24.9.11

பேராசைசிறுவயதில் கைபிடித்து
நடந்து வந்த அப்பா வேண்டும்
அந்த நேரம் தெருவோரம்
நிறைந்திருந்த மரங்கள் வேண்டும்


மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து
ஏ பி சி டி படிக்க வேண்டும்
பிரம்பெடுத்து மனதொடித்த
ஆசிரியரின் வகுப்பும் வேண்டும்


நண்பர்களுடன் விளையாடிய
வெற்றுவெளி திடலும் வேண்டும்
பேய்கதைகள் பேசிபயந்த
மின்சாரமற்ற இரவுகள் வேண்டும்


இரண்டு அறைகள் மட்டுமிருந்த
கூரை வேய்ந்த வீடு வேண்டும்
வீட்டின் மேலே படர்ந்து சென்ற
பூசணிக் கொடியும் வேண்டும்


கையிலெனக்கு வாட்ச் கட்டிய
ஜவ்வுமிட்டாய் காரன் வேண்டும்
அந்த நேரம் தலைக்கு மேலே
பறந்து சென்ற குருவி வேண்டும்


புத்தகமும் கம்ப்யூட்டரும்
வாழ்க்கையென கொண்டிருக்கும்
பிள்ளைகளுக்கு இவையனைத்தையும்
முடிந்தால் ஒருமுறை காட்டவேண்டும்

4 comments:

ஸ்ரீராம். said...

பேராசைதான் உண்மையிலேயே...! மரங்களும், அப்பா கை பிடித்து நடந்த நாட்களும், ஜவ்வு மிட்டாய்க் காரனும் குருவியும்....ஆஹா....அருமை. ஆனால் பாருங்கள் மின்சாரமற்ற இரவுகளுக்கு இன்றும் பஞ்சமில்லை!

HVL said...

மிக்க நன்றி ஸ்ரீராம்!

கணேஷ் said...

யதார்த்தமான வரிகள் ..நல்லா இருக்கு) )

கபிலன் said...

ஆசைகள் கைகூட வாழ்த்துக்கள்.