22.9.12

என் கதை . . .

கடைசியாக என் கதையை இரண்டாவது முறையாக அச்சில் பார்த்துவிட்டேன்!

வண்ணப்படத்தோடு அதைப் பார்த்த உடன் ஜன்ம சாபல்யம் கிட்டிவிட்டது.
கதையின் கடைசி வரி ஏனோ பிரசுரமாகவில்லை. இடப்பற்றாக்குறையோ என்னவோ! அல்லது அவர்களுக்கு அது தான் நன்றாய்  இருந்ததாய் தோன்றியிருக்க வேண்டும். 
எனக்கு, கதை, தரையில் கால் பாவாமல் நின்றுக் கொண்டிருப்பது போல  தோன்றியது.


 என் மறு பக்கத்தில் விரைவில் கதையை பதிவிடும் எண்ணம் இருக்கிறது.

என் கதையை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், பிரசுரித்தவர்களுக்கும், வாழ்த்திய உங்களுக்கும் மிக்க நன்றி!

19.9.12

மணியோசை

(தலைப்பிற்காக எழுதிய கவிதை)


பெருமாக்கோயில் மணியடிக்க எழுந்திருப்பேன் காலையிலே,
படுக்கையதான் மடிச்சிவச்சி பெருக்கி-கிருக்கி சுத்தம்செஞ்சா 
 
பால்கார போசுதம்பி  தன்சைக்கிள் மணியடிக்கும்.

பெறவுதான் எடம்மாறும்  என்வேலை குசினிக்குள்ள . . .
 

 பாத்திரத்த கழுவிமுடிச்சி அடுப்ப-கிடுப்ப பத்தவச்சி
சோறுபொங்கி முடிக்கும்போது ஏழுமணி சங்குபுடிக்கும்.

சுடுசோறு ஊட்டிஉன்னை  பள்ளிக்கூடம் கெளப்பிவிட

டண் டண்னு அடிச்சுபுடும் எலிமெண்டரி ஸ்கூலுமணி

 
பெறகு . . .
 கொல்லிப்பக்கம் ஓடிப்போயி  வயல்வரப்ப பார்த்துபுட்டு,
 
  அங்கங்க விட்டுகிடந்த சோலிகள முடிச்சுபுட்டு,
 
  சாப்பாட்டு மணிக்குள்ள  பள்ளிக்கூடம் வந்துடுவேன்
 
  பசியோட காத்திருக்கும்  என்ராசா உனக்காக.
 
 
பின் . . .
  கண்டகெடந்த வேலைகளை வீட்டுக்குள்ள பார்த்திடுவேன்
 
  உன்சைக்கிள்  மணிச்சத்தம் என்காதில் கேட்கும்வரை.
 
  பெருமாக்கோயில் நடையசாத்த அடிக்கபடும் மணிச்சத்தம்,
 
  நெலவபார்க்க படுத்துகிட்டு நட்சத்திரத்த எண்ணிகிட்டு
 
  பள்ளிக்கூட கதைபேசும் நம்மோட காதில்விழும்.
   
நீ படிச்சு முடிச்சுபுட்டு எஞ்சனீரா ஆனபெறவு
 
எனக்காக வாங்கிவந்த தங்கநிற கடிகாரம்
 
எம்மணிய மாத்துச்சய்யா நான்பெத்த மவராசா- நீ

ஆகாசக் கப்பலேறி கடல்கடந்து போனபின்ன,
 
கடிகாரமணி பார்த்து தொலைபேசி மணியடிக்க
 
காததீட்டி காத்திருக்கேன் ராசாஉன் குரல்கேட்க
 
நாளுக்கொரு தரமாச்சும் பேசிடையா எங்கூட!
கல்கியில் என் கதை இந்த வாரம் வந்துவிட்டது என்று திரு.ஸ்ரீ ராம் அவர்களின் மூலம் தெரிய வந்தாலும், அதைக் காணும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.இந்த வார இறுதிக்குள் அதை பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன்! பார்ப்போம்!
 
 

14.8.12

கல்கி சிறுகதைப் போட்டியும் என் கதையும்

கல்கி சிறுகதைப் போட்டி 2012 க்கு 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்பதை மனதில் கொண்டு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பினேன்.

அது பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
'சிநேகிதியே . . .' என்ற என் கதை பிரசுரமாகும் இதழுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

இது புத்தகத்தில் பிரசுரமாகும் எனது இரண்டாவது கதை. இதற்கு முன் வம்சி சிறுகதைப் போட்டியில், பிரசுரத்திற்காக எனது 'வார்த்தைகள்' தேர்ந்தெடுக்கப்பட்டது.
அது கீழே குறிப்பிடப்பட்டுள்ள எனது மற்றொரு பக்கத்தில் இருக்கிறது.

என் கதையைப் படித்து பிரசுரத்திற்கு தேர்ந்தெடுத்த ஒரு நடுவராகிய வெ. இறையன்புவின் கதைகளை நான் படித்ததில்லை.
இது என் மனசாட்சியை உறுத்தியதால் அவருடைய சிறுகதைத் தொகுப்பை நூலகத்தில் இரவல் பெற்று படித்துக் கொண்டிருக்கிறேன்.

(  பொதுவாக இந்த பக்கத்தில் மனதில் என்ன தோன்றியதோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சரி எதையாவது உருப்படியாய் செய்ய முயற்சிப்போமே என்று தொடங்கியது தான் இப்பக்கம்
http://riviyah.blogspot.sg/

இரண்டிலும் எழுதுகிறேன்.)


2.7.12

ஏமாற்றாதே ஏமாறாதே

(தலைப்பிற்காக  எழுதிய  கவிதை)

காசு பணம் தேவையில்ல

முதலுக்கேதும் நட்டமில்ல

பேச மட்டும் தெரிஞ்சா போதும்

ஏமாற்றுவது மிகச் சுலபம்


ஏர் பூட்டி உழவும் வேணாம்

தேர் ஏறி வரவும் வேணாம்

கால் மேலே கால் போட்டு

கச்சிதமாய் ஏமாற்றலாம்


வார்த்தையால பூனையையும்

ஊதி ஊதி யானையாக்கலாம்

கரிக் கட்டைய வைரமாக்கலாம்

கழுத குட்டிய குதிரையாக்கலாம்


ஒன்று மட்டும் எப்போதும்

நினைவிலேயே இருக்கோணும்

ஏமாற்ற தனி ஆளு

ஏமாற தனி ஆளு

என்றெல்லாம் கிடையாது

வீணாப்போன உலகத்துல


தான் சொன்ன பொய்களே

தன் தலைய தட்டிவிடும்

நீ விற்ற பூனையே

புல்லை விக்கும் உன்கிட்ட

குதிரையான கழுதகுட்டி

கடிச்சுபுடும் ஜாக்கிரதை


உண்மைய தான் மாத்திச் சொன்னா

அந்த நொடி ஏமாற்றலாம்

சந்தோஷமும் சிலமணி தான்

ஆனால் அதன் விளைவுகளோ

பின்தொடரும் பலவருஷம்


பின்னொருக்கா மெய்யையே

உரக்க உரக்க சொன்னாலும்

நம்பிக்கை பிறக்காது

உன்னோட வார்த்தையில


கடுகளவு ஏமாற்றினா

கடலளவு ஏமாறுவே

சொல்லுறத சொல்லிபுட்டேன்

எம்பேச்ச கேட்டுக்க

ஏமாற்ற ஆசை வந்தா

கன்னத்துல போட்டுக்க
(கவிச்சோலையில் பரிசு பெற்ற கவிதை)

11.5.12

பொம்மலாட்டம்


தொப்புள் கொடி யறுந்து

பூமிதனில் வீழ்ந்த போதே
கட்டிவைத்தேன் பொம்மையை

பாசமென்னும் கயிற்றினால் . . .

துவங்கியது பொம்மலாட்டம்

தத்தித் தாவும் வயதிலே

கயிறு இழுத்த இழுப்பிற்கு

பாடென்றால் ஆடென்றால்
பிசகின்றி செய்தது

மழலை பேசும் அப்பொம்மை !


வருடம் மேலும் செல்லவே
மென் பாசக் கயிறுடன்

மெல்ல வந்து சேர்ந்தது

கண்டிப்பான வன்கயிறு

கயிறிழுத்த திக்கெல்லாம்

பொம்மை வாகாய் சென்றது
ஓடிவிளை யாடும் நேரம்

புத்தகத்தைப் படித்தது
பாட்டு நடனம் கற்றது

போட்டிகளில் வென்றது

குருவி பார்த்து வியக்கும் வயதில்
கணினி கற்றுக் கொண்டது

தன்னைப் பார்க்க குழந்தையின்றி
குருவி அருகிப் போனது!


கயிற்றைப் பிடித்த கையின் ஆசை
பொம்மை மீது படிந்தது

தனது விருப்பம் என்னவென்று
பொம்மை அறிய மறந்தது

கயிறு போன திசையிலெல்லாம்

பொம்மலாட்டம் தொடர்ந்தது . . .


(கவிச்சோலையில் பரிசு பெற்ற கவிதை) 


6.5.12

இடைவெளிகள்
உயிரைக் கொடுக்கும் நட்பென்றாலும்


உயர் அமரக் காதலென் றாலும்


இடைவெளி யில்லா உறவென்றா லது


இறுக்கிப் பிடிக்கும் கயிறே யாகும்!அன்பின் பெயரைச் சொல்லியே அது


ஆமையின் ஓடாய் முதுகில் அமரும்,


மனதின் ஆசையை பிறர்மேல் சுமத்தும்,


 மானிடர் இயல்பை மாற்ற முனைந்திடும்.நாங்கள் இருவரும் ஒன்றே யென்று


தண்ட வாளங்கள்  பின்னி பிணைந்தால்


ரயிலும் ஓட வழிதான் ஏது?நட்பிற் கிடையே இருக்கும் இடைவெளி


நண்பனை உயர்வாய் நினைக்கச் செய்திடும்!


கணவன் மனைவிக் குள்ள இடைவெளி


புரிதலைக்  கொடுத்து குடும்பத்தை உயர்த்தும்!முதியவர் இளையவர்க் கிருக்கும் இடைவெளி


அனுபவ கருத்தைக் கேட்கச் செய்திடும்!


பெற்றோர் குழந்தைக் குள்ள இடைவெளி


பிள்ளைக் குள்ளே பெருமையாய் மலரும்!உறவுகள் நெடுநாள் நிலைத்தே நிற்க


இடைவெளிகள் தேவை மனிதருக் குள்ளே!

19.2.12

இறந்தகாலம்சில சமயம்

பாடலுக்கும் வாசனைக்கும்
இனிமை

தேவைப்படுவதில்லை . . .
அவை ஏற்படுத்தும்
நினைவுகளே
போதுமானதாய் இருக்கிறது!

29.1.12

ஏக்கம்கடந்த கால நிகழ்வு,

பல் பிடுங்கப்பட்ட பாம்புபோல

கடுஞ்சொற்களைத் தொலைத்து

எரிச்சலைக் கழித்து

வலியை இழந்து

பின் தன்னை

இதமாய் ஒளியேற்றிக் கொண்டு

மிருதுவாய் மனக்கண்ணில் தோன்றி

மறுபடியும்

அந்த நிகழ்விற்குள் சென்று

வாழ்ந்து பார்க்கும்

நிறைவேறா ஆசையை ஏற்படுத்துகிறது