2.7.12

ஏமாற்றாதே ஏமாறாதே

(தலைப்பிற்காக  எழுதிய  கவிதை)

காசு பணம் தேவையில்ல

முதலுக்கேதும் நட்டமில்ல

பேச மட்டும் தெரிஞ்சா போதும்

ஏமாற்றுவது மிகச் சுலபம்


ஏர் பூட்டி உழவும் வேணாம்

தேர் ஏறி வரவும் வேணாம்

கால் மேலே கால் போட்டு

கச்சிதமாய் ஏமாற்றலாம்


வார்த்தையால பூனையையும்

ஊதி ஊதி யானையாக்கலாம்

கரிக் கட்டைய வைரமாக்கலாம்

கழுத குட்டிய குதிரையாக்கலாம்


ஒன்று மட்டும் எப்போதும்

நினைவிலேயே இருக்கோணும்

ஏமாற்ற தனி ஆளு

ஏமாற தனி ஆளு

என்றெல்லாம் கிடையாது

வீணாப்போன உலகத்துல


தான் சொன்ன பொய்களே

தன் தலைய தட்டிவிடும்

நீ விற்ற பூனையே

புல்லை விக்கும் உன்கிட்ட

குதிரையான கழுதகுட்டி

கடிச்சுபுடும் ஜாக்கிரதை


உண்மைய தான் மாத்திச் சொன்னா

அந்த நொடி ஏமாற்றலாம்

சந்தோஷமும் சிலமணி தான்

ஆனால் அதன் விளைவுகளோ

பின்தொடரும் பலவருஷம்


பின்னொருக்கா மெய்யையே

உரக்க உரக்க சொன்னாலும்

நம்பிக்கை பிறக்காது

உன்னோட வார்த்தையில


கடுகளவு ஏமாற்றினா

கடலளவு ஏமாறுவே

சொல்லுறத சொல்லிபுட்டேன்

எம்பேச்ச கேட்டுக்க

ஏமாற்ற ஆசை வந்தா

கன்னத்துல போட்டுக்க
(கவிச்சோலையில் பரிசு பெற்ற கவிதை)