27.12.11

வெளியேற்றம்இந்த வழி வெளியேறுதல்

சற்று சிரமம்!
ஆயினும் பயமில்லை!


உங்களை சற்றே
குறுக்கிக் கொள்ளுங்கள்!


மூச்சு முட்டுகிறதா?
பிராணவாயு போதவில்லை!


மேலே பாருங்கள்
தெரிகிறேனா?


இல்லையா!
அப்படியென்றால் நீங்கள்

இன்னும் சற்று முன்னேற வேண்டும்!

உடலை மெல்ல உலுக்குங்கள்!

மெதுவாக . . .

இதோ என் கை

தெரிகிறதா?
அதைப் பிடித்துக் கொள்ளுங்கள்!


அப்படித்தான்!
அவசரமில்லை!
மெல்ல. . . மெல்ல!


இப்போது சுலபமாய் இருக்கிறதா?

அப்படியே உடலை உதறிவிடுங்கள்!
இனி ரசிக்கலாம்
இவ்வுலகை ஆவி ரூபத்தில்!

24.12.11

அஷ்டமத்தில் நான்!

எனக்கு அவ்வப்போது ராசி பலன்களில் நம்பிக்கை வந்து போகும்.

அநேகமாய் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நம்பிக்கை இருக்காது.

காரணம் அஷ்டமத்து சனி!

‘நரி இடம் போனால் என்ன!
வலம் போனால் என்ன!
மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி!’
என்று நான் பாட்டுக்கு சென்று கொண்டிருக்க,
சனிபகவான் குறுக்கே வந்தால் என்ன செய்வது?
கீழ்கண்ட வழிகளைப் பின்பற்ற முடிவு செய்திருக்கிறேன்


1) இந்த இரண்டு வருடங்களுக்கு
மேலோட்டமாய் படித்துப் பார்த்து
பலன் நன்றாயிருந்தால் தொடர்ந்து படிப்பது,
இல்லாவிட்டால் எஸ் ரா பக்கம் சென்று விடுவது.

2) ஆங்கில சீன மொழிபெயர்ப்பு ராசிபலன்களை,

எந்த மொழியானாலும் சனிபகவான் இல்லாத மொழியாக பார்த்து,

படித்துக் கொள்வது.

3)நாட்காட்டியில் போட்டிருக்கும் பலன்களைப்

 படித்து திருப்தி கொள்வது!

பெரிய பெரிய வாக்கியங்களில் உன் நேரம் சரியில்லை

என்று படிப்பதை விட ,

 'நோய்' 'நஷ்டம்' போன்ற  ஒற்றை வார்த்தை பலன்களை

எளிதாய் கடந்துவிட முடிகிறது!3.12.11

ப்ளீஸ் . . . இவர்களுக்கெல்லாம் யாராவது சொல்லிக் கொடுங்களேன்!நேற்று இரவு வசந்தத்தில் பொம்மை 2 போட்டார்கள்.
பொதுவாய் நான் இரவில் கண்விழித்து படம் பார்ப்பதில்லை, ரொம்ப நல்ல படமாய் இருந்தாலே தவிர!
என் பிள்ளைகளின் தொல்லை தாங்க முடியாமல் இரவு விழித்திருந்தேன். பயமாம்!
படம் ஆரம்பிக்கவே பதினோரு மணி ஆனது. கொடுமை!


என்ன நினைத்து படத்தை எடுத்தார்கள் என்று புரியவில்லை!
பேய் கத்தியை எடுத்துக் கொண்டு துரத்துகிறது!
குழந்தையால் கூட ஒளிந்துக் கொண்டு பேய்க்கு போக்கு காட்ட முடிகிறது!


ஹீரோ இரண்டு முறை ஆழமான கத்திக் குத்துகளைப் பெற்றுக் கொண்டு (பேயிடமிருந்து தான்) ரத்த சேதாரமின்றி, வயிற்றை கையால் பிடித்துக் கொண்டே கடைசி வரை ஓடுகிறார்!


பேய் சில நேரங்களில் fancy dress competitionக்கு செல்வது போல உடுத்தியிருக்கிறது!


படம் எடுத்தவருக்கு சில அடிப்படை விஷயங்கள் தெரியவில்லையோ என்று தோன்றுகிறது


1.     பேய், சண்டைக் காட்சியிலெல்லாம் துரத்தியபடி ஓடிவர தேவையில்லை. ஆட்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடவும் தேவையில்லை.


அவற்றிற்கு நாம் செய்வது அனைத்தும் தெரிந்திருக்கும்.


அவ்வப்போது முகத்திற்கு நேரே வந்து பயமுறுத்தி B.Pயை எகிற வைத்தோ, ஓடும் மின்விசிறியை தரை வர இறக்கியோ அல்லது மனிதர்களை காற்றில் பறக்கவிட்டு, சுவற்றில் மோதியோ கொன்றால் போதும்!
2.     பேய்க்கு மனிதரைக் கொல்ல கத்தியும் துப்பாக்கியும் தேவையில்லை! கடைக்கண்பார்வையே போதும். வேண்டுமானால் சிரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.


கொல்வதற்கு முதல் பாயிண்ட்டில் சொல்லியிருக்கும் வழிகளைப் பயன்படுத்தலாம் அல்லது ரசிகர்களையாவது கேட்கலாம்.


3.பேயை மாடியிலிருந்து கீழே தள்ளியெல்லாம் சாகடிக்க முடியாது. ஆனானப்பட்ட ரஜினியே அப்படியெல்லாம் செய்ததில்லை!


விழும் போது உடலிலிருந்து ஆவி பிரிந்து தனியே செல்வதையாவது காட்ட வேண்டும். ஆவி மன்னிப்புக் கேட்டபடியோ அல்லது தோல்வியை ஒப்புக் கொண்டோ செல்வதாக காட்டுவது கூடுதல் அழகு.


என் சந்தேகம் ஒன்றே ஒன்று தான். படம் எடுத்தவர்கள், எடுக்கும் போது பார்த்தவர்கள், நடித்தவர்கள் இவர்களில் யாருக்குமேவா இதெல்லாம் தோன்றியிருக்காது!


மொத்ததில் நேரம் சரியில்லை! தூக்கத்தை கெடுத்துக் கொண்டு பார்த்த எனக்கு தான்!