19.9.12

மணியோசை

(தலைப்பிற்காக எழுதிய கவிதை)


பெருமாக்கோயில் மணியடிக்க எழுந்திருப்பேன் காலையிலே,
படுக்கையதான் மடிச்சிவச்சி பெருக்கி-கிருக்கி சுத்தம்செஞ்சா 
 
பால்கார போசுதம்பி  தன்சைக்கிள் மணியடிக்கும்.

பெறவுதான் எடம்மாறும்  என்வேலை குசினிக்குள்ள . . .
 

 பாத்திரத்த கழுவிமுடிச்சி அடுப்ப-கிடுப்ப பத்தவச்சி
சோறுபொங்கி முடிக்கும்போது ஏழுமணி சங்குபுடிக்கும்.

சுடுசோறு ஊட்டிஉன்னை  பள்ளிக்கூடம் கெளப்பிவிட

டண் டண்னு அடிச்சுபுடும் எலிமெண்டரி ஸ்கூலுமணி

 
பெறகு . . .
 கொல்லிப்பக்கம் ஓடிப்போயி  வயல்வரப்ப பார்த்துபுட்டு,
 
  அங்கங்க விட்டுகிடந்த சோலிகள முடிச்சுபுட்டு,
 
  சாப்பாட்டு மணிக்குள்ள  பள்ளிக்கூடம் வந்துடுவேன்
 
  பசியோட காத்திருக்கும்  என்ராசா உனக்காக.
 
 
பின் . . .
  கண்டகெடந்த வேலைகளை வீட்டுக்குள்ள பார்த்திடுவேன்
 
  உன்சைக்கிள்  மணிச்சத்தம் என்காதில் கேட்கும்வரை.
 
  பெருமாக்கோயில் நடையசாத்த அடிக்கபடும் மணிச்சத்தம்,
 
  நெலவபார்க்க படுத்துகிட்டு நட்சத்திரத்த எண்ணிகிட்டு
 
  பள்ளிக்கூட கதைபேசும் நம்மோட காதில்விழும்.
   
நீ படிச்சு முடிச்சுபுட்டு எஞ்சனீரா ஆனபெறவு
 
எனக்காக வாங்கிவந்த தங்கநிற கடிகாரம்
 
எம்மணிய மாத்துச்சய்யா நான்பெத்த மவராசா- நீ

ஆகாசக் கப்பலேறி கடல்கடந்து போனபின்ன,
 
கடிகாரமணி பார்த்து தொலைபேசி மணியடிக்க
 
காததீட்டி காத்திருக்கேன் ராசாஉன் குரல்கேட்க
 
நாளுக்கொரு தரமாச்சும் பேசிடையா எங்கூட!
கல்கியில் என் கதை இந்த வாரம் வந்துவிட்டது என்று திரு.ஸ்ரீ ராம் அவர்களின் மூலம் தெரிய வந்தாலும், அதைக் காணும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.இந்த வார இறுதிக்குள் அதை பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன்! பார்ப்போம்!
 
 

5 comments:

அப்பாதுரை said...

பாசம் கொஞ்ச வைக்கும் பந்தம் கெஞ்ச வைக்கும்.
நினைவூட்டிய வரிகள் நன்று.

ஸ்ரீராம். said...

கவிதை அருமை. நீங்கள் சென்னையில் இல்லையா இப்போது? நடுவில் இந்தியா வந்திருந்தீர்கள் போலும். சிங்கையில் இருக்கிறீர்களோ? உங்கள் கதை வெளிவந்துள்ள, என்னிடம் உள்ள, கல்கியை பத்திரமாக வைத்திருக்கிறேன். தேவைப் பட்டால், எப்போது, எப்படி வேண்டுமோ பெற்றுக் கொள்ளலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல இருக்குங்க... கல்கியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்...

HVL said...

மிக்க நன்றி அப்பாதுரை, தனபாலன்.

@ ஸ்ரீ ராம்

மிக்க நன்றிங்க! கதை அனுப்பிய நேரம் சென்னையில் இருந்தேன்!

லிட்டில் இந்தியா போய் வாங்க வேண்டும். வார இறுதியில் வாங்கிவிடுவேன். Thankyou very much!

கோமதி அரசு said...

காததீட்டி காத்திருக்கேன் ராசாஉன் குரல்கேட்க

நாளுக்கொரு தரமாச்சும் பேசிடையா எங்கூட!//

தாய்மையின் ஏக்கம் சொல்லும் கவிதை அருமை.