29.10.11

கவிதை

பேசுவதற்கு நேரமின்றி

தோழியர் அனைவரும்
வேலை யதிகம்

கொண்டிருந்த

ஒரு மாலையில்
வேலை யெதுவும்

செய்யத் தோன்றாத

சோம்பலினிடையே
பூக்கிறது கவிதைப் பூ

15.10.11

பள்ளியில். . .கொண்டு விடும்
அம்மாவின் நினைவில்
கண்ணீர் விட்டு
தன் பொழுதின்
முதல் பகுதியையும்

ஆசிரியர் மற்றும்
நண்பர்களின் விளையாட்டில்
மனம் பதித்து 
அதன்
இடைப்பகுதியையும்

வீட்டின் நினைவு
கிளப்பிய ஏக்கத்தில்
பிற்பகுதியையும்
கழிக்கிறது
பாலர் பள்ளியில்
புதிதாய் சேர்ந்த
குழந்தை

6.10.11

எது பிரச்சனை?


நேற்று ‘பர்மாவிலிருந்து நடையாய் நடந்து  . . .’ என்ற புத்தகத்தைப் படித்தேன். எழுதியவர் பசுபதி ஐயர். இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து கால் நடையாகவே இந்தியா வந்து சேர்ந்த அவருடைய அனுபவங்கள் இந்த புத்தகத்தில். 

மனைவி பிச்சம்மா மற்றும் நான்கு குழந்தைகளுடன், இந்தியாவில் விட்டு வந்திருந்த மூத்த பிள்ளையைச் சேருவதற்கு, வேறுவழியின்றி நடந்தே வந்திருக்கிறார், பசுபதி ஐயர். 

பிப்ரவரி 1942வில் ஆரம்பித்த இவரது பயணத்தின் அனுபவங்கள் பயங்கரமானவை.

போரின் ஆரம்பக் கட்டங்களில் தன் உயிரை பலமுறை காப்பாற்றிய நாயை மற்றவர்கள் வண்டியில் ஏற்ற முடியாது என்று மறுத்தது . . . அதை கீழே இறக்கி விட்டும் அது தொடர்ந்து மூன்று மைல்களுக்கு ஓடி வந்தது . . .

வரும் வழியில் பார்த்த ஆயிரக் கணக்கான பிணங்கள். . . துணி ஆற்றைக் கடக்கும் போது அடித்துக் கொண்டு சென்றுவிட, ஒரு பிணத்தின் மீதிருந்த துணியை உருவி கட்டிக் கொண்டது . . . 

வரும் வழியில் குழந்தைகளுக்கு ஒரு வாய் கஞ்சி மட்டுமே கொடுத்துவிட்டு உணவின்றி தவித்தது . . . பின்னாட்களில் அது கூட கிடைக்காமல் சில நாட்களுக்கு தொடர்ந்து பட்டினியாய் கிடந்தது. . . அந்நேரத்தில் கீழே கிடந்த கற்களை ஏதேனும் திண்பண்டமாய் இருக்காதா என்ற நப்பாசையில் வாயில் போட்டு மென்று பார்த்தது . . .

பிள்ளைகளை ஒவ்வொருவராய் பறிகொடுத்து கடைசியாய் இந்தியாவிற்கு சில நூறு மைல்கள் இருக்கும் போது மனைவியையும் பறி கொடுத்து. . .  படிக்கும் போது மனம் கனத்துவிட்டது.

ஒன்றுமே இல்லாத சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னையும் மற்றவர்களையும்  எப்படி தொல்லைப்படுத்தியிருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றியது!