிக்க வேண்டும்
பிரம்பெடுத்து மனதொடித்த
ஆசிரியரின் வகுப்பும் வேண்டும்


நண்பர்களுடன் விளையாடிய
வெற்றுவெளி திடலும் வேண்டும்
பேய்கதைகள் பேசிபயந்த
மின்சாரமற்ற இரவுகள் வேண்டும்


இரண்டு அறைகள் மட்டுமிருந்த
கூரை வேய்ந்த வீடு வேண்டும்
வீட்டின் மேலே படர்ந்து சென்ற
பூசணிக் கொடியும் வேண்டும்


கையிலெனக்கு வாட்ச் கட்டிய
ஜவ்வுமிட்டாய் காரன் வேண்டும்
அந்த நேரம் தலைக்கு மேலே
பறந்து சென்ற குருவி வேண்டும்


புத்தகமும் கம்ப்யூட்டரும்
வாழ்க்கையென கொண்டிருக்கும்
பிள்ளைகளுக்கு இவையனைத்தையும்
முடிந்தால் ஒருமுறை காட்டவேண்டும்

19.9.11

வீட்டுக்கு வீடு-1

Busyன்னா என்ன என்பதை இப்போது தான் பார்க்கிறேன்!
தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறது! 

இப்படியெல்லாம் பதிவு எழுதுகிறேன் என்றால் பிள்ளைகளுக்கு exam நெருங்குகிறது என்று அர்த்தம். இதற்கு நடுவே போட்டிகள் வேறு.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல நான் செய்யாததையெல்லம் பிள்ளைகளிடம் முயற்சித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்று பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது வந்த ஒரு கேள்வி

‘ஏன் knowவை ‘க்நோ’ ன்னு படிக்காம் ‘நோ’ன்னு படிக்கிறோம்?’
‘ஏன்னா, இதில k சைலெண்ட்’
‘மத்த எழுத்துகளும் இது போல சைலெண்ட்டா வருமா?’
‘ஓ வருமே!’
‘அப்ப ABCD சொல்றதுக்கு பதில் சைலெண்ட்டாவே இருக்கலாமே!’
இதுக்கு என்ன பதிலைச் சொல்லுவது?

8.9.11

சோகம் கடத்தி
பிள்ளைகளையும் அவர்தம்

பிள்ளைகளையும் 

பார்க்க முடியாத வேதனையை

நெடுந்தொடர்களைக் கொண்டு

சில மணித்துளிகள்

மறக்கிறாள் அம்மா . . .


பல்லியைப் போல

வீட்டின் சுவர்களில் 

நாடகப் பாத்திரங்களின்

பேச்சும் அழுகையும் 

ஊர்ந்தபடியே 

இருக்கின்றன எந்நேரமும் 


தொலைக் காட்சி

பெரிய கோட்டைக் கிழித்து

அவள் பிரச்சனைகளை 

சிறியதாக்கி

சோகம் கடத்துகிறது 

தற்காலிகமாய்!


7.9.11

மனம் விட்ட வார்த்தைகள்தனிமை

சில நல்ல பாடல்களைக் கேட்டு

மனம் விட்டு அழுவதற்காகவாவது

தேவைப்படுகிறது தனிமை

சிலசமயம் . . .
புதிர்

பழைய பாடல்களில்

ஏதோவொன்று இருக்கத்தான்

செய்கிறது . . .

இல்லாமல் போனால்

நான் எப்படி

இதை எழுதியிருக்க முடியும்!

6.9.11

பழசு. . .!


கணினியில் ஸ்க்ரோல் செய்து

பிறந்த வருடத்தைத்

தேடும் போதும்,


கனகாவின் அம்மாவை

அப்பா காட்டியது போல்

சூர்யாவின் அப்பாவை

மகளுக்கு காட்டும் போதும்,


கருப்பு வெள்ளை,

ஈஸ்ட்மென் கலர் படங்களை

ரசித்துப் பார்க்கும் என்னை

மகள் முறைக்கும் போதும்

வயது ஏறுவதை உணர்கிறேன்!