11.5.12

பொம்மலாட்டம்


தொப்புள் கொடி யறுந்து

பூமிதனில் வீழ்ந்த போதே
கட்டிவைத்தேன் பொம்மையை

பாசமென்னும் கயிற்றினால் . . .

துவங்கியது பொம்மலாட்டம்

தத்தித் தாவும் வயதிலே

கயிறு இழுத்த இழுப்பிற்கு

பாடென்றால் ஆடென்றால்
பிசகின்றி செய்தது

மழலை பேசும் அப்பொம்மை !


வருடம் மேலும் செல்லவே
மென் பாசக் கயிறுடன்

மெல்ல வந்து சேர்ந்தது

கண்டிப்பான வன்கயிறு

கயிறிழுத்த திக்கெல்லாம்

பொம்மை வாகாய் சென்றது
ஓடிவிளை யாடும் நேரம்

புத்தகத்தைப் படித்தது
பாட்டு நடனம் கற்றது

போட்டிகளில் வென்றது

குருவி பார்த்து வியக்கும் வயதில்
கணினி கற்றுக் கொண்டது

தன்னைப் பார்க்க குழந்தையின்றி
குருவி அருகிப் போனது!


கயிற்றைப் பிடித்த கையின் ஆசை
பொம்மை மீது படிந்தது

தனது விருப்பம் என்னவென்று
பொம்மை அறிய மறந்தது

கயிறு போன திசையிலெல்லாம்

பொம்மலாட்டம் தொடர்ந்தது . . .


(கவிச்சோலையில் பரிசு பெற்ற கவிதை) 


6.5.12

இடைவெளிகள்
உயிரைக் கொடுக்கும் நட்பென்றாலும்


உயர் அமரக் காதலென் றாலும்


இடைவெளி யில்லா உறவென்றா லது


இறுக்கிப் பிடிக்கும் கயிறே யாகும்!அன்பின் பெயரைச் சொல்லியே அது


ஆமையின் ஓடாய் முதுகில் அமரும்,


மனதின் ஆசையை பிறர்மேல் சுமத்தும்,


 மானிடர் இயல்பை மாற்ற முனைந்திடும்.நாங்கள் இருவரும் ஒன்றே யென்று


தண்ட வாளங்கள்  பின்னி பிணைந்தால்


ரயிலும் ஓட வழிதான் ஏது?நட்பிற் கிடையே இருக்கும் இடைவெளி


நண்பனை உயர்வாய் நினைக்கச் செய்திடும்!


கணவன் மனைவிக் குள்ள இடைவெளி


புரிதலைக்  கொடுத்து குடும்பத்தை உயர்த்தும்!முதியவர் இளையவர்க் கிருக்கும் இடைவெளி


அனுபவ கருத்தைக் கேட்கச் செய்திடும்!


பெற்றோர் குழந்தைக் குள்ள இடைவெளி


பிள்ளைக் குள்ளே பெருமையாய் மலரும்!உறவுகள் நெடுநாள் நிலைத்தே நிற்க


இடைவெளிகள் தேவை மனிதருக் குள்ளே!